அரியணையில் அமர்ந்த சிறுவன் - பாபர் | கல்லறைக் கதைகள் 14

அரியணையில் அமர்ந்த சிறுவன் - பாபர் | கல்லறைக் கதைகள் 14
Updated on
3 min read

ரண்மனையின் உள்ளே சயன அறையில் உள்ள படுக்கையில் கடும் காய்ச்சலில் படுத்துக்கொண்டிருக்கிறான் மகன். மகனின் நிலை கண்டு கண்ணில் நீர் வழியப் படுக்கையின் அருகே நின்று கொண்டிருக்கிறார் தந்தை. ராஜ வைத்தியர்கள் எவ்வளவோ போராடியும் காய்ச்சல் குறையவில்லை. காரணம் தெரியவில்லை.
கடவுள் ஒருவரால்தான் தன் மகனைக் காப்பாற்ற முடியும் என்று, கடவுளிடம் மனதுக்குள் மன்றாடிக் கொண்டிருந்த தந்தையிடம் வந்த முஸ்லிம் துறவி, “அரசே… தங்களிடம் உள்ள பொருள்களில் விலை உயர்ந்த பொருள் ஏதாவது ஒன்றை விட்டுக் கொடுத்தால், தங்கள் மகன் பிழைக்க வாய்ப்புண்டு…” என்றார்.

வெகுநேரம் சிந்தனையில் இருந்த தந்தையின் முகத்தில் தெளிவு. எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு, மகனின் படுக்கைக்கு அருகே வந்தார். ரொம்ப நேரம் தியானத்தில் இருந்தார். கடவுளிடம் வேண்டினார். “இறைவனே! என்னிடம் உள்ளதிலேயே விலை மதிப்பற்றதாக நான் நினைப்பது என் உயிரைத்தான். என் உயிரை எடுத்துக்கொள், என் மகனைக் காப்பாற்று” என்று மனமுருகப் பிராத்தனை செய்தார்.

அப்போதுதான் நடந்தது அந்த அற்புதம். அந்தத் தந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சல் ஏறிக்கொண்டிருந்தது. மகனுக்கோ கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சல் இறங்கிக்கொண்டிருந்தது. அந்தத் தந்தை, இந்தியாவில் முகலாய ஆட்சிக்கு வித்திட்ட பாபர். மகன், ஹுமாயூன்.


இது கற்பனைக் கதையல்ல. பாபர் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட நிஜம். பாபர் 14ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் இருந்த தைமூரியப் பேரரசை உருவாக்கிய தைமூரின் நேரடிப் பரம்பரையில் வந்த உமர் ஷேக் மிர்சா என்கிற சிற்றரசனுக்கும் பொ.ஆ. (கி.பி) 13ஆம் நூற்றாண்டில் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய பேரரசான மங்கோலியப் பேரரசை உருவாக்கிய செங்கிஸ்கான் வழியில் வந்த தாய்க்கும் பிறந்தவர்தான் பாபர் எனப்படும் சாகிருதீன் பாபர் அல்லது சாகிருதீன் முகமது பாபர்.

நாட்டை ஆண்ட சிறுவன்: தற்கால உஸ்பெகிஸ்தானில் உள்ள பெர்கானா பள்ளத்தாக்கில் உள்ள அண்டிஜான் என்னும் நகரத்தில் 1483ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பாபர் பிறந்தார். 1494 இல் பாபரின் தந்தை உமர் ஷேக் மிர்சா அவரது அரண்மனை மாடியில் இருந்து கால் தவறி விழுந்து இறந்து விடவே, பர்கானா என்கிற சிற்றரசின் பொறுப்பை பாபர் ஏற்றுக்கொண்டார். அப்போது பாபருக்கு 11 வயது!

சிறுவனைச் சுலபமாக வென்றுவிடலாம் என்று படையெடுத்து வந்த அண்டை நாட்டுச் சிற்றரசர்களை வென்று, சின்னஞ்சிறு வயதிலேயே தன் வீரத்தை நிலை நாட்டினார் பாபர். அதோடு நின்றுவிடாமல், 13 வயதில் சாமர்கண்ட் நகரையும் கைப்பற்றினார். சாமர்கண்ட் நகரம் ரொம்ப நாள் அவர் வசம் இல்லை. அந்த நகரில் திடீரெனத் தோன்றிய பஞ்சத்தால் மக்களின் செல்வாக்கை இழந்ததோடு, சாமர்கண்ட் நகரையும் இழந்தார் பாபர். அதே சமயம் அண்டை நாட்டு அரசர்களின் சூழ்ச்சியால் தனது சொந்த நாடான பர்கானாவையும் இழந்தார்.

பின்னர் சில நாள்களிலேயே ஒரு சிறு படையைத் திரட்டி பர்கானாவைக் கைப்பற்றினார். ஆப்கானிஸ்தானில் காபூல் மன்னன் திடீரென இறந்துவிடவே, சரியான வாரிசு இல்லாத காரணத்தால் அந்நாட்டை பாபர் கைப்பற்றத் திட்டமிட்டார். வெறும் 200 பேர் கொண்ட சிறு படையுடன் காபூலை நோக்கிப் புறப்பட்டார். போகும் வழியில் பாபரின் தன்னம்பிக்கையைக் கண்டு வழிநெடுகிலும் உள்ள பல கிராமங்களிருந்து இளைஞர்கள் வந்து சேர்ந்து கொண்டனர். கி.பி 1504 இல் 22 வயதில் காபூல் அரியணையில் அமர்ந்தார் பாபர்.

இந்தியா மீது படையெடுப்பு: அடுத்து சீனாவை நோக்கிச் செல்லலாமா என்று யோசனையில் இருந்த பாபரின் கவனத்தை இந்தியாவை நோக்கித் திரும்பவைத்தது விதி. அப்போது இந்தியாவில் இப்ராகிம் லோடி ஆட்சி புரிந்துகொண்டிருந்தார். லோடியின் கொடுங்கோல் ஆட்சியில் மக்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தனர். இப்ராகிம் லோடியை வீழ்த்த தௌலத்கான் என்பவரிடமிருந்து, ‘எங்களுக்கு உதவ முடியுமா?’ என்று ஒரு கடிதம் வந்து சேர்ந்தது பாபரின் கைகளுக்கு. இதுதான் தக்க சமயம் என்றெண்ணி பெரும் படையோடு புறப்பட்டார் பாபர்.


உதவி செய்ய வரும் பாபர் நமக்கொரு உபத்திரவமாக மாறிவிடுவாரோ என்று பயந்து மனம் மாறிய தௌலத்கான் சில சிற்றரசர்களை ஒன்று சேர்த்து பாபருக்கு எதிராகப் போரிட்டான். 1525 டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற போரில் அனுபவமும் ஆவேசமும் கொண்ட பாபரின் படைக்கு முன் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இவர்களை வென்ற வீரமுகத்தொடு டெல்லியை நோக்கிப் புறப்பட்டது பாபரின் படை.

1526ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி. டெல்லி சுல்தான் இப்ராகிம் லோடியின் தலைமையில் நுாற்றுக்கணக்கான யானைகள் மீது வில்லேந்திய வீரர்களும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட குதிரை வீரர்களும் பாபரை எதிர்த்து வரிசை கட்டி நின்றனர். பாபர் படையில் இருந்த மொத்த வீரர்களின் எண்ணிக்கை வெறும் 12 ஆயிரம் மட்டுமே.

டெல்லியில் பாபரின் படை இப்ராகிம் லோடியின் படையை பானிபட் என்கிற இடத்தில் எதிர்கொண்டது. சரித்திரப் புகழ் வாய்ந்த பானிபட் போர் தொடங்கியது. இந்தப் போரில் பாபரின் படை அபார வெற்றி பெற்றது. பானிபட் போர் முடிந்த கையோடு பாபரின் மகன் ஹுமாயூன் தலைமையில் ஒரு படை ஆக்ராவைக் கைப்பற்றியது. இந்த நேரத்தில்தான் உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரம் ஹுமாயூன் கைகளுக்கு வந்தது.

(தொடரும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in