

தினசரி கடந்துசெல்லும் பகுதிகளில் மறைந்து கிடக்கும் மாமணிகளையும், நெருங்கிச் சென்று அருமையை உணராதவரைப் பல புதையல்களின் அருமையையும் நாம் முழுமையாக உணர்ந்து கொள்வதில்லை. இந்தியாவின் முதல் நவீன நகரமாக ஆங்கிலேயர்களால் அச்சாரமிடப்பட்ட சென்னை ஒரு வாழும் புதையல்.
அதன் ஆச்சரியங்களை எஸ்.முத்தையா, வி.ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் அவ்வப்போது ஒரு கைப்பிடி அளவு நமக்கு எடுத்துக்காட்டினாலும், இன்னும் வெளியே காட்டாத ஆச்சரியங் களை அது தன்னுள் புதைத்தே வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட அரிய புதையல்கள் அடங்கிய ஒரு பேழையைப் போல் நமக்கு அறியத் தருகிறது Chennai-to-Madras நூல்.
மனிதத் தலைகளே இல்லாத அண்ணா சாலை, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு போன்றவற்றை நிஜத்தில் தரிசித்த நாள்கள் அவை. கோவிட் பெருந்தொற்று பொதுமுடக்கத்தின்போது அப்படி மாறிய சென்னையின் அடையாளச் சின்னங்களை ஒரு காட்சி ஆவணமாக மாற்றியுள்ளார் உலகப் புகழ்பெற்ற தமிழ் ஒளிப்படக் கலைஞர் எல்.ராமச்சந்திரன். அனைத்தும் கறுப்புவெள்ளையின் காலத்தால் அழிக்க முடியாத சித்திரங்களாக இந்தப் படங்களில் நிலைபெற்று விளங்குகின்றன.
அடிப்படையில் ஒரு ஃபேஷன் ஒளிப்படக் கலைஞரான ராமச்சந்திரனின் ஒளிப்படங்கள் சர்வதேச இதழ்களான வோக், மேக்சிம், ஜி.க்யு., பிளேபாய் உள்ளிட்டவற்றில் பிரசுரமாகியுள்ளன. இந்த முறை அவருக்கு மாடலாகக் காட்சி கொடுத்திருப்பது சென்னை. மாடல்கள் புதுப்புது உடைகளை அணிவதுபோல், ஒவ்வொரு படத்திலும் தன் மற்றொரு பரிமாணத்தை அவர் வழியாக நமக்குக் காட்டுகிறது சென்னை.
இந்த நூலை வைத்துக்கொண்டு சென்னையின் நினைவுச்சின்னங்கள், வரலாற்றுக் கட்டிடங்கள் ஒவ்வொன்றையும் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அனைத்தையும் தேடிச் சென்று ஆவணமாக்கியுள்ளார் ராமச்சந்திரன். சமீப ஆண்டுகளில் இடமாற்றம், அடையாள மாற்றம் கண்டுவிட்ட காந்தி சிலை, கலங்கரை விளக்கம், எழும்பூர் மியூசியம் அரங்கம் போன்றவற்றின் பழைய நிலையையும்கூட இதில் பார்க்க முடிகிறது.
அன்றைய சென்னையின் மையப்பகுதியான கடற்கரை சாலையில் நாட்டில் தொடங்கப்பட்ட முதல் வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, ஜிபிஓ எனப்படும் ஜெனரல் போஸ்ட் ஆபிஸ், சென்னையின் பல்வேறு கடற்கரைப் பகுதிகள் என முடிவில்லாமல் நீளுகின்றன இந்தப் படங்கள். பறவை பார்வையில் அமைந்த சென்னையின் பல அரிய பகுதிகள், கட்டிடங்களின் படங்களும் வியப்பூட்டுகின்றன.
தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் ‘மிளிரும் தமிழ்நாடு' திட்டத்தின் கீழ் இந்த நூலை வெளியிட்டுள்ளது. உலக அளவிலும் தேசிய அளவிலும் சென்னையின் பெருமைகளை உரக்கக் கூறும் சிறந்த ஒளிப்படப் புத்தகமாக இது திகழும்.
சென்னை டு மெட்ராஸ்,
எல்.ராமச்சந்திரன்,
வெளியீடு: தமிழ்நாடு பாடநூல்,
கல்வியியல் பணிகள் கழகம்