

நண்பர் ஒருவர் பத்து ஆண்டுகளாகத்தன் மகனுக்குப் பொருத்தமான பெண்ணைத் தேடிக்கொண்டி ருந்தார். எதிர்பாராத ஒரு கணத்தில் எல்லாம் கூடிவந்து, ஒரே வாரத்தில் திருமணம் முடிவாகிவிட்டது. அதே மாதத்தில் மயிலம் கோயிலில் திருமணத்தை நடத்திவைக்கும் ஏற்பாடுகளில் இறங்கிவிட்டார்.
குறிப்பிட்ட நாளில் கோயிலுக்குப் புறப்பட்ட அவர்களுடைய வாகனத்திலேயே நானும் சேர்ந்து கொண்டேன். கோயில் மண்டபக்கூடம் பத்துக்கும் மேற்பட்ட சதுரங்களாகப் பிரிக்கப்பட்டு, திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நண்பருக்கு ஒதுக்கப்பட்ட வரிசை எண்ணை அழைப்பதற்கு இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும். ஒருவிதத் தொழில் நேர்த்தியோடு திருமணம் நடந்தேறும் வேகத்தைப் பார்க்கப் பார்க்க வியப்பாக இருந்தது.
ஒவ்வொரு சதுரமாக வேடிக்கை பார்த்தபடி கூடத்தைச் சுற்றிவந்தேன். பிறகு கூடத்துக்கு வெளியே புத்தாடைக் கோலத்துடன் விளையாடி மகிழ்ந்த சிறுவர், சிறுமியரையும் வேடிக்கை பார்த்தேன். யாரோ ஒருவர் ஆற்றிய உரை ஒலிபெருக்கி வழியாக எங்கெங்கும் நீக்கமற ஒலித்தபடி இருந்தது.
“இந்தக் கோயில்ல முருகனுக்கு வாகனமா நிக்கிற மயில் வேற யாருமில்லை, அவரால கொல்லப்பட்ட சூரபத்மனேதான். உயிர் பிரியறதுக்கு முன்னால முருகன்கிட்ட அவன் வேண்டிகிட்டான். முருகன் பெரிய கருணாமூர்த்தி இல்லையா? எதிரியா இருந்தாலும் அவன் மேல இரக்கப்பட்டு, அவனை மயிலா மாத்தி தனக்குப் பக்கத்திலயே வச்சிகிட்டார்.”
ஒரு பக்கம் அந்தக் கதையைக் கேட்டபடி கோயில் உச்சியை அண்ணாந்து பார்த்தேன். இளம்காலை வெளிச்சம் கலசத்தில் பட்டுக் கண்களைக் கூசவைத்தது. அந்தக் கலசத்தைப் பார்த்தபடியே நான் கோயிலைச் சுற்றி நடக்கத் தொடங்கினேன். குளிர்ந்த காற்று உடலைத் தழுவியது.
உரையின் ஒலியும் பின்தொடர்ந்து வந்தது. ஒரு திருப்பத்தில் கோயிலில் இருந்து தொலை வில் விரிந்திருக்கும் குன்றின் பச்சைவெளியில் ஒரு மயில் நின்றிருப்பதைப் பார்த்தேன். அதன் நீலக்கழுத்து மின்னியது. யாருமே இல்லாத அந்த வெளியில் அந்த மயில் சில கணங்கள் தோகையை விரித்துத் திரும்பியது. அந்தக் காட்சியில் மனதைப் பறிகொடுத்து அப்படியே நின்றுவிட்டேன்.
எவ்வளவு நேரம் நின்றிருந்தேன் என்றே தெரியவில்லை. திடீரென “முருகனுக்கு அரோகரா” என்று அருகில் ஒலித்த குரலைக் கேட்ட பிறகே திரும்பினேன். மெலிந்த தோற்றமுள்ள ஒருவர் ஈரமான வேட்டியுடன் அங்கப்பிரதட்சணம் வந்தார். அவரைப் போலவே ஈரமான உடையோடு இரண்டு சிறுவர்கள் அவரைத் தொடர்ந்து அடிமேல் அடிவைத்து நடந்தபடி, அவ்வப்போது விலகிச் செல்லும் அவருடைய வேட்டியைச் சரி செய்தபடி வந்தனர். இரட்டையர் என்னும் எண்ணம் ஏற்படும் வகையில் இருவருக்கும் ஒரே மாதிரியான முக அமைப்பு. ஒரே மாதிரியான உடல்வாகு.
அழுத கண்களோடு அந்தச் சிறுவர்கள் எழுப்பிய அரோகரா முழக்கத்தைக் கேட்கக் கேட்க நெஞ்சு பதறியது. மனபாரத்துடன் நான் அந்தச் சிறுவர்களைப் பார்த்தபடியே நின்றி ருந்தேன். ஒரு கணம்கூடச் சிறுவர்களின் பார்வை அக்கம்பக்கம் திரும்பவில்லை.
குனிந்த தலை நிமிராமல் தம் கடமையிலேயே மூழ்கியிருந்தனர். என் பெயரைச் சொல்லி அழைப்பதைக் கேட்ட பிறகுதான் நான் சுயநினைவுக்கு வந்தேன். அதற்குள் அவர் எனக்கு அருகில் வந்துவிட்டார். “என்னாச்சு உங்களுக்கு? எவ்ளோ நேரமா உங்களைக் கூப்பிட்டுட்டே இருக்கேன் தெரியுமா? எல்லாரும் தேடறாங்க. நமக்கு ஸ்லாட் கொடுத்துட்டாங்க” என்றார்.
அவரோடு நடந்தேன். எங்களுக்காக ஒதுக்கிய சதுரத்தில் மண மக்கள் அமர்ந்திருந்தனர். மணமக்களின் பெற்றோரும் நண்பர்களும் அவர்களைச் சுற்றி நின்றிருந்தனர். நானும் அவர்களோடு சேர்ந்து நின்றுகொண்டேன். மந்திர முழக்கத்துடன் சடங்குகள் ஒவ்வொன்றாக நடந்தேறின. கெட்டிமேள ஓசை முழங்க, திருமணம் இனிதே நடந்தேறியது. அந்தச் சதுரத்திலிருந்து நாங்கள் வெளியேறியதும் இன்னொரு ஜோடி உள்ளே சென்றது.
மணமகளின் பெற்றோர் மணமக்களை ஆல யத்துக்குள் அழைத்துச் சென்றனர். நாங்களும் அவர்களைச் சுற்றி நின்றுகொண்டு கைகூப்பி நின்றோம். திடீரென அங்கப்பிரதட்சணம் செய்த மனிதரின் முகம் நினைவுக்கு வந்துவிட்டது. கருவறையின் முன் நின்றிருக்கும் வரிசையில் அவர் முகமோ, அந்தச் சிறுவர்களின் முகமோ தென்படுகிறதா என ஆவலோடு தேடிப் பார்த்தேன். சூழ நின்றிருந்த நூற்றுக்கணக்கான முகங்களும் ஒருகணம் அவர்களாகவே தெரிந் தன. மறுகணமே வேறாகத் தெரிந்து குழப்பின.
கோயிலை விட்டு வெளியே வருவதற்கு வெகுநேரம் கடந்துவிட்டது. சிறிது தொலைவில் ஒரு சிறிய உணவுக்கூடத்தில் சிற்றுண்டி வழங்கினார்கள். நான் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் கோயிலுக்குச் சென்றேன். ஒரு முழுச் சுற்று சுற்றிய பிறகும் அவர்கள் தென்படவில்லை. நேரம் போய்க்கொண்டே இருந்தது. கண்டறிய முடியவில்லையே என்கிற இயலாமை உணர்வுடன் நடந்தபோது, படிக்கட்டில் அவர்கள் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். அழுது களைத்த கண்கள். துயரம் தேங்கிய பார்வை.
நான் மெதுவாகப் படியேறி அவர்களுக்கு அருகில் நின்றேன். அவர்கள் என்னை ஒருகணம் ஏறிட்டுப் பார்த்தனர். “அங்கப்பிரதட்சணம் செஞ்சதைப் பார்த்தேன்…” என்று மட்டும் சொல்லிவிட்டு நிறுத்தினேன். “நீங்க யாருனு தெரியலையே?” என்று இழுத்தார். “நான் ஒரு கல்யாணத்துக்கு வந்திருந்தேன்…” என்று தொடங்கி, பேச்சு வராமல் அப்படியே நிறுத்தினேன்.
பழங்கள், தேங்காய், இனிப்பு, முறுக்கு பொட்டலங்கள் வைத்திருந்த தாம்பூலப்பையை ஒரு சிறுவனிடம் கொடுத்தேன். அவன் அப்பாவின் முகத்தைப் பார்த்தான். அவர் ஒரு பெருமூச்சுடன் தலையசைத்தார். “என்ன கஷ்டத்துக்காக அங்கப்பிரதட்சணம் செஞ்சீங்கன்னு எனக்குத் தெரியலை. எதுவா இருந்தாலும் உங்க பிரச்சினை நல்லபடியா தீரணும்னு நானும் மனசார வேண்டிக்கறேன்.”
“ஊட்டுக்காரி ஆஸ்பத்திரியில கெடக்கறா சார். வயித்துல புத்து வச்சிருக்குது. இன்னும் ஒரு வாரமோ பத்து நாளோ, உயிர் பொழைக்கறது கஷ்டம்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. எதிர்காலத்துல இந்தப் புள்ளைங்கள எப்படி வளர்க்கப் போறமோன்னு நெனச்சாவே அடிவயிறு கலங்குது.
இதுங்க மூஞ்சிக்காவது அவ பொழைக்கணும்…” தொடர்ந்து பேச முடியாதபடி அவருடைய குரல் இடறியது. கண்ணீர் பெருகியது. “உங்க பிரார்த்தனைக்கு நல்ல பலன் கெடைக்கும். நம்பிக்கையோடு இருங்க” என்று சொல்லிவிட்டு, கண்களாலேயே விடைபெற்றுக் கொண்டு படியிறங்கினேன்.
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)
- writerpaavannan2015@gmail.com