

“ஜிப்மர் ஸ்டாப்பிங் பக்கத்துல ஒரு டீக்கடை இருக்குது. நான் முன்னால வந்தாலும் அங்க நிக்கறேன். நீங்க முன்னால வந்தாலும் அங்கேயே நில்லுங்க. ரெண்டு பேருமா சேர்ந்து வார்டுக்குள்ள போகலாம்” என்று நண்பர் சொல்லியிருந்தார்.
நான் பயணம் செய்த பேருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே அந்த நிறுத்தத்தில் என்னை இறக்கி விட்டு விட்டது. கடலூரில் இருந்து வரவேண்டிய நண்பர் இன்னும் வரவில்லை. டீக்கடைக் குள் சென்று தேநீர் அருந்தினேன்.
கடைக்குள் வைத்திருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் கர்ணன் திரைப்படத்தின் போர்க்களக் காட்சி தெரிந்தது. ’உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடல் முடிந்து, மாறுவேஷத்தில் வந்திருந்த கிருஷ்ணரிடம் தன் தர்மத்தின் பலனையெல்லாம் தாரைவார்த்துக் கொடுக்கிறான் கர்ணன். பிறகு அர்ஜுனன் செலுத்திய அம்பு தைத்ததால் கர்ணன் இறக்கிறான். குந்தி போர்க்களத்துக்கு வந்து கர்ணனை மடியிலேந்தி அழுகிறாள். தர்மதேவதையும் அழுகிறாள். அத்துடன் படம் முடிந்துவிட, அடுத்தடுத்து விளம்பரங் கள் ஓடத் தொடங்கின.
மீண்டும் நிறுத்தத்துக்கு வந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். ஒரு பாட்டி தோளில் தொங்கிய துணிமூட்டையோடு பேருந்துக்கு அருகில் நடந்து செல்வதைப் பார்த்தேன். நரைத்த தலைமுடியைச் சுருட்டிக் கொண்டையாக முடிந்திருந்தார். தோல் சுருங்கி ஒட்டிய முகம். குச்சியான கைகள். அழுக்குப் படிந்த அவர் புடவையில் அங்கங்கே கிழிந்து ஒட்டுப் போட்ட தையல் தெரிந்தது.
ஜன்னலோரத்தில் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரிடமும் தட்டை நீட்டி, “அம்மா, தானம் பண்ணுங் கம்மா, ஐயா, தானம் பண்ணுங்கய்யா” என்று கெஞ்சியபடி நடந்தார். சிலர் சில்லறைகளைக் கொடுத்தனர். சிலர் பிஸ்கட்டுகளைக் கொடுத்தனர். ஒருவர், “உழைச்சி சம்பாதிச்சி வாழற வேலையைப் பாரும்மா” என்று கடுகடுத்தார். எதையும் பாட்டி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
பாட்டியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஆதரிக்க ஒருவருமில்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர். சொந்த வீட்டையும் மண் ணையும் எழுதி வாங்கிக்கொண்டு உறவினர்களால் விரட்டப்பட்டவர். நடமாட முடியாத வியாதிக்காரரான கணவரையோ பேரக் குழந்தையையோ ஆதரிக்க வேண்டிய நெருக்கடிகளின் அழுத்தத்தால் பிச்சையெடுக்க வந்தவர் என்றெல்லாம் ஏதேதோ நினைவுகள் பொங்கியெழுந்தன.
பாட்டி என்னிடம் தட்டை நீட்டியபோது தான் சுயஉணர்வுக்கு வந்தேன். கசங்கிய தாளைப்போல இருந்த அவர் முகத்தைப் பார்த்தபடி பத்து ரூபாயைக் கொடுத்தேன். அவர் அந்த ரூபாயை வாங்கவில்லை. “ஒரு டீ வாங்கிக் குடுக்கறீயா தம்பி?” என்று கேட்டார்.
“டீ வாங்கித் தரேன். இந்த ரூபாயையும் வச்சிக்குங்க” என்று அழுத்திச் சொன்ன பிறகுதான் அவர் வாங்கினார். நான் டீக்கடைக்குள் சென்று ஒரு டீ கொடுக்கும்படி சொன்னேன். எனக்குக் கண்ணாடி டம்ளரில் டீ கொடுத்த அந்தக் கடைக்காரர், எனக்குப் பின்னால் நின்றிருந்த பாட்டியைப் பார்த்ததும் ஒரு காகித டம்ளரில் சூடான டீயை நிரப்பிக் கொடுத்தார். நான் அதைப் பாட்டியிடம் கொடுத்தேன்.
ஆவி பறக்கும் அந்தக் காகித டம்ளரை ஒரு கணம் பார்த்துவிட்டு, தன் துணிமூட்டைக்குள் கையை விட்டு ஒரு டம்ளரை எடுத்து, “இதுல ஊத்துங்க தம்பி” என்றார். ஊற்றியதும் அதை எடுத்துக்கொண்டு ஒரு மரத்தடியில் உட்கார்ந்து ஊதி ஊதிக் குடித்தார்.
என் நண்பர் வந்து இறங்கினார். “சாரிப்பா. மரப்பாலத்துகிட்ட கன்னாபின்னான்னு டிராஃபிக் ஜாமாயி டுச்சி” என்று விளக்கம் கொடுக்கத் தொடங்கினார்.
“வாங்க, ஆஸ்பத்திரிக்குள்ள போகலாம்.”
இருவரும் உள்ளே சென்றோம். பெரியவருடைய படுக்கை இரண்டாவது தளத்தில் இருந்தது. நாங்கள் அவருக்கு அருகிலேயே உட்கார்ந்து உரையாடினோம். ”எதுக்கும் கவலைப்படாதீங்க சார். நாலஞ்சி நாள்ல சரியாயிடும்” என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.
மருத்துவமனைக்கு வெளியே மிக நீண்ட புல்வெளி இருந்தது. உள்ளூர்க் காரர்களும் வெளியூர்க்காரர்களும் அங்குதான் கூடியிருந்தார்கள். அவர்களை யெல்லாம் பார்த்தபடியே வந்த நண்பர், “இந்த ஜிப்மர் இருக்கறதால அக்கம்பக்கம் இருபது, முப்பது கிராமத்துக்காரங்க ஓரளவுக்காவது வைத்தியக் கவலை இல்லாம வாழ முடியுது” என்றார்.
சிறிது நேரத்துக்கு முன்பாக நிறுத்தத்தில் தட்டேந்தி சில்லறை கேட்டுக் கொண்டிருந்த பாட்டி, ஒரு மரத்தடியில் காலை நீட்டி அமர்ந்திருப்பதைப் பார்த்தேன்.
நண்பரிடம், “அங்க பாருங்க” என அந்தப் பாட்டியைக் காட்டினேன். பாட்டியின் முகம் அப்போது மலர்ந்திருந்தது. நான்கு நாய்க்குட்டிகள் அவரைச் சுற்றிச்சுற்றி வந்தன. ஒரு குட்டி அவருடைய மடியில் ஏறி நின்று அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தது. “என்னடி பாக்கற?” என்று சிரித்துக்கொண்டே அதன் நெற்றியில் விரலால் அழுத்தினார். உடனே பிற குட்டிகளும் தம் முகங்களை அவரை நோக்கித் திருப்பின. “என்னடி செல்லங்களா, உங்களுக்கும் வேணுமா?” என்றபடி பாட்டி எல்லாக் குட்டிகளின் நெற்றியிலும் அழுத்திவிட்டுச் சிரித்தார்.
துணிமூட்டைக்குள் வைத்திருந்த ஒரு பெரிய பன்னை எடுத்து துண்டுதுண்டாகப் பிய்த்து ஒவ்வொரு குட்டிக்கும் வைத்தார். அப்போது மரக்கிளையிலிருந்து காகங்கள் கரையும் ஒலி கேட்டது. “எங்கடா சத்தத்தைக் காணமேன்னு நெனச்சேன். பார்த்துட்டீங்களா, வாங்க வாங்க” என்று தலையை உயர்த்தி, காகங்களை அழைத்தார். அடுத்த கணமே பத்துப் பன்னிரண்டு காகங்கள் சர்ரென இறங்கி வந்து பாட்டியைச் சூழ்ந்துகொண்டன. பாட்டி வைத்த பன் துணுக்குகளைக் கொத்தித் தின்றன.
அந்தத் தருணத்தில் ஒரு புதரிலிருந்து வெளிப்பட்ட சில கோழிகள் பாட்டியை நெருங்கிவந்து கொக்கொக் எனத் தம் இருப்பை வெளிப்படுத்தின. “நீங்க வருவீங்கன்னு எனக்குத் தெரியும்” என்றபடி தனக்குக் கிடைத்த பிஸ்கட்டுகளை எடுத்துத் துண்டு துண்டாக உடைத்து அவற்றின் முன்னால் வீசினார். கோழிகள் உல்லாசமாக அந்தத் துணுக்குகளைக் கொத்திக் கொத்தி தின்னத் தொடங்கின.
நாய்களும் கோழிகளும் காக்கைகளும் தின்பதையே புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி. பிறகு தன் மூட்டையிலிருந்து ஒரு காகிதப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்தார். இரண்டு இட்லிகள் இருந்தன. ஒரு துண்டு கிள்ளியெடுத்து வாய்க்குள் வைத்து மென்றார்.
இட்லியின் மணம் வெளிப்பட்டதும் நாய்க்குட்டிகள் அந்தப் பொட்டலத்தை நெருங்கி வந்தன. “அதுக்குள்ள வாசனை புடிச்சிட்டீங்களா?” என்றபடி ஓர் இட்லியை எடுத்துத் துண்டு துண்டாகக் கிள்ளி நாய்க்குட்டிகளுக்கும் காக்கைகளுக்கும் கோழிகளுக்கும் பிரித்துப் போட்டார்.
“என்னங்க இது?” என்றபடி எதுவும் புரியாமல் என்னைப் பார்த்தார் நண்பர். அவரிடம் சுருக்கமாக நடந்ததைத் தெரிவித்தேன்.
“அங்க வாங்கினாங்க, இங்க கொடுக்கறாங்க!”
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)
- writerpaavannan2015@gmail.com