

தலைநகர் திம்புவில் எந்தப் பக்கம் திரும்பினாலும் தொலைவில் பொன் வண்ணத்தில் ஒரு புத்தர் ஜொலித்துக்கொண்டிருந்தார். இரவு விடுதி அறையின் ஜன்னல் வழியே பார்த்தபோது, இருளுக்கு நடுவே விளக்கு வெளிச்சத்தில் புத்தரின் முகம் அற்புதமாக இருந்தது. மறுநாள் காலை ஆவலுடன் வாகனத் தில் ஏறினோம். வாகனம் எந்தப் பக்கம் வளைந்து வளைந்து சென்றாலும் புத்தர் தரிசனம் அளித்துக்கொண்டே இருந்தார்.
சிறியதாகத் தெரிந்த சாக்கிய முனி (Great Buddha Dordenma), குறிப்பிட்ட இடத்தை நெருங்க நெருங்க விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே வந்தார். கோயிலின் வாயிலில் வந்து நின்றபோது, ஆச்சரியத்தில் அப்படியே நின்றுவிட்டோம். இந்தக் கோயிலுக்குக் கட்டணம் எதுவும் இல்லை. உள்ளே மட்டும் ஒளிப்படம் எடுக்க அனுமதி கிடையாது.
பிரம்மாண்டமான புத்தரின் கீழே கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலைச் சுற்றி 32 தேவ தூதர்கள் வெவ்வேறு விதமான காணிக்கை களைக் கைகளில் ஏந்தியபடி, புத்தரைப் பார்த்துக்கொண்டு நிற்கி றார்கள். இந்தத் தேவதூதர்களும் பொன்னிறத்தில் ஜொலித்தனர்.
புத்தருக்கு அடியில் இருக்கும் கோயி லுக்குள் நுழைந்தோம். சுவர், சிலைகள், கூரை என அனைத்தும் தகதகவென்று மின்னிக்கொண்டிருந்தன. ஐந்து போதிச்சத்துவர்களுக்கு நடுவே புத்தர் வீற்றிருந்தார். அழகிய ஓவியங்களுடன் தூண்கள் கண்களைக் கவர்ந்தன. பலரும் உட்கார்ந்து தியானம் செய்துகொண்டிருந்தனர். சில பௌத்தத் துறவிகள் ஒளிப்படம் எடுக்கா வண்ணம் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
இரண்டு மாடி உயரம் கொண்ட அந்த அறையின் சுவர் முழுக்கக் கண்ணாடி அலமாரிகளுக்குள் புத்தர் சிலைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டபோது ஆச்சரியத்தில் உறைந்துபோனோம். 8 அங்குல உயரம் உள்ள புத்தர் சிலைகள் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருக்கின்றன. 12 அங்குல உயரம் கொண்ட புத்தர் சிலைகள் 25 ஆயிரத்துக்கும் மேல் இருக்கின்றன. இவை அனைத்தும் செப்புச் சிலைகள்.
விற்பனைக்கும் சில சிலைகளை வைத்திருந்தனர். சின்ன சிலை இரண்டாயிரம் ரூபாய், சற்றுப் பெரிய சிலை நான்காயிரம் ரூபாய். இந்தச் சிலைகளை விலை கொடுத்து வாங்கினாலும் எடுத்துக்கொண்டு வர முடியாது. சிலைகளை அவர்களிடமே கொடுத்துவிட வேண்டும். அப்படிக் கொடுக்கப்பட்ட சிலைகள் கண்ணாடி அலமாரிக்குள் சென்றுவிடும்! கோயிலுக்குள்ளிருந்து வெளியே வந்தோம். பீடத்துக்கு மேலிருக்கும் 177 அடி புத்தரைப் பல கோணங்களில் கண்டுகளித்தோம். கீழே இறங்கிவந்து, பீடத்தில் சுற்றியிருக்கும் பூடான் புராணக் கதாபாத்திரங்களைச் சித்தரிக்கும் ஓவியங்களைப் பார்த்து மகிழ்ந்தோம்.
உலகிலேயே மிகப் பெரிய புத்தர் என்கிற சிறப்பைப் பெற்றிருக்கும் சாக்கியமுனி கோயில் 2006ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 2015ஆம் ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. ஒன்பது ஆண்டுகளாகச் சுற்றுலாப் பயணிகளை பூடானுக்கு இழுக்கும் முக்கியச் சக்தியாக சாக்கியமுனி மாறியிருக்கிறார்! பிரம்மாண்டமான புத்தர், அவருக்குப் பின்னே மலை, அவருக்கு மேலே வெண்மேகக் கூட்டம் என்று அந்தக் காட்சியை நினைவில் பதிந்துகொண்டு புறப்பட்டோம். சிறுத்துக்கொண்டே வந்த புத்தர் ஒருகட்டத்தில் கண்களுக்குப் புலப்படாமல் போனார்.
இதுபோன்ற பல சுவாரசியமான
கட்டுரைகளை ‘இந்து தமிழ் திசை’
தீபாவளி மலர் 2024 இல் வாசிக்கலாம்.
276 பக்கங்கள், விலை ரூ.175
ஆன்லைனில் பெற: https://shorturl.at/bXX2Q
வாட்ஸ் அப் எண்: 9940699401
- sujatha.s@hindutamil.co.in