அன்பளிப்பு | வண்ணக் கிளிஞ்சல்கள் 26

அன்பளிப்பு | வண்ணக் கிளிஞ்சல்கள் 26
Updated on
3 min read

நண்பர் ஒருவர் புதுமனை புகுவிழாவுக்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காக வந்திருந்தார். அவருக்கு விருப்பமான ஒன்றை வாங்கிக் கொடுக்க நினைத்து அவரிடமே என்ன வேண்டும் என்று கேட்டேன். அவர் மஞ்சள் அல்லது நீலத்தில் லவ் பேர்ட்ஸ் ஜோடியை வாங்கிக் கொடுக்குமாறு சொன்னார்.

எங்கள் வீடு இருக்கும் பகுதியில் அந்த மாதிரி லவ் பேர்ட்ஸ் விற்கும் கடைகள் இல்லை. அதனால், தங்கள் வீட்டில் லவ் பேர்ட்ஸ் வைத்திருக்கும் ஒருவரைக் கண்டறிந்து அவரிடம் விசாரித்தேன். ஊருக்கு வெளியே லவ் பேர்ட்ஸ் விற்கும் ஒரு குடும்பத்தின் முகவரியைக் கொடுத்தார்.

அடுத்த நாள் காலையிலேயே வீட்டைவிட்டுக் கிளம்பி அந்த முகவரியைக் கண்டுபிடித்து, என் தேவையைக் குறிப்பிட்டேன். விற்பனைக் கூடத்துக் குள் என்னை அழைத்துச் சென்று காட்டினார் அவர். நண்பர் விரும்பிய மஞ்சள் லவ் பேர்ட்ஸ் அந்தக் கூடத்தில் இருந்தன. நான் அவற்றைச் சுட்டிக்காட்டி வேண்டுமென்று சொன்னேன்.

அவர் சொன்ன தொகையில் பாதித் தொகையை அப்போதே கொடுத்து விட்டேன். என் முகவரியை வாங்கிக் கொண்டார். என் வீட்டுக்கு அவரே வந்து லவ் பேர்ட்ஸைக் கொடுத்துவிட்டு, பாக்கித் தொகையை வாங்கிக்கொள்வ தாகத் தெரிவித்தார். மனநிறைவோடு அவரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.

அப்போதுதான் வழியில் பெரிய தாமரைக்குளத்தைப் பார்த்தேன். போகும்போது கவனிக்காமலேயே கடந்துவிட்டேன். வட்டமான தட்டு வடிவில் பச்சை இலைகள் குளம் முழுவதும் அடர்ந்து மிதந்தன. நீர்மட்டத்தைவிடச் சற்றே உயரமாக நீண்டிருந்த தண்டுகளில் குவிந்த மொட்டுகளாகவும் விரிந்த மலர்களாகவும் ஏராளமான பூக்கள் காணப்பட்டன. வெள்ளை, சிவப்பு, மஞ்சள், மெஜந்தா எனப் பல நிறங்களில் தாமரைப்பூக்கள் காற்றில் அசைந்தாடின. கரையோ ரங்களில் தூங்குமூஞ்சி மரங்கள் நின்றிருந்தன. ஏதோ ஒரு மரத்தின் உச்சியிலிருந்து ஒரு குயில் கூவிக்கொண்டே இருந்தது.

கரையோரத்தில் மணமக்களை நிற்கவைத்து ஒரு போட்டோ ஷூட் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பல கோணங்களில் மணமக்களை நிற்க வைத்து படமெடுத்துக் கொண்டிருந்தார் ஒளிப்படக் கலைஞர். நான்கு சிறுவர்கள் அவருக்குப் பின்னால் வேடிக்கை பார்த்தபடி நின்றனர்.

அந்தக் கூட்டத்தி லிருந்து விலகிச் சென்று வேறொரு பக்கத்தில் நின்று தாமரைப்பூக்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது கூட்டத்தி லிருந்து ஒரு சிறுவன் என்னை நோக்கி ஓடிவந்தான். “தாமரைப்பூ வேணுமா சார்?” என்று ஆவலோடு கேட்டான். நான் அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

“உங்களுக்கு எந்த நிறத்துல பூ வேணும், சொல்லுங்க சார். ஒரு நிமிஷத் துல பறிச்சிட்டு வந்து கொடுக்கறேன்.” “அங்கெல்லாம் ஆழமா இருக்காதா?” “அதெல்லாம் பிரச்சினையே இல்லை சார், எனக்கு நீச்சல் தெரியும். உங்களுக்கு எந்த நிறம் வேணும், அதை மட்டும் சொல்லுங்க.” நான் குளத்தின் மீது ஒருமுறை பார்வையைப் படரவிட்டு, “அதோ, அந்த வெள்ளைத் தாமரைப்பூ” என்று அவன் புரிந்துகொள்ளும் விதமாகச் சுட்டிக்காட்டினேன்.

“பார்த்துட்டேன் சார். ஒரே நிமிஷத்துல கொண்டு வரேன். இருபது ரூபா குடுங்க, போதும்” என்று சொல்லிக்கொண்டே குளத்தில் இறங்கி அந்த வெள்ளைத் தாமரையை நோக்கி நடக்கத் தொடங்கினான். இலைகளை விலக்கிக்கொண்டு மீனைப்போல அவன் நீந்திச் செல்லும் வேகத்தைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

அவன் நீந்திச் செல்வதைப் பார்த்த பிற மூன்று சிறுவர்களும் ஒளிப் படக்காரரிடமிருந்து விலகி என்னை நோக்கி ஓடிவந்தார்கள். “பூவா சார் கேட்டீங்க? என்ன நிறத்துல வேணும் சார்?” என்று கேட்டனர். நான் நீந்திச் சென்ற சிறுவனின் மீதே பார்வையைப் பதித்திருந்தேன். கண்ணை மூடித் திறப்பதற்குள் அந்த வெள்ளைத் தாமரையைப் பறித்துக்கொண்டு கரைக்குத் திரும்பிவிட்டான் அவன். மூன்று சிறுவர்களும் ஓவென்று சத்தமெழுப்பி அவனை வரவேற்றனர். நீர் சொட்டக் கரையேறி வந்தவ னிடமிருந்து பூவை வாங்கியபோது அவன் முகம் பூவைப்போலவே மலர்ந்திருப்பதைப் பார்த்தேன். அவன் கேட்ட இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்.

“சார், அந்தச் சிவப்புத் தாமரையைப் பறிச்சி தரட்டுமா?” “அதோ, அங்க மஞ்சளா ஒரு பூ இருக்குது பாருங்க சார், அது வேணுமா?”
“அந்த மெஜந்தா கலர் பூதான் சூப்பர் நிறம் சார். அது வேணுமா?” எனக்கு வேறு வழி தெரிய வில்லை. “சரி, ஆளுக்கு ஒண்ணு எடுத்துட்டு வாங்க” என்றேன். அடுத்த கணமே அவர்கள் மேல்சட்டையைக் கழற்றி கரையில் எறிந்துவிட்டு குளத்தில் இறங்கி விட்டனர். மின்னல் வேகத்தில் ஆளுக் கொரு பூவோடு மூன்று பேரும் திரும்பி வந்தனர். நான் மூன்று பூக்களையும் வாங்கிக்கொண்டு பணம் கொடுத்தேன்.

அவர்களைப் பக்கத்தில் அழைத்துப் பெயர், படிப்பு விவரங்களைக் கேட்டேன். உற்சாகத்தோடு அவர்கள் பதில் சொன்னார்கள்.
“சார், இன்னும் ஒரு பூ கொண்டு வர்றோம் சார். ரெண்டா எடுத்துட்டுப் போங்க” என்றபடி என் சம்மதத்தை எதிர்பாராமலேயே அவர்கள் குளத்தில் இறங்கிவிட்டனர்.

அவர்கள் கொண்டுவந்த பூக்களையும் வாங்கிக்கொண்டு பணம் கொடுத்தேன். அனைத்தையும் வாங்கி அடுக்கிக் கொண்டிருக்கும்போதே அவர்கள் மீண்டும் குளத்தில் இறங்கி இன்னுமொரு பூ பறித்துவந்து என்னிடம் அளித்தனர். இரண்டு கைகளாலும் எடுத்துச் செல்ல முடியாதபடி பூக்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. ஒரு சிறுவன் புதரிலிருந்து ஒரு கொடியைப் பறித்து, தண்டுகளையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரு கொத்தாக்கிக் கட்டிக்கொடுத்தான்.

மூன்றாவதாகக் கொண்டுவந்த பூக்களுக்காக அவர்களுக்குப் பணத்தை எடுத்துக் கொடுத்தேன். நான்கு பேருமே பணத்தை வாங்க மறுத்துவிட்டுச் சிரித்தார்கள். “அது கிஃப்ட் சார்” என்று சொல்லிவிட்டு சட்டைகளை எடுத்துக்கொண்டு அணிந்தபடியே ஒளிப்படக்காரரை நோக்கி ஓடினர். பேருந்தில் ஏறி வீட்டுக்கு அருகில் உள்ள நிறுத்தத்தில் இறங்கி நடக்கத் தொடங்கும்போதுதான் அவ்வளவு பூக்களையும் என்ன செய்வது என்று யோசித்தேன்.

வழியில் பிள்ளையார் கோயில் தென் பட்டது. சட்டென நுழைந்துவிட்டேன். என்னைப் பார்த்ததும் பூசை செய்பவர், “வாங்க வாங்க. இன்னைக்கு என்ன அதிசயமா நீங்க வந்திருக்கீங்க? வழக்கமா மேடம்தானே வருவாங்க” என்று சிரித்தார்.
“அது சரி, என்ன இது?” என்று என்னிடமிருந்த தாமரைப் பூங்கொத்தைக் காட்டிக் கேட்டார்.
“கிஃப்ட்.”
“என்ன?”
“இந்தப் பூங்கொத்தை சாமிக்கு வச்சிருங்க” என்றேன்.
அவர் கருவறைக்குள் சென்று ஆராதனை செய்தார். ஒரு தொன்னை யில் சுண்டலும் திருநீறு, குங்குமம் பொட்டலங்களும் கொண்டுவந்து கொடுத்தார்.
நான் ஆச்சரியமாகப் பார்த்தேன்.
“கிஃப்ட்” என்றார்.

(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)

- writerpaavannan2015@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in