

மார்க் கூறியது உண்மைதான். சுவிட்சர்லாந்தில் முக்கியச் சட்டத்தை தேசிய நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தும்போது அதை மக்களின் தீர்ப்புக்கும் விடுகிறது. அந்தச் சட்டம் மக்களால் ‘வீட்டோ’ செய்யப்படலாம். சுவிஸ் நாடாளுமன்றத்தில் உள்ளவர்களில் பலரும் அரசியலில் ஊறிப்போனவர்கள் அல்லர். இதற்கு முக்கியக் காரணம், முடிவெடுக்கும் முடிவு குடிமக்களிடம் இருப்பதுதான். சராசரியாக ஆண்டுக்கு நான்கு முறை இப்படி அந்நாட்டு மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
பொது நிறுவனங்களின் முக்கியச் செயல் அதிகாரிகளின் வருமானத்தை நிர்ணயிப்பதில் நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டுமா, இல்லையா? சுவிஸ் குடிமக்களுக்கு மருத்துவர்களின் உதவியுடன் கருணைக் கொலை அனுமதிக்கப்படலாமா? ‘வெள்ளெலி’, ‘கினிபிக்’ எனப்படும் பரிசோதனைக்குப் பயன்படுத்தப்படும் எலி போன்றவை ஜோடியாக வாழக்கூடியவை. பரிசோதனைக்கு உள்படுத்தும்போது தனிமை அவற்றைப் பாதிக்கும். இந்த உயிரினங்களைச் செல்லப் பிராணிகளாக வளர்த்தால் ஜோடியாகத்தான் வளர்க்க வேண்டுமா?
இதுபோன்று பல விஷயங்கள் குடிமக்களின் விருப்பத்திற்கேற்பதான் சட்டங்கள் ஆயின. இதையெல்லாம் ஊடகங்களில் படித்து அறிந்திருந்ததால் நான் சந்தித்த மார்க்கிடம், ”கடைசியாக எந்தத் தீர்மானத்தை மக்கள் வாக்களிப்புக்கு முன்வைத்து அதை மக்கள் மறுத்தனர்?” என்று கேட்டேன். ”இரண்டு ராணுவ விமானங்களை வாங்கலாமா என்று அரசு கேட்டது. ஆனால் நாங்கள் வேண்டாமென்று வாக்களித்ததால் அவற்றை வாங்கவில்லை” என்று என்னை ஆச்சரியப்படுத்தினார் மார்க்.
ஆனால் அவருக்கு ஓர் ஆதங்கமும் உண்டு. ”இப்படி வாக்களிப்பவர்கள் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறார்கள். சமூகப் பொறுப்பு என்பது குறைவாகிக் கொண்டு வருகிறது” என்றார். ஆனால் இந்த மக்கள் வாக்கெடுப்பு காரணமாகச் சில சங்கடங்களும் நேர்வதுண்டு. வெளிநாட்டிலிருந்து அதிகம் பேரை ஏற்றுக்கொள்ள சுவிட்சர்லாந்து தயங்குகிறது. அதன் மக்களுக்கும் அதே மனநிலை. இந்தச் சூழலில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களின் சதவீதம் குறைவாகவே இருக்க வேண்டும் என்று ஸ்விஸ் அரசு கூற, ஐரோப்பிய யூனியன் அதை ஏற்கவில்லை.
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினரல்ல. என்றாலும் பல பொதுவான வணிக உடன்படிக்கைகளில் அது கையெழுத்திட்டிருக்கிறது. ’ஷெங்கன் விசா’ என்கிற பொதுவான விசாவைப் பெற்றால், பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே சுவிட்சர்லாந்துக்குள்ளும் தாராளமாக நுழைந்து வரலாம். இந்த நிலையில் அதிக அளவில் வெளிநாட்டு மக்களை சுவிட்சர்லாந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்கிறது. இதனால் கொஞ்சம் விட்டுப்போக வேண்டிய நிலை ஸ்விஸ் அரசுக்கு நேர்ந்திருக்கிறது.
பாலஸ் ப்யூலூ என்கிற கலை-விளையாட்டு வளாகத்தில் நாம் சந்தித்துப் பேசிய வேறு சிலரும் சுவிட்சர்லாந்தை நமக்கு மேலும் விளங்க வைத்தார்கள். லொஸானில் உள்ள பெரிய அரசு மருத்துவமனையில் ரேடியாலஜிஸ்டாகப் பணிபுரிகிறார் டாக்டர் மேத்யூ. ”என் பிரிவில் பரவாயில்லை. ஆனால் பல மருத்துவர்களுக்கும் வேலை நேரம் மிக அதிகமாக இருக்கிறது. அதுதான் எங்கள் குறை.” சுவிட்சர்லாந்தில் எது மாற வேண்டும் என்ற நமது கேள்விக்குக் கொஞ்சம் தயக்கத்துடன், ”மற்ற பல ஐரோப்பிய நாடுகளில் பிறருடன் கலந்து பழகுவதில் தயக்கம் இருப்பதில்லை. இருந்தாலும் அது மிகக் குறைவு. இங்கே அந்த உணர்வு கொஞ்சம் அதிகம் இருக்கிறது. அது மாற வேண்டும்” என்றார் ஒருவர்.
இந்த இடத்தில் அவர் இனவெறி என்பதை உணர்த்தும் racism என்பதைக் குறிப்பிடுகிறாரா என்று நாம் கேட்க, அதை அவர் ஏற்கவில்லை. Xenophobia என்று கூறுவது சரியாக இருக்கும் என்றார். அதாவது பிற நாடுகளில் இருந்து வந்தவர்களை மனதளவில் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது.
(பயணம் தொடரும்)
முந்தைய அத்தியாயம் > ஸ்விஸ் எனும் சொர்க்கம் 9: மரங்களுக்கும் எண்கள் உண்டு!