

எங்கள் துறை சில காரணங்களுக்காக ஒரு நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்க முடிவு செய்தது. இரண்டு மூத்த அதிகாரிகள் பகல் முழுவதும் உட்கார்ந்து அந்தக் காரணங்களைப் பற்றி விவாதித்து ஒரு பட்டியல் போட்டார்கள். பிறகு, இன்னோர் அதிகாரி பட்டியலில் காணப்பட்ட செய்திகளை விரித்தெழுதி, ஓர் ஆவண வரைவைக் கணிப்பொறியில் தட்டச்சிட்டார். அப்புறம் அதை பிரின்ட் எடுத்து வைத்துக்கொண்டு, அனைவரும் மீண்டும் படித்து, திருத்தங்களிட்டுச் செம்மைப்படுத்தினர். “நாளைக்குக் காலையில ஆபீஸ் வரும்போது நம்ம வக்கீல் ஆபீஸ்ல சேர்த்துட்டு வாங்க” என்று அந்த ஆவணப் பிரதியை என்னிடம் கொடுத்தார்கள்.
அந்த வக்கீல் அலுவலகம் ஜெயநகரில் இருந்தது. பழகிய இடம் என்பதால் மறுநாள் காலையில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்தே சென்றேன். முன்புறத்தோட்டம், வண்டி நிறுத்துமிடம், நீளமான முற்றம் எல்லாம் கொண்ட ஒரு வீட்டைத்தான் அந்த வக்கீல் வாடகைக்கு எடுத்து அலுவலகமாக வைத்திருந்தார். நான் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, முற்றத்திலேயே ஒரு நாற்காலியில் குமாஸ்தா உட்கார்ந்து எதையோ படித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. நிமிர்ந்து பார்த்தவர், “குட்மார்னிங் சார், வாங்க” என்றபடி எழுந்து வரவேற்றார்.
“இன்னும் வக்கீல் சார் வரலையா?”
“கொஞ்சம் லேட்டா வரேன்னு சொல்லியிருக்காரு சார். என்ன விஷயம், சொல்லுங்க.”
“நம்ம கேஸ் சம்பந்தமா எங்க பாஸ் ஒரு டிராஃப்ட் கொடுத்தனுப்பினாரு. அதான்...”
“சரி, உக்காருங்க” என்று முற்றத்தி லேயே இன்னொரு நாற்காலியைச் சுட்டிக்காட்டினார் குமாஸ்தா.
“இங்க எதுக்கு? வாங்க, உள்ள போய் உக்காரலாம்” என்றபடி அறையின் கதவோடு தொங்கிய நீலத்திரையை நான் தொட்டேன்.
“உள்ள எதுக்கு சார்? நாம என்ன ரகசியமா பேசப் போறோம்? இங்கயே வாங்க” என்று மீண்டும் அழுத்திச் சொன்னார் குமாஸ்தா. நான் அதற்குள் திரையை விலக்கி உள்ளே சென்றுவிட்டேன்.
அங்கே பெஞ்சில் ஓர் இளைஞரும் இளம்பெண்ணும் அமர்ந்துகொண்டு தமக்குள் ரகசியமான குரலில் பேசியபடி இருந்தனர். அவர்கள் முகங்களில் புன்னகை தெரிந்தாலும் கண்கள் கலங்கியிருந்தன. திரையை விலக்கிய கணத்தில் இருவருடைய பார்வையும் என் பக்கமாகத் திரும்பியது. அச்சத்தில் அவர்களுடைய முகங்களில் இருள் படிந்தது.
மறுகணமே பின்வாங்கி, திரையை உதறிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.
“என்னங்க இது? உள்ள யாரோ ரெண்டு பேரு இருக்காங்க. நீங்க…” என்றபடி குமாஸ்தாவைப் பார்த்தேன். “சொல்றேன், வாங்க” என்றபடி தோட்டத்தைக் கடந்து வாசல் பக்கமாக அழைத்துச் சென்றார்.
“டைவர்ஸ் கேஸ் சார். ரெண்டு வருஷமா நடக்குது. எங்க வக்கீலைப் பத்திதான் உங்களுக்குத் தெரியுமே. எவ்ளோ தூரம் இழுக்க முடியுமோ அவ்ளோ தூரம் இழுக்கறவரு. கேஸ் முடியாம ஹியரிங் ஹியரிங்னு போயிட்டே இருக்குது.”
“என்ன சார் சொல்றீங்க நீங்க? அவங்களைப் பார்த்தா டைவர்ஸுக்காக கேஸ் நடத்தற ஆளுங்க மாதிரியே தெரியலையே. என்னமோ ஹனிமூன் ஜோடி மாதிரி இருக்காங்க” என்றேன்.
“அந்நியோன்யமானவங்கதான். அதுல சந்தேகமே வேணாம். ஆனா, இவங்களைப் பெத்தவங்கதான் இந்த ரெண்டு பேரையும் பிரிச்சிடணும்னு துடிக்கறாங்க.”
எனக்கு உண்மையிலேயே எதுவும் புரியவில்லை. நான் அவர் முகத்தைக் குழப்பத்துடன் பார்த்தேன்.
“பொண்ணுக்கு அம்மா கிடையாது சார். அப்பா மட்டும் தான். பேங்க்ல வேலை. ஸ்கூல்ல படிக்கும்போதே அம்மா இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் அவர் ஒத்தையில அந்தப் பொண்ண வளர்த்திருக்காரு. வெளியூருல மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செஞ்சா, பொண்ணு தன்னைவிட்டுப் போயிடும்ங்கிற எண்ணத்தால, இதே ஊருல ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து முடிச்சிட்டாரு.”
“எல்லாத் திட்டமும் நல்லாதான இருக் குது. அப்புறம் ஏன் திடீர்னு டைவர்ஸ்?”
“நான் பேசி விசாரிச்ச வரைக்கும் பொண்ணுக்கும் சரி, மாப்பிள்ளைக்கும் சரி, அந்த மாதிரியான எண்ணமே இருக்கிற மாதிரி தெரியலை. பொண் னோட அப்பாவும் மாப்பிள்ளையோட அப்பாவும்தான் டைவர்ஸ் டைவர்ஸ்னு முட்டிக்கிறாங்க. பிள்ளைங்க வாழ்க்கையைவிட அவங்களுக்குப் பகைதான் பெரிசா தெரியுது.”
“அப்படி என்ன பகை?”
“ஒரு நாள் மாப்பிள்ளை வீட்டுல ஏதோ விசேஷம். அன்னைக்குப் பைய னோட அம்மா அந்தப் பொண்ணைப் பார்த்து ஏதோ சொன்னாங்களாம். அது ஒண்ணும் பெரிய சங்கதி இல்லை. ஆனாலும் அந்தப் பொண்ணு, அந்தச் சமயத்துல அதைப் பெரிய விஷயமா எடுத்துக்கிட்டாங்க.”
“அப்புறம்?”
“அடுத்த நாள் அப்பாகிட்ட பேசறப்ப அந்த விஷயத்தையும் சொல்லிட்டாங்க. உடனே அந்த ஆள் தாஜ்மகால் மாதிரி நமக்கு வீடு இருக்கும்போது நீ ஏம்மா அங்க கஷ்டப்படணும், பேசாம கெளம்பி வாம்மானு சொல்லிட்டாரு. அந்தப் பொண்ணும் அப்பா பேச்சைத் தட்டாம பொட்டியத் தூக்கிக்கிட்டு கெளம்பிப் போயிட்டாங்க.”
“பெத்தவங்கங்கற மரியாதை இருக்க வேண்டியதுதான். வேணாம்னு சொல்லலை. அதுக்காக அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிக்கிட்டே இருந்தா குடும்பம் நடத்த முடியுமா?”
“இந்தப் பசங்களுடைய சிக்கலே அதுதான் சார். ரெண்டும் தங்கமான பசங்க. பாசமா வளர்த்த அப்பா மனச நோகடிக்கக் கூடாதுன்னு அடங்கிப் போறாங்க. அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு, இப்ப குத்துதே குடையுதேன்னு தவிக்கிறாங்க.”
நாங்கள் உரையாடிக்கொண்டி ருக்கும்போதே அந்த இளைஞர் கதவுத் திரையை விலக்கிக்கொண்டு வருவது தெரிந்தது. அந்தப் பக்கம் நின்றிருக்கும் அந்தப் பெண்ணைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. அப்படி ஓர் உணர்வுக் கொந்தளிப்பை அதுவரை நான் பார்த்ததில்லை. குமாஸ்தாவுக்கு அருகில் ஒரு கணம் நின்று, “ரொம்ப தேங்க்ஸ்ண்ணா” என்று சொன்னபடி வெளியேறினார்.
“எதிரெதிர் கட்சிக்காரங்க ரெண்டு பேரும் ஒண்ணா சந்திச்சி பேசிக்க இடம் கொடுக்கறீங்களே, இதனால உங்களுக்கு ஒண்ணும் பிரச்சினை வராதா?”
குமாஸ்தா புன்னகை செய்தார். “எல்லாம் நேரம் காலம் பார்த்துதான் ஏற்பாடு செய்வேன் சார். அதையும் மீறி ஏதாவது நடந்தா, எதிர்கொள்ள வேண்டிதுதான்.”
“இன்னைக்கு அவங்களுக்கு கேஸா ?”
“ஆமாம். ஆனா எங்க சார் ஏதாவது ஒரு காரணம் சொல்லி, இன்னொரு தேதி வாங்கிடுவாரு.”
“அப்ப, எப்பதான் கேஸ் முடியும்?”
“என் கணக்குக்கு, இன்னும் ஒரு வருஷம் இப்படியே ஓடும். அதுக்குள்ள இந்தப் புள்ளைங்களே அப்பாமாருங்களைப் பத்திக் கவலைப் படாம சேர்ந்து வாழலாங்கற முடிவை எடுக்கணும். எதையும் வாயைத் திறந்து சொல்லாம, எல்லாத்தையும் நெஞ்சிலயே வச்சிப் பூட்டியிருந்தா, சட்டம் தன் கடமையைச் செஞ்சிட்டுப் போயிட்டே இருக்கும்.”
எனக்குப் பேச்சே எழவில்லை. யாரோ தொண்டையைச் செருமிக் கொள்ளும் சத்தம் கேட்டதால் திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண் தான். துப்பட்டாவால் கண்களைத் துடைத்தபடி திரையை விலக்கி நாங்கள் நின்றிருந்த திசையைப் பார்த்துவிட்டுச் சென்றார்.
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)
- writerpaavannan2015@gmail.com