

உங்கள் தட்டுக்கு வந்து சேரும் இறால், பண்ணைகளில் வளர்க்கப்பட்டதாகவோ வலைகளில் பிடிக்கப்பட்டதாகவோ மட்டும் இருக்கும் என்கிற அவசியம் இல்லை; ஷகிலா, தனம் போன்ற பெண்களின் கைகளால் பிடிக்கப்பட்டதாகக்கூட இருக்கலாம்.
புறம்போக்கு நிலங்களுக்கும் அவற்றைச் சார்ந்திருக்கும் சமூகங்களுக்குமான பிணைப்பைக் கூறும் நோக்கத்துடன் சென்னை கலைத்திருவிழா நடத்திய ‘பொறம்போக்கியல்-2024’ என்னும் கருத்தரங்கில் சுற்றுச்சூழல் அறிஞர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வின் பேச்சாளர்கள் மண்ணின் மக்களாக இருந்தனர். பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த ஷகிலா சேகர், தனம் ஆறுமுகம் ஆகியோரின் பேச்சு பலரைக் கவர்ந்தது. ‘சென்னை கிளைமேட் ஆக்ஷன் குரூப்’ அமைப்பின் இணை நிறுவனர் பிரசாந்த் இவர்களுடன் உரையாடினார்.
கொசஸ்தலையாற்றுக்கு மூன்று கழிமுகங்கள் உண்டு. அதில் பழவேற்காடும் ஒன்று. இங்கு 5,000க்கும் மேற்பட்ட பெண்கள் கையால் இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். கழுத்தளவு நீரில் முகத்தை மட்டும் உயர்த்திக்கொண்டு, தரையில் தடவித் தடவி இறாலைப் பிடித்துத் தோளில் கட்டியுள்ள ஓலைக்கூடையில் சேகரிப்பது ஒரு பெரிய போராட்டம்தான். ஷகிலா சேகர் இந்த வேலையை 30 ஆண்டுகளாகச் செய்துவருகிறார். ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று கிலோ இறால் பிடிக்க முடியும். ஒரு கிலோகூடத் தேறாத நாள்களும் உண்டு.
“அந்தக் காலத்துல ஆற்றைக் கடந்துதான் ஹைஸ்கூல் போகணும். அதெல்லாம் பொம்பளப் புள்ளைக்குப் பாதுகாப்பா இருக்காதுன்னு அஞ்சாவதோடு படிப்பை நிறுத்திட்டாங்க. அம்மா இறால் பிடிப்பாங்க. எங்க வீட்டுக்காரருக்கு ஒருகட்டத்துல வேலைக்குப் போக முடியல. அப்போதான் இறால் பிடிக்கப் போனேன். எங்களுக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. இறால் பிடிச்சே என் குடும்பத்தைக் கரைசேர்த்துட்டேன்” என்கிறார் ஷகிலா.
தனம் ஆறுமுகம் கதையும் ஏறக்குறைய இதுதான். “கல்யாணமான புதுசுல காசு கொடுத்துத்தான் இறால் வாங்கிட்டிருந்தேன். நாமளே இறால் பிடிச்சா 50 ரூபாய் மிச்சப்படுத்தலாமேன்னு ஆரம்பிச்சேன். அதுவே வேலை ஆகிடுச்சு. காலைல அஞ்சு மணிக்குப் போனா, சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கும் பிடிப்போம். இரவில் ஏழு மணிக்குப் போய் 11 மணி வரைக்கும்கூட இறால் பிடிக்குறது உண்டு. கோட்டை இறால், பூச்சி இறால், வெள்ளை இறால் எனப் பல வகை இருக்கு. ஒரு கிலோ 70 - 250 ரூபாய்க்கு விப்போம். மட்டி (சிப்பி) கூடப் பிடிப்போம். ஒரு கிளாஸ் மட்டி 50 ரூபாய்க்குப் போகும்” என்கிற தனம், மாடு வளர்ப்பிலும் ஈடுபடுகிறார்.
“நாலஞ்சு பேர் வரிசையா நின்னு தரையைத் தடவிட்டே போவோம். எங்களுக்குப் பின்னாலே இன்னொரு வரிசை இருக்கும். இப்படி ஒரே நேரத்துல 20 பேராவது தண்ணிக்குள்ள போவோம். எங்கையில சிக்காத இறால், இன்னொ ருத்தர் கையில சிக்கும். சில நேரம் ஒரே இறால் ரெண்டு பேர் கையில சிக்கிடும். அப்போ ஆளுக்குப் பாதியா எடுத்துப்போம். அதை வீட்டுக்கு வச்சிக்குவோம்.
தண்ணில அங்கங்கே ஜிலேபி மீன் படுக்குறதுக்காகப் பள்ளம் பறிச்சு வச்சுருக்கும். அதுல கால விட்டா முழங்காலுக்கும் மேல சேத்துல புதைஞ்சிடும். சில நேரம் கிட்டே போனால்தான் தண்ணிக்குள்ள சுருண்டு கிடக்குறது பாம்புன்னு தெரியும்” என்கிற இவர்களுக்கு இந்தத் தொழில் பெரும் சோதனையையும் தந்திருக்கிறது.
ஷகிலாவுக்கு சைனஸ் உண்டாகி, உப்பு நீர் மூளையை அரிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. தனத்தின் கையில் இருங்களுத்தி மீன் கடித்துப் புண்ணானதில் வாழ்வா, சாவா என்னும் நிலையே ஏற்பட்டது. எண்ணூரைச் சுற்றியிருக்கும் அனல் மின் நிலையம் போன்ற திட்டங்களால் கழிமுகம் சிதைந்துவரும் வேதனையும் இவர்கள் பேச்சில் வெளிப்பட்டது. இவர்கள் இறால் பிடிப்பது தற்போது குறைந்திருக்கலாம், எனினும் இந்தப் பெண்களுக்கு இறால் வாழ்வாதாரம் மட்டும் அல்ல; அதற்கும் மேலே.
- anandchelliah@hindutamil.co.in