சிட்டுக்குருவி இசைக்குழு | வண்ணக் கிளிஞ்சல்கள் 23

சிட்டுக்குருவி இசைக்குழு | வண்ணக் கிளிஞ்சல்கள் 23
Updated on
3 min read

ஜெராக்ஸ் எடுப்பதற்காகக் கடைத் தெருவுக்குச் சென்றிருந்தேன். கடை திறந்திருந்தது. ஆனால், கடைக்காரர் இல்லை. எங்காவது தேநீர்க்கடை பக்கம் சென்றிருக்கக்கூடும், விரைவில் வந்துவிடுவார் என்கிற எண்ணத்துடன் வாசலுக்கு வந்து படிக்கட்டில் நின்றேன்.

வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். காந்தி சிலைக்குப் பக்கத்தில் ஆள்களை இறக்கி விட்டு ஒரு பேருந்து புறப்பட்டுச் செல்வது தெரிந்தது. இறங்கியவர்களில் ஆறு பேர் பார்வையற்றவர்கள். மூன்று ஆண்கள். மூன்று பெண்கள். ஆறு பேரும் கறுப்புக் கண்ணாடி போட்டிருந்தனர். அவர்களுடைய செயல்பாடுகள் என்னை ஈர்த்தன. அவர்களைத் தொடர்ந்து கவனித்தேன்.

அந்தக் கூட்டத்தில் வயதில் பெரியவராக இருந்தவர் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அழைத்து எல்லாரும் இறங்கியிருப்பதை உறுதி செய்துகொண்டார். “பைகளைப் பத்திரமா எடுத்துக்கிட்டு வாங்க” என்றபடி பெரியவர் கையில் மடித்து வைத்திருந்த ஊன்றுகோலை உதறி நீட்டிவிட்டுத் தட்டித்தட்டி பாதையோரமாக நடக்கத் தொடங்கினார்.

அவர் தோள்மீது கைவைத்தபடி இன்னோர் இளைஞர் நடந்தார். அவர் தோளைத் தொட்டபடி ஒரு சிறுவன் நடந்தான். அவனுக்குப் பின்னால் மூன்று பெண்கள் நடந்தனர். கிதார், தாளத்தட்டு, டிரம், டிரம்ப்பெட், புல்லாங்குழல், கீ போர்டு, பேட்டரி, ஸ்பீக்கர் என ஆளுக்கொரு பொருளை வைத்துச் சுற்றிய பையைத் தோளில் வைத்திருந்தனர். எறும்பு ஊர்ந்து செல்வது போல ஒருவர் பின்னால் இன்னொருவரென ஊன்று கோலைத் தட்டி ஓசை யெழுப்பியபடி நடந்து சென்றனர்.

நிறுத்தத்தை ஒட்டி ஆஞ்சநேயர் கோயிலும் இரண்டு காய்கறிக் கடைகளும் ஒரு மருந்துக் கடையும் இருந்தன. அப்புறம் நான் நின்றிருந்த ஜெராக்ஸ் கடை. அதற்குப் பிறகு ஒரு துணிக்கடை. சிற்றுண்டி விடுதி. பால் பூத். அவற்றைக் கடந்ததும் கம்பிவேலியால் பாதுகாக்கப்படும் ஒரு காலி மனை இருந்தது. ஆறு பேரும் சரியாக அந்த இடத்தை அடைந்து நின்றனர்.

ஊன்றுகோலை மடக்கிச் சுருட்டி பைக்குள் போட்டுக்கொண்டு, தோள் பையில் இருந்த இசைக்கருவிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே வைத்தனர். பேட்டரியிலிருந்து ஸ்விட்ச் போர்டு வழியாக கீ போர்டுக்கும் ஸ்பீக்கருக்கும் இணைப்பைக் கொடுத்தார் ஒருவர். ஹேண்ட் மைக் வைத்திருந்த பாடகர் ’ஹலோ ஹலோ’ என்று சொல்ல, குரல் எதிரொலியை அளவாகக் கொண்டு வால்யூமைச் சரிப்படுத்தினார் ஒரு பெண்மணி. மரப்பெட்டி போன்ற உண்டியலைத் தனக்கு அருகில் வைத்துக் கொண்டான் சிறுவன்.

“ஊர்ப் பெருமக்களே, தாய்மார்களே, அண்ணன்மார்களே, தம்பிமார்களே, உங்கள் அனைவருக்கும் இந்தக் காலை வேளையில் சிட்டுக்குருவிகள் இசைக் குழு சார்பில் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கணீரென்ற குரலோடு பேசத் தொடங்கினார் பெரியவர்.

“இந்த இனிய பொன்னான நேரத்தில் உங்களை மகிழ்விப்பதற்காகச் சுவையான பாடல்களோடு வந்திருக்கிறோம். தாராள மனதோடு நீங்கள் அளிக்கவிருக்கும் நன்கொடைக்காகக் காத்திருக்கிறோம். இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்காக முதல் பாடல் ஒலிக்க இருக்கிறது.”

அவருடைய குரல் அனைவரையும் வசீகரித்தது. நடப்பது என்ன என அறிய விரும்புவதுபோலப் பலர் சாலையோரமாகவே வண்டியை நிறுத்திவிட்டு அவர்களைக் கவனித்தனர். நானும் கடை வாசலில் நின்ற படியே அவர்களை ஊன்றிக் கவனிக்கத் தொடங்கினேன்.

முதலில் கீ போர்டு சீராக ஒலிக்கத் தொடங்கி யது. விதவிதமான இசைத்துணுக்குகள் எழுந்துவந்தன. ஏதோ ஒரு கணத்தில் டிரம், கிதார், புல்லாங்குழல், கீபோர்டு எல்லா வற்றுக்கும் இடையில் ஓர் ஒத்திசைவு நிகழ, இசை ஒரு நதியைப்போல பாய்ந்தோடத் தொடங்கியது.

“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே” என்று ஒரு பெண் இனிய குரலில் பாடத் தொடங்கினார்.

அந்தப் பாட்டின் கடைசி சரணத்தை அவர் பாடிக்கொண்டிருந்தபோது, காந்தி சிலையின் திசையிலிருந்து ஒரு புல்லட் தடதடவென்று சத்தமெழுப்பியபடி மெதுவாக ஊர்ந்து வந்தது. சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டிக் கடைக்காரர்களையும் சாக்கு விரித்து காய்கறிகளை விற்கும் சில்லறை வியாபாரிகளையும் இடத்தைக் காலி செய்யும்படி சொல்லிக்கொண்டே வந்தார் ஒரு போலீஸ்காரர். ”மினிஸ்டர் வராருய்யா. இன்னைக்குப் போயிட்டு நாளைக்கு வாங்க, போங்க” என்றார் அவர்.

சில கடை வியாபாரிகள் அவரோடு பேச்சு வார்த்தையில் இறங்கினார்கள். ஆனால், எதுவும் எடுபடவில்லை. கடைசியில் முணுமுணுத்தபடி கடைகளை மூடி மூட்டையாக எடுத்துக்கொண்டு வெளியேறினார்கள்.

வாகனத்திலேயே குறைந்த வேகத்தில் வந்த போலீஸ்காரர் பார்வையற்றோர் இசைக்குழு நின்றிருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கினார். அப்போது அவர்கள் ஒவ்வொரு பூக்களுமே பாட்டை அடுத்து ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ பாடலைப் பாடத் தொடங்கி யிருந்தனர். வேகமாக கீ போர்டுகாரரை நெருங்கிய போலீஸ்காரர், “தம்பி, இன்னைக்கு இது போதும். மூட்டையைக் கட்டிட்டு கெளம்பு சீக்கிரம்” என்று தோரணையோடு சொன்னார். இசையும் பாடலும் சட்டென்று நின்றன.

அந்தக் குரல் வந்த திசையைப் பார்த்துக் கைகுவித்த பெரியவர், ”சார்... நாங்க யாருக்கும் தொந்தரவு தராம இப்படி ஓரமா இன்னும் கொஞ்ச நேரம் பாடிட்டுப் போயிடறோம். கொஞ்சம் மனசு வைங்க சார்” என்று தாழ்மையான குரலில் கெஞ்சினார்.

“மினிஸ்டர் வந்து போற வரைக்கும் என்னால் ஒண்ணும் செய்ய முடியாதுய்யா. மொதல்ல இங்கேருந்து கெளம்புங்க.”

“திடீர்னு போங்கன்னு சொன்னா நாங்க எங்க போக முடியும் சார்? பாட்டு கேக்கறவங்க நாலு பேரு அஞ்சோ பத்தோ கொடுத்தாத்தான எங்க பொழைப்பு ஓடும்?”

“வயசுல பெரியவரா இருக்கீங்கன்னுதான் இவ்ளோ நேரம் பொறுமையா பேசறேன். மொதல்ல பொட்டிய தூக்கிட்டு நடையைக் கட்டுங்க” என்று சத்தமாகச் சொன்னார் போலீஸ்காரர். அடுத்த கணமே அவர் குரல் தணிந்தது.

“ரெண்டு நாள் முன்னால கஸ்தூரிபாய் ரோட்டுல, அதுக்கு முன்னால அப்துல் கலாம் சிலைகிட்ட, அதுக்கும் முன்னால அம்மன் கோயில்கிட்ட பாடிட்ருந்தீங்களே, அப்ப யாராவது விரட்டினாங்களா? பார்த்தும் பார்க்காத மாதிரிதான போனோம்? இன்னைக்கு ஒரு பிரச்சினை இருக்குதுங்கறதாலதான் போகச் சொல்றோம். புரிஞ்சிக்க வேணாமா? எனக்கு மேல இருக்கறவன் கேள்வி கேட்டா நான் என்னன்னு பதில் சொல்றது?”

அதற்குப் பிறகு பெரியவர் ஒன்றும் பேசவில்லை. ”சரிங்க சார்” என்று சொல்லிவிட்டு மற்றவர்களின் தோள்களில் தட்டிப் புறப்படும்படி உணர்த்தினார்.

போலீஸ்காரர் அங்கிருந்து நடந்து அடுத்தடுத்த இடங்களில் சாலையோரத்தில் கடை விரித்தவர்களை எச்சரித்து எழுந்துபோகச் செய்துவிட்டுத் திரும்பினார். அதற்குள் எல்லாச் சாமான்களையும் எடுத்து பைகளுக்குள் திணித்துவிட்டனர். மடித்துவைத்த ஊன்று கோலை உதறி மீண்டும் நீளமான கோலாக்கித் தட்டியபடி ஒருவர் தோளை மற்றவர் பற்றிக்கொண்டு வரிசையாகத் திரும்பி நடந்தனர்.

அவர்கள் செல்வதைப் பார்த்தபடி தன் வாகனத்தில் ஏறி உட்கார்ந்தார் போலீஸ் காரர். ஸ்டார்ட் செய்யும்போது இடது கைப்பிடியில் பொருத்தியிருந்த வழிகாட்டிக் கண்ணாடியில் ஆறு பேரும் வரிசையாக நடந்துசெல்லும் சித்திரம் தெரிந்தது. ஒரு பெருமூச்சுடன் வாகனத்திலிருந்து இறங்கி, “பெரியவரே, நில்லுங்க” என்று சத்தமாக அழைத்தார்.

பெரியவருக்கு அந்தக் குரல் கேட்கவில்லை. உடனே படியிறங்கிச் சென்று பெரியவரை நிறுத்தி போலீஸ்காரர் அழைப்பதைச் சொன்னேன். சிட்டுக்குருவி இசைக்குழுவைச் சேர்ந்த ஆறு பேரும் நின்றார்கள்.

போலீஸ்காரரின் காலடி ஓசை சமீபமாக வருவதை உணர்ந்து, “சொல்லுங்க சார், இதோ போயிட்டிருக்கோம்” என்றார் பெரியவர்.

போலீஸ்காரர் தன் பையிலிருந்து இருநூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து, ”வச்சிக்குங்க’ என்றபடி அவருடைய கையில் வைத்துவிட்டுத் திரும்பி நடந்தார்.

(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)

- writerpaavannan2015@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in