

பழம் வாங்கிக்கொண்டு கடையிலிருந்து வெளியே வந்தபோது செல்வகுமார் நின்றிருந்தார். “என்ன சார்? திடீர்னு இந்தப் பக்கமா வந்திருக்கீங்க” என்று கேட்டேன். “வாங்க சொல்றேன்” என்றபடி எதிர்ப்புறத்தில் நிறுத்தியிருந்த வாகனத்தை நோக்கி அவர் நடந்தார். நான் அவர் பின்னாடியே சென்றேன்.
வண்டிக்கு அருகில் சென்றதும் தன் இரண்டு கைகளையும் என் தோள்களில் வைத்து அழுத்தி, “வந்தனம் சார் நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட் டாருப்பா” என்று கண்கலங்கச் சொன்னார்.
அதைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“என்ன சார் சொல்றீங்க? பார்க்கறதுக்கு மிலிட்டரிக்காரர் மாதிரி இருப்பாரே. ஆரோக்கியத்துல ரொம்ப அக்கறையா இருக்கற ஆளாச்சே. அவரு எப்படி? ஏதாச்சும் ஃபேக் நியூஸா இருக்கலாம். யார் சொன்னாங்க உங்களுக்கு? போன வாரம்கூட நான் அவர்கிட்ட பேசினேன்.”
“ஃபேக் இல்லைப்பா. உண்மைதான். அதை கன்ஃபர்ம் பண்ணிட்டேன். நேத்தே போயிட்டாராம். இன்னைக்கு எடுக்கறாங்க.”
“என்ன சார் சொல்றீங்க? நேத்தா? தன் பிள்ளைங்க கூடத்தானே இருந்தாரு அவரு? அவனுங்க ரெண்டு பேருக்குமே நம்ம செட்டு ஆளுங்க எல்லாரையுமே தெரியுமே? அப்புறம் ஏன் அவனுங்க நமக்குச் சொல்லலை?”
“அதான் புரியலை. காலையிலதான் எனக்குத் தகவல் கிடைச்சது. அந்தப் பிள்ளைங்களுக்கு உடனே போன் பண்ணினேன். ஒரு ரெஸ்பான்ஸும் இல்லை. அதுக்கப்புறம் நம்ம கனகராஜு கிட்ட சொன்னேன். அவரு அவங்க வீட்டுப் பக்கமா போய்ப் பார்த்துட்டு இப்பதான் கன்ஃபர்ம் செஞ்சாரு. அதனாலதான் உடனே விஷயத்தைச் சொல்றதுக்காக உங்களைத் தேடி வந்தேன்.”
“என்னால நம்பவே முடியலையே சார். இருபது, இருபத்தஞ்சு வருஷமா நாம எல்லாருமே ஒண்ணா வேலை பார்த்திருக்கோம். எல்லார் வீட்டுலயும் எல்லா விழாக்களிலும் கலந்திருக்கோம். மரணம்கறது எவ்வளவு பெரிய விஷயம். மூணாவது மனுசன் மாதிரி இப்படித் தகவல்கூடத் தெரிவிக்காம எடுத்துட்டுப் போய் வேலையை முடிக்கணும்னு நெனைக்கறாங்கன்னா என்ன அர்த்தம்? எனக்கு எதுவுமே புரியலையே…”
“அவனுங்க ஃபேஸ்புக்ல இதைப்பத்தி நேத்தே ஒரு பதிவு போட்டிருந்தானுங் களாம். நாமதான் அந்த உலகத்துலயே இல்லாத ஆளுங்களாச்சே. அதனால நமக்குத் தெரியாம போயிருச்சு. பேட்ரிக்தான் பார்த்துட்டுச் சொன்னான்.”
“அடப்பாவிகளா…”
“தயவுசெஞ்சு துக்கம் விசாரிச்சிக் கிட்டு யாரும் வராதீங்கன்னு ஒரு வேண்டுகோள் வேற எழுதியிருந்தாங் களாம். நாம போய்ச் சேர்றதுக்குள்ள வச்சிருப்பாங்களோ எடுத்திருப்பாங்களோ தெரியலை. போகலாம்.”
எனக்குக் கோபமாக வந்தது. அதே நேரத்தில் துக்கம் தொண்டையை அடைத்தது. அழுகை பொங்கியது. என்னால் ஒழுங்காகப் பேச முடிய வில்லை.
“நம்ம பாலு, ராமலிங்கம் எல்லாருக்கும் சொல்ல வேணாமா? அவங்களும் வரணுமில்ல?”
“எல்லாருக்கும் தகவல் சொல்லிட் டேம்பா. அவங்க நேரா அங்க வந்துடு வாங்க. நீங்க மொபைல வீட்டுல வச்சிட்டு வந்திட்டீங்க போல. ஒங்க ஒய்ஃப்தான் எடுத்துப் பேசினாங்க. நீங்க கடைத்தெருவுக்குப் போயிருக்கிறதா அவங்க சொல்லித்தான் இங்க வந்தேன்.”
நான் பின்னிருக்கையில் அமர்ந்ததும் செல்வகுமார் வண்டியை எடுத்தார்.
நான், செல்வகுமார், கனகராஜ், பேட்ரிக் நான்கு பேரும் எண்பதாவது வருஷத்து பேட்ச் வழியாகத் துறையில் இணைந்தவர்கள். பாலு, ராமலிங்கம் இருவருமே எண்பத்திரண்டாவது பேட்ச்காரர்கள். ஆனாலும், நாங்கள் எல்லாருமே முப்பது வருஷங்களுக்கும் மேலாக ஒன்றாகவே வேலைசெய்தோம். அக்கம் பக்கத்து நகரங்களுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் இடையிடையே மாற்றலாகிச் சென்றாலும் எங்கள் குடும்பங்கள் நகரத்திலேயே இருந்தன. அனைவரும் ஒரு குடும்பத்துப் பிள்ளை களாக ஒன்றாகவே பழகினோம்.
வந்தனம் சார் எழுபத்துநான்காவது பேட்ச். நாங்கள் துறைக்குள் காலடி எடுத்துவைத்தபோது அவர் எங்களுக்கு சீனியராக இருந்தவர். வந்தனம் என்பது நாங்கள் அவருக்குச் சூட்டிய செல்லப்பெயர். அவர் பெயர் ராஜகோபால். ‘வந்தனம் சார் வந்தனம் சார்’ என்று நாங்கள் அழைப்பதைப் பார்த்துவிட்டு, மொத்த அலுவலகமே அவரை அந்தப் பெயரால் அழைக்கத் தொடங்கிவிட்டது. எல்லாரும் ஒருவரை இன்னொருவர் பார்த்ததுமே குட்மார்னிங் என்றோ வணக்கம் என்றோ சொன்ன காலத்தில், அவர் ‘வந்தனம்பா வந்தனம்’ என்று வித்தியாசமாகச் சொன்ன முறைதான் இதற்கு மூலக் காரணம்.
“இந்த வந்தனத்தை எங்கே இருந்து புடிச்சீங்க சார்?” என்று ஒருநாள் கேட்டேன்.
“இதுதான்யா ஆதிகாலத்து வார்த்தை. நம்ம ஊருல தெருக்கூத்து பார்த்திருக்கே, இல்லையா? அதுல வந்தனம் வந்தனம்னுதானே சொல்றாங்க. எங்க கடலூரு பக்கம் கூத்துப் பார்த்துப் பார்த்து வந்தனம்கற வார்த்தை ஒட்டிக்கிச்சி.”
எல்லாருக்கும் அவர் அந்தப் பதிலைத் தான் சொல்வது வழக்கம். அது ஓரளவுதான் உண்மை. அவருடைய அப்பா கடலூர் வட்டாரத்தில் பெரிய கூத்து வாத்தியார். அவரை நம்பி ஒரு கூட்டமே வாழ்ந்து வந்தது. ஆனால் தனக்குப் பின்னால் கூத்து, குடும்பத் தொழிலாக நீடிக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
அதனால், மகனைத் தன்னுடைய தங்கை வீட்டுக்கு அனுப்பிப் படிக்கவைத்து, பட்டதாரியாக்கி, வெளிமாநிலத்துக்கு வேலை செய்ய அனுப்பி வைத்துவிட்டார். கூத்து வாசனையே மகன் மீது படக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் நினைத்தபடியே எல்லாம் நடந்தது. எல்லாவற்றையும் துறந்த மகன் அந்த வந்தனத்தை மட்டும் வைத்துக் கொண்டார்.
அவரைப் பற்றிய நினைவுகளே மீண்டும் மீண்டும் நெஞ்சில் அலை மோதின. சீனியர், ஜுனியர் வேறுபாடின்றி அனைவரோடும் ஒரு நண்பரைப் போலப் பழகியவர். எங்கள் எல்லாருடைய வாழ்க்கையிலும் எல்லா நல்லது, கெட்டதுகளிலும் கூடவே நின்றார்.
வந்தனம் சார் வாழ்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பு இருந்த தெருவை அடைந் தோம். வாசலில் நின்றிருந்த இந்திக்காரக் காவலர் தம் கைபேசியில் எங்களைப் படமெடுத்து உள்ளே அனுப்பினார்.
அந்த இடத்தின் அமைதி அச்சமூட்டு வதாக இருந்தது. மனிதர்களே தென்பட வில்லை. வந்தனம் சார் வாழ்ந்த வீட்டை அடைந்தோம். வளாகத்தின் வாசலில் அமரர் ஊர்தி நின்றிருந்தது. அதன் கதவுக்கருகே வந்தனம் சாரின் இரண்டு பிள்ளைகளும் நின்றிருந்தனர். நாங்கள் வேகமாகச் சென்று அவர்கள் கைகளைப் பற்றினோம். அழுகை வந்தது. ஏதோ கேட்க குரலெழுப்பினோம். “அங்கிள், ப்ளீஸ்” என்றபடி மூத்த பிள்ளை உதட்டின் மீது தன் விரலை வைத்து அமைதி காக்கும்படி தெரிவித்தான். அக்கணத்தில் அவன் முகத்தைப் பார்க்க அச்சமாக இருந்தது.
திகைத்து நின்றிருந்த கணத்தில் நான்கு ஊழியர்கள் ஒரு படுக்கையில் வந்தனம் சாரைச் சுமந்துவந்தனர். வண்டியில் அவரை ஏற்றும் முன் அவர் முகத்தைப் பார்த்தோம். கனகராஜ் தன்னிட மிருந்த ரோஜா மாலையை அவர் மீது வைத்தார். ஒவ்வொருவராக அவருடைய காலடியைத் தொட்டு வணங்கினோம். அடுத்த கணம் ஊழியர்கள் அவர் பூத உடலை வாகனத்தில் ஏற்றிவிட்டு, அவர்களும் ஏறிக்கொண்டனர்.
“வந்தனம் சார். நல்லபடியா போங்க. ரெஸ்ட் இன் பீஸ்” என்று ஓங்கி, உடைந்த குரலில் சொன்னார் ராமலிங்கம்.
அதைக் கேட்டு திகைத்த அவரது இரண்டு பிள்ளைகளும் மெளனமாக வாகனத்தின் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
வாகனம் பார்வையைவிட்டு மறைந்தது. திடீரென ராமலிங்கம் குலுங்கிக் குலுங்கி அழுதார். எங்கள் விழிகளிலும் கண்ணீர் வழியத் தொடங்கியது.
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)
- writerpaavannan2015@gmail.com