ஒரு படம் வரைந்து கொடுக்க முடியுமா? | வண்ணக் கிளிஞ்சல்கள் 21

ஒரு படம் வரைந்து கொடுக்க முடியுமா? | வண்ணக் கிளிஞ்சல்கள் 21
Updated on
3 min read

போதுமான அளவு ரத்தத்தை எடுத்து, மேசையில் வைத்திருந்த கண்ணாடிக் குழாயில் நிரப்பிக்கொண்ட தும், “மதியானம் ஒரு மணிக்கு வந்து ரிசல்ட் வாங்கிக்குங்க சார்” என்றார் நர்ஸ்.

பரிசோதனைக்கூடத்தைவிட்டு வெளியேறி சாலைக்கு வந்தேன். சிறிது நேரம் இரைச்சலிட்டபடி பறந்து செல்லும் வாகனங்களின் வரிசைகளை வேடிக்கை பார்த்தேன். பிறகு, ஒரு திட்டமும் இல்லாமல் கிழக்குப் பக்கமாக நடக்கத் தொடங்கினேன்.

நான்கைந்து சரக்கொன்றை மரங்கள் சாலையோரத்தில் வரிசையாகக் காணப்பட்டன. அந்தக் கொன்றை மரத்தடிதான் அந்த வட்டாரத்தின் பேருந்து நிறுத்தம். ஒன்றிரண்டு பேருந்துகள் அங்கே நின்று சென்றன. சிலர் இறங்கி வேகமாக நடந்துசென்றார்கள். சிலர் ஏறிச் சென்றனர்.

சற்றே தள்ளி உருண்டிருந்த உயரமானதொரு கல் மீது இளைஞர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். மடி மீது ஒரு பெரிய நோட்டில் எதையோ வேகமாக வரைந்து கொண்டிருந்தார். அவர் விரல்கள் இயங்கிய வேகம் வியப்பளிப்பதாக இருந்தது. நொடிக்கு ஒருமுறை அவர் கண்கள் மட்டும் உயர்ந்து எதிர்த்திசையில் பார்த்துவிட்டு, பிறகு நோட்டின் மீது படிந்தன.

நின்றிருந்த இடத்திலிருந்தே அவர் மடியில் வைத்திருந்த நோட்டைப் பார்த்தேன். வேகமாக அவர் இழுத்த கோடுகளின் நடுவில் திடீரென இரண்டுசக்கர வாகனத்தின் மீது சாய்ந்தபடி நின்றிருக்கும் ஒரு பெண்ணின் உருவம் திரண்டு வந்த காட்சி அற்புதமான அனுபவமாக இருந்தது. நான் நிமிர்ந்து எதிர்த்திசையில் பார்த்தேன்.

ஒரு பெண் அதே நிலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தை ஒட்டி நின்றிருந்தார். அந்த வாகனத்தின் கைப்பிடியைப் பிடித்தபடி நின்றிருந்த ஓர் இளைஞரோடு அவர் ஏதோ உரையாடலில் மூழ்கியிருந்தார். அவர் சாயலை அப்படியே ஓவியத்தில் பார்க்க முடிந்தது. ஆனால், அந்த இளைஞரின் உருவம் அந்த ஓவியத்தில் இல்லை.

அடுத்த பக்கத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு சிறிது நேரம் தெருவில் நடமாடிக் கொண்டிருந்த மனிதர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார் அந்த இளைஞர். நூற்றுக் கணக்கானவர்கள் நடமாடும் அந்தத் தெருவில், அவர் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்னும் கேள்வி எனக்குள் சுவாரசிய மூட்டியது.

கொய்யாப்பழங்கள் நிறைந்த கூடையோடு வாகனங்களின் ஜன்னல்களுக்கு அருகில் நிற்கும் சிறுமி, சுவரோரமாகத் தையல் மிஷினில் பழைய துணிகளைத் தைத்துக்கொண்டிருக்கும் பெண்மணி, சூடான டீ டம்ளரை விரல்நடுங்கப் பிடித்துக்கொண்டு குனிந்து துளித்துளியாக அருந்தும் தாத்தா என நானாகச் சிலரைத் தேர்ந்தெடுத்து ஒரு பட்டியலை உருவாக்கத் தொடங்கினேன்.

அவர் மீண்டும் குனிந்து நோட்டில் வரையத் தொடங்கியதும், நான் அவருடைய நோட்டைக் கவனிக்கத் தொடங்கினேன். கோடுகள் அழுத்தமும் திருத்தமும் அடைந்த கணத்தில், இரண்டு கைகளிலும் சுமைமிக்க இரண்டு பைகளைப் பிடித்தபடி பேருந்து வரும் திசையில் பார்த்தபடி சோகமான முகத்துடன் காத்திருக்கும் ஒரு பெண்மணியின் உருவத்தைப் பார்க்க முடிந்தது.

எதிர்த்திசையில் இருந்த நிறுத்தத்தில் அந்தப் பெண்மணி நின்றிருப்பதையும் பார்த்தேன். என் கண்களுக்கு அவர் ஏன் தென்படவில்லை என்பதை நினைக்க ஆச்சரியமாக இருந்தது.

அடுத்து, தொலைவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியபடி நின்றிருந்த ஒரு பெண் காவலரை அவர் வரைந்தார். அவரும் என் பட்டியலில் இல்லாதவர். சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு மூங்கில் குச்சியில் கட்டப்பட்ட வண்ண பலூன்களோடு, சிறுமி ஒருவர் நிழலுக்காகக் கொன்றை மரத்தடிக்கு வந்து நின்றார். அந்த இளைஞர் ஓவியம் தீட்டுவதைப் பார்த்ததும் அங்கேயே நின்றுவிட்டார்.

அப்போது இளைஞர் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு கடைக்குச் செல்லும் ஒரு சிறுமியையும் அந்த வண்டியைத் தள்ளிய நிலையில் பின்னால் நிற்கும் பெண்மணியையும் வரைந்து கொண்டிருந்தார். அவர் வரைந்து முடிப்பதற்காகவே காத்திருந்தவர்போல அருகில் சென்று, “சூப்பரா இருக்குண்ணே. அந்த அக்காவை அப்படியே போட்டா புடிச்ச மாதிரி வரைஞ்சிட்டீங்க” என்று சொல்லிக்கொண்டே புன்னகை செய்தார் சிறுமி.

இளைஞர் சிறுமியிடம் சில கேள்விகள் கேட்டார். அவரும் உற்சாகமாகப் பதில் சொன்னார். வரைவதை நிறுத்திவிட்டு, சிறுமியோடு உரையாடத் தொடங்கிவிட்டார்.

திடீரென்று, “ஏதாவது பேசிட்டே இரு” என்று சொல்லிவிட்டு, அந்தச் சிறுமியை வரையத் தொடங்கினார். சில நிமிடங்களிலேயே முகத்தின் சாயலை மிக எளிதாகக் கொண்டு வந்துவிட்டார்.

சிறுமியை அழைத்து அந்த ஓவியத்தைக் காட்டினார். ஒரு கணம் வெட்கத்தில் சிறுமி கண்களை மூடித் திறந்தார். கண்ணீர்த்துளிகள் திரண்டு நின்றன. ஆயினும் புன்னகையோடு, “டபுள் சூப்பர்ண்ணே. போட்டா புடிச்ச மாதிரி இருக்குது” என்றார்.

இளைஞருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அந்தச் சிறுமியை வெவ்வேறு இடங்களில் நிற்கவைத்தும் அமரவைத்தும் சில படங்களை வரைந்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

இளைஞர் சிறுமியின் எல்லா ஓவியங்களையும் நோட்டிலிருந்து கிழித்து, “இந்தா, எல்லாத்தையும் நீயே வச்சிக்கோ. அம்மா, அப்பாகிட்ட காட்டு” என்றபடி கொடுத்தார். “ஐயோ, எனக்கு எதுக்குண்ணே?” என்று கேட்டுக்கொண்டே அவற்றை வாங்கி, பைக்குள் வைத்துக்கொண்டார்.

சிறுமியோடு இளைஞர் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்த நேரத்தில் அந்த நிறுத்தத்திலேயே வெகு நேரமாக நின்றிருந்த ஒரு பெரியவர், “படம் வரையற ஆளா நீங்க?” என்று குறுக்கிட்டார். அந்த இளைஞர், ”ஆமா” என்று ஆர்வமில்லாமல் பதில் சொன்னார்.

ஆயினும் அவர் கவனத்தை ஈர்ப்பதிலேயே குறியாக இருந்த அந்தப் பெரியவர், “ஒரு படம் வரைஞ்சா எவ்ளோ கெடைக்கும்?” என்றார்.

“பணத்துக்காக வரையறதில்லைங்க. எல்லாமே ஒரு ஆர்வத்துக்காகத்தான்.”

“என்னப்பா நீ? இந்தக் காலத்துல இப்படிப் பொழைக்கத் தெரியாத புள்ளையா இருக்கியே நீ?”

இளைஞர் பதில் சொல்லவில்லை.

“சரி, அதையெல்லாம் உடு. விஷயத்துக்கு வரேன். இப்ப இந்தப் பாப்பாவ வரைஞ்சியே, அதே மாதிரி என்னைப் படம் வரைஞ்சி கொடுக்கறீயா? ஒரு படத்துக்கு 200 கொடுக்கறேன்” என்றார் அந்தப் பெரியவர்.

இளைஞர் முடியாது என்று தலையை அசைத்தார்.

“300 கொடுக்கறேன், போதுமா? வீட்டுச் சுவத்துல ஃப்ரேம் போட்டு வச்சிக்குவேன்.”

அந்த இளைஞர் பதில் சொல்லாமல், நோட்டுப் புத்தகங்களைப் பையில் மடித்து வைத்துக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டார். அந்தச் சிறுமியும் அவருக்குப் பின்னால் சென்றார்.

பெரியவர் தன் முயற்சியைக் கைவிடாதவராக நான்கைந்து முறை மீண்டும் மீண்டும் அழைத்தார்.

“500 ரூபாயா வச்சிக்கோ, வாப்பா” என்றார்.

இளைஞர் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து மறைந்துவிட்டார்.

(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)

- writerpaavannan2015@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in