

மக்களின் நம்பிக்கைகளும் அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் பின்பற்றப்படுகிற சிறு தெய்வங்களுக்கான சடங்குகளும் எப்போதும் ஆச்சரியத்தைத் தருகின்றன. வீராவேசம் கொண்ட தெய்வங்களையும் மக்களையும் இணைப்பவை வழிபாட்டு முறைகள்தான்.
இந்த முறைகளில் வழிபடுபவர்கள் தெய்வங்களிடம் கோரிக்கை வைப்பதும், தங்கள் தேவைகளுக்காக வழிபடும் மக்களிடம் தெய்வங்கள் கோரிக்கை வைப்பதும் வெகு இயல்பு. அதேபோல, கிராமங்களில் இருக்கும் சிறு தெய்வங்களுக்கான கதைகளும் வியப்பை அள்ளித் தெளிக்கின்றன.
தென்காசி மாவட்டம் கீழாம்பூரில் இருக்கும் மந்திரமூர்த்தி கோயிலுக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். இதன் பீடம் மற்ற கோயில்களைவிட அதிக உயரம் கொண்டது. அதாவது 24 அடி! ஒவ்வொரு கோயிலிலும் இருக்கும் 21 பீடங்களைக் கொண்ட சாமிகள், இங்கும் வெள்ளையடிக்கப்பட்ட பீடங்களில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற மந்திரமூர்த்தி சாமிக்கும் இதற்குமான கதை வேறுபட்டது. இந்த மந்திரமூர்த்தியை, ஐந்து சாமிகளின் கூட்டு என்கிறார்கள்.
சங்கிலி பூதத்தார், பலவேசக்காரன், பட்டவரையன், தூண்டில் மாடன், பகவதி அம்மன் என ஒவ்வொரு சாமியின் பெயரையும் எனக்குச் சொல்லிக்கொண்டு வந்தார் நண்பர்.
அதில், ஓர் ஏவல் தெய்வத்தின் பெயரைக் கேட்டதும், அவரை நிறுத்தி இன்னொரு முறை சொல்லச் சொன்னேன். அப்போதும் அவர் அதையேதான் சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த ஏவல் சாமியின் பெயர் 'ஆக்குப்பறை முண்டன்'. இப்படியொரு பெயரா என்று கேட்டேன். ’முண்டன்’ என்கிற பெயரில் சில கோயில்களில் சாமியைப் பார்க்கலாம். ஆனால், ஆக்குப்பறை முண்டன் என்கிற சாமியை வேறு எங்கும் பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.
“இவர் ஏவல் சாமி. கோயிலின் முதன்மைச் சாமி ஏவுகிற வேலையைச் செய்கிறவர். ‘ஆக்குப்பறை’ என்பது, சமையல் செய்யும் இடம். கோயிலில் சாமிக்கு சைவம், அசைவம் சமைக்கும்போது, யாராவது ருசி பார்த்துவிட்டாலோ திருட்டுத்தனமாக எடுத்து வாயில் போட்டுவிட்டாலோ தலைமைச் சாமியிடம் போட்டுக் கொடுக்கும் வேலையை இந்த ஆக்குப்பறை முண்டன் செய்வார்.
அதாவது ஆக்குப்பறையைக் காவல் காக்கும் சாமி இது. இவர் அனுமதியின்றி சாமிக்குப் படைக்கப்படும் சாப்பாட்டைச் சாப்பிடவும் எடுத்துச் செல்லவும் முடியாது. சாமிக்குப் படைப்பதற்காக, அடுப்பு பற்ற வைக்கும் முன் இந்த ஆக்குப்பறை முண்டனுக்குத் தட்சிணை வைக்க வேண்டும். வெற்றிலை, பழம், பாக்கு வைத்துக் கும்பிட்ட பிறகுதான், அடுப்பைப் பற்ற வைக்க முடியும்” என்றார். ஆக்குப்பறை முண்டனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.