நினைவுகள் மறப்பதில்லை: சித்தாசன்கள் எங்கே போனார்கள்?

நினைவுகள் மறப்பதில்லை: சித்தாசன்கள் எங்கே போனார்கள்?
Updated on
2 min read

தமிழ்நாட்டின் தென் எல்லையில் உள்ள ஆழ்வார்குறிச்சியில்தான் ‘சித்தாசன்’ என்கிற பெயரைக் கேள்விப்பட்டேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போது மார்கழி மாதத்தின் ஒரு காலை வேளையில் பெருமாள் கோயிலில் பிரசாதம் வாங்குவதற்காக நண்பர்களுடன் சென்றேன்.

அப்போது ஒரு விசித்திரமான மணிச் சத்தம் கேட்டது. “சித்தாசன் வந்தாச்சு போலிருக்கே?” என்றார் கோயில் குருக்கள். அவ்வளவுதான், கோயிலில் பாட்டுப் பாட, பிரசாதம் வாங்க வந்திருந்த பெரியவர்கள் தங்கள் வீட்டை நோக்கி வேகமாக நடந்தனர். எங்களையும் வீட்டுக்குப் போகச் சொன்னார்கள். எதுவும் புரியாமல் நாங்களும் வீட்டுக்கு வந்தோம்.

என் அம்மாவிடம், “சித்தாசன்னா யாரும்மா?” என்றேன். “தெரியாது. ஆனா அவங்க திருச்செந்தூர்ப் பக்கத்துல இருந்து வருசத்துக்கு ஒரு தடவை கூட்டமா வருவாங்க. அவங்களுக்கு அரிசியும் காசும் குடுக்கணும். இல்லைன்னா சபிச்சிருவாங்க” என்றார். கல்லூரிப் பேராசிரியரான அப்பா, “அதெல்லாம் ஒண்ணுமில்ல. அவங்க சாதாரண மனுஷங்கதான். ஊர் ஊராகச் சுத்திட்டு இருப்பாங்க” என்றார். உடனே அம்மா என்னைத் தனியாக அழைத்து, “சித்தாசன்னா மந்திரவாதிங்க. சுடுகாட்டுல பூஜை பண்ணி மை வெச்சிருப்பாங்க. அதை நமக்கே தெரியாம நம்ம மேல தடவுவாங்க. அப்புறம் நாம அவங்க பின்னாடியே போயிருவோம்” என்றார்.

எங்கள் வீட்டிலும் கேட்டது அந்த மணிச் சத்தம். கையில் அரிசி நிறைந்த பாத்திரமும் 50 பைசாவும் எடுத்துக்கொண்டு அம்மா சென்றார். சித்தாசன் எப்படி இருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்காகவும் அம்மா மீது மையைத் தடவி விட்டால் என்ன செய்வது என்கிற பயத்திலும் அம்மாவைப் பின்தொடர்ந்து சென்றேன்.

உயரமாக, தலைமுடியைச் சிறு பின்னல்களாகப் பின்னி அவற்றைக் கொண்டை போலப் போட்டு, நீண்ட அங்கி அணிந்து நின்றிருந்தார் ஒருவர். நெற்றியில் பளீரென்ற விபூதி, குங்குமம். அவரது கம்பீரமான தோற்றம் என்னைத் திகைக்க வைத்தது. தோளில் பைபோல இருந்ததை அவர் காட்ட, அதில் அரிசியையும் தகர டப்பாவில் காசும் போட்டார் அம்மா.

சித்தாசன் தரையில் இருந்த மண்ணைக் குழைத்து எங்கள் வீட்டு முகப்புச் சுவரில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து, அதன் நடுவில் புள்ளி வைத்தார். அப்படியானால் அந்த வீட்டுக்கு ஏற்கெனவே ஒரு சித்தாசன் வந்துவிட்டுப் போய்விட்டார் என்று அர்த்தமாம்.

மறுநாள் பள்ளியில் சித்தாசன்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் அம்மாக்களும் ஏதோ ஓர் ஊரில் ஒரு வீட்டின் தலைப்பிள்ளையை அழைத்துச் சென்று விட்டார்களாம், திருமணமான பெண்ணைக் கூட்டிச் சென்று விட்டார்களாம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் எந்த ஊர்,யார் வீட்டுப் பையன், பெண் என்று யாருக்குமே தெரியாது.

மீண்டும் அடுத்த ஆண்டும் மார்கழி மாதம் சித்தாசன்கள் வந்தார்கள். மீண்டும் அதே பேச்சுகள், கற்பனைகள் உலா வந்தன. இப்படியே மூன்று ஆண்டுகள் கழிந்தன. அதற்குப் பிறகு அவர்கள் வரவே இல்லை.

இன்றும் மார்கழி மாதத்தில் என்னையும் அறியாமல் சித்தாசன்களின் நினைவு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு விழாவுக்குச் சென்றிருந்தபோது, எங்கள் ஊர் மாமி ஒருவர், “என்ன இது? சித்தாசன் மாதிரி ஒரு கவுன் போட்டுட்டு வந்திருக்கே?” என்றார். சித்தாசன்கள் எங்கள் நினைவுகளில் இருக்கிறார்கள்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in