

“பால்குடத்த கவுத்த மாதிரி ஜோக் எப்படிக் கொட்டுது பாருங்க” என்று அருவியின் பக்கம் சுட்டிக்காட்டினார் நண்பர். பார்வையாளர் தடுப்புவளையத்துக்கு அருகில் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். சீறிப் பொங்கி விழும் அருவியின் வேகத்தைப் பார்த்ததும் பித்துப் பிடித்ததுபோல இருந்தது. ஒரே தாவாகத் தாவி அருவியோடு சேர்ந்து நாமும் விழ வேண்டும் என்று மனம் துடித்தது.
“ஆயிரம் அடி ஆழம் சார். ஷராவதி ஆறு நாலு திசையிலிருந்தும் ஓடிவந்து இங்க ஒரே அருவியா சங்கமமாவுது. கொழந்தைக்குப் பேரு வைக்கற மாதிரி ஒவ்வொண்ணுக்கும் ஒரு பேரு வச்சிருக்காங்க. ஒண்ணு ராஜா. இன்னொண்ணு ராணி. பக்கத்துல இருப்பது ரோரர். அடுத்தது ராக்கெட்.” நண்பர் உற்சாகத்தோடு அருவியைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர் சொற்கள் எதுவும் என் நெஞ்சில் பதியவில்லை. அருவியின் நிறம், வேகம், பளபளப்பு, சாரல், தெறிக்கும் துளிகள் மட்டுமே நினைவில் பதிந்தன.
நாங்கள் சாகர் என்கிற இடத்தில் தங்கியிருந்தோம். அடுத்த நாள் காலையில் புறப்பட்டு ஷிமோகா, தீர்த்தஹள்ளி, ஆகும்பெ, மங்களூரு என நான்கு நாள்கள் சுற்றுவதுதான் திட்டம். ஆனால், அருவியைப் பார்த்த பிறகு வேறெதையும் பார்க்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றிவிட்டது. அடுத்த நாள் காலையில் என் விருப்பத்தை நண்பர்களிடம் தெரிவித்த போது, கேலி செய்தார்கள்.
“வேற எங்கேயும் போகாம இங்கயே இரு. போகும்போது பிக்கப் செஞ்சிக் கறோம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள். அருவிக்கு என்னை அழைத்துச் செல்வதாகச் சொன்ன உள்ளூர் நண்பரின் வருகைக்காக விடுதிக்கு அருகில் இருந்த பூங்காவையொட்டிய நிறுத்தத்தில் காத்திருந்தேன். சாலை யோரமாக மாணவர் கூட்டம் கூட்டமாகக் கதை பேசிக்கொண்டு செல்வதைப் பார்த்தேன். இளம்பிஞ்சுகளின் முகங்களில் படிந்திருந்த உற்சாகத்தையும் துள்ளலையும் பார்த்ததும் ஒருகணம் என் இளமைக் காலத்துக்குச் சென்று மீண் டேன். அவர்களின் அரைகுறையான பேச்சுகளும் பாடல்களும் காதில் விழுந்தபடி இருந்தன.
அப்போதுதான் நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அவர்கள் அனைவரும் சாலையோரமாகப் பூங்காவையொட்டி இருந்த நிழற்குடையின் கீழே சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த ஒரு முதிய பெண்மணிக்குப் பக்கத்தில் சென்று, “குட்மார்னிங்மா” என்றார்கள். புன்னகைபூத்த முகத்துடன் அமர்ந்தி ருந்த அந்தப் பெண்மணி ஒரு சிறுவனின் கன்னத்தைத் தொட்டு வருடி, “குட்மார்னிங்டா செல்லம். காட் ப்ளெஸ் யூ” என்றார். தெளிந்த முகம். அகலமான நெற்றி. பெரிய கண்கள். நரைத்து நீண்ட தலைமுடி அருவியென வழிந்தது. அதன் நுனிப் பகுதி மட்டும் முடிச்சிடப்பட்டிருந்தது.
கோயிலில் வரிசையில் நின்று பிரசாதம் வாங்கிக்கொண்டு செல்லும் பக்தர்களைப் போல அந்தப் பெண்மணியிடம் உரையாடிவிட்டுச் செல்லும் பள்ளிப் பிள்ளைகளைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. சலிப்பே இல்லாமல், “காட் ப்ளெஸ் யூ” சொல்லிக்கொண்டே இருந்தார் அவர்.
ஒருவேளை அவர் அந்தப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியராக இருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன். ஆனால், வெவ்வேறு நிறங்களில் சீருடைகளை அணிந்த பிள்ளைகள்கூட அவரை நெருங்கி வணங்கிவிட்டுச் செல்வதைப் பார்த்தபோது குழப்பமாக இருந்தது. மாணவர்கள் மட்டுமன்றி, அந்தப் பக்க மாகச் செல்கிற ஆண்கள், பெண்கள், கூடை வியாபாரிகள் எனப் பலரும் அவரை நெருங்கி வணங்கினார்கள். எல்லாரிடமும் அவர் வித்தியாசமே இல்லாமல் “காட் ப்ளெஸ் யூ” என்றார்.
அருவிக்கு அழைத்துச் செல்வதற் காக வாகனத்துடன் வந்திருந்த நண்பர் நான்கைந்து முறை பெயர் சொல்லி அழைத்த பிறகுதான், நான் சுயநினைவுக்குத் திரும்பினேன். வெட்கப்புன்னகையுடன் வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தேன்.
“என்ன சார்? இன்னும் அருவியைப் பத்திய கற்பனையிலயே மூழ்கியிருக் கீங்களா?” என்று கேட்டார் நண்பர்.
“ஆமாம். மனசுக்குள்ள அது ஒரு பக்கம் ஓடிட்டே இருக்குது. இன்னொரு பக்கம் வேற ஒரு காட்சி ஓடுது” என்று சொல்லிவிட்டு, “காட் ப்ளெஸ் யூ” நிகழ்ச்சியை விவரித்தேன்.
அந்தப் பெண்மணியைப் பற்றிய குறிப்பைக் கொடுத்ததும் நண்பர் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
“பத்துப் பதினஞ்சி வருஷமா நான் அந்த அம்மாவைப் பார்க்கறேன் சார். நான்தான் வயசாகி, சதைபோட்டு, தலைமுடியெல்லாம் கொட்டி, தொப்பை விழுந்து எப்படியோ மாறிட்டேன். ஆனா, அந்த அம்மா அன்னைக்குப் பார்த்த மாதிரியே தெய்வச்சிலை மாதிரி இருக்காங்க. அதெல்லாம் பெரிய வரம் சார்.”
“என்ன சொல்றீங்க?”
“அவங்களுக்குப் புருஷன், புள்ளைங்க, பொண்ணுங்கன்னு எல்லாரும் இருக்காங்க சார். பெரிய குடும்பம். எல்லாருமே எஞ்ஜினீயரு, டாக்டருனு பெங்களூருல, தில்லியிலனு வேலை செய்யறாங்க. அந்த அம்மாவுக்கு மட்டும் நம்ம ஊரை விட்டு எங்கேயும் போகக் கூடாதுனு ஒரு வைராக்கியம். இங்கயே தங்கிட்டாங்க.”
“பார்க்கறதுக்குத் துறவி மாதிரி இருக்காங்க.”
“ஆரம்பத்துல இப்படி இல்லை சார். தனிமைதான் கொஞ்சம் கொஞ்சமா அவங்கள மாத்திட்டுது. காலையில டிபன் முடிச்சதுமே பொடிநடையா கோயிலுக்குப் போயிட்டு இங்க வந்து உக்காந்து மெளனமா ஊரு நடமாட் டத்தைப் பார்த்துக்கிட்டிருப்பாங்க. யார் கிட்டயும் எதுவும் பேசமாட்டாங்க.”
“மெளனமா இருப்பாங்களா? நம்ப முடியலையே?”
“ஆமா சார். அப்படித்தான் இருந்தாங்க. ஒருநாள் துடிப்பான பள்ளிக்கூடத்துப் பையன் ஒருத்தன் அவங்களைப் பார்த்து குட்மார்னிங்னு சொன்னான். அந்த அம்மா, அவனைப் பக்கத்துல கூப்ட்டு நாலு வார்த்தை நல்லதா பேசிட்டு, காட் ப்ளெஸ் யூன்னு சொல்லி அனுப்பினாங்க.”
“அப்புறம்?”
“அவனுக்கு அதைக் கேட்டதுமே உச்சிக் குளிர்ந்திடுச்சி. அடுத்த நாள் இன்னும் ரெண்டு கூட்டாளிங்கள அழைச்சிட்டுப் போனான். அம்மா அவங்களுக்கும் காட் ப்ளெஸ் யூ சொன்னாங்க. கொஞ்சம் கொஞ்சமா அந்த விஷயம் ஊரு பூரா பரவிடுச்சு.”
“ஆச்சரியமா இருக்குது.”
“அந்த அம்மா ஆசீர்வாதத்தாலதான் கணக்குல நூத்துக்கு நூறு மார்க் கிடைச்சதுன்னு ஒருத்தன் சொன்னான். அந்த அம்மா காட் ப்ளெஸ் யூ சொன்னதாலதான் தள்ளுவண்டியில கொண்டுபோன எல்லாக் காய்கறிகளும் வித்துதுன்னு ஒரு வியாபாரி சொன்னாரு. பத்து நாளா பாடாபடுத்திய காய்ச்சல் இருந்த இடம் தெரியாம ஓடிப் போச்சினு சொன்னாங்க ஒரு அம்மா.”
“அதைத்தான் நான் இன்னைக்கு ஆச்சரியத்தோடு பார்த்திட்டிருந்தேன். எல்லாமே அதிசயமா இருக்குது. அது சரி, காட் ப்ளெஸ் யூ தவிர வேற எதுவும் பேச மாட்டாங்களா?”
நண்பர் உதட்டைப் பிதுக்கியபடி இல்லை என்பதுபோல தலையை ஆட்டினார். “வேற ஒரு வார்த்தையை அவுங்க பேசி நான் காதால கேட்டதில்லை சார்” என்றார்.
பேசிக்கொண்டே சென்றதில் ஜோக் நெருங்கியதே தெரியவில்லை. சாரல் குளிர் உடலைத் தழுவிய பிறகே உணர முடிந்தது. அன்றும் நாள் முழுதும் அருவியின் எழிலைப் பார்த்தபடியே பொழுதுபோக்கினேன். மறுநாளும் அதே விதமாகப் பொழுது கழிந்தது. நான்காம் நாள் காலையில் வெளி யூர்ப் பயணத்துக்குச் சென்றிருந்த நண்பர்கள் திரும்பிவிட்டனர். ஊருக்குத் திரும்பும் நேரம் வந்துவிட்டது. விடுதி அறையைக் காலிசெய்துவிட்டு, பெட்டி களை வாகனத்தில் ஏற்றிவைத்தோம்.
நான் பூங்காவுக்கு அருகில் இருந்த நிழற்குடையை நோக்கிச் சென்றேன். தளர்வாக முடிச்சிடப்பட்ட அருவி போன்ற தலைமுடி காற்றில் கலைந்து புரள, அந்த அம்மா அங்கே உட்கார்ந் திருந்தார். பழங்கள் நிறைந்த ஒரு பையை அவருக்கு அருகில் வைத்துவிட்டு, “குட்மார்னிங்மா” என்றேன். அவர் என்னைப் பார்த்துப் புன்னகை செய்தபடி, “காட் ப்ளெஸ் யூ, மை டியர் சைல்ட்” என்றார். என் மனமும் கண்களும் சட்டெனப் பொங்கித் தளும்பின.
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)
- writerpaavannan2015@gmail.com