

அப்போது இந்தியன் வங்கி சௌகார்பேட்டை கிளையில் பணிபுரிந்து வந்தேன். எதிரே வந்து நின்றவரிடம், சக ஊழியர் ஒருவர், “இவர்தான்” என்று என்னைக் கை காட்டினார். அவரோ, புதிய பேனா ஒன்றை என்னிடம் அளித்து, “மிக்க நன்றி, இது அன்பின் சிறிய நினைவுப் பரிசு” என்று ஆங்கிலத்தில் கூறினார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
“சார், நீங்கள் யாரென்றே தெரியவில்லை. நான் இப்படியான பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதில்லை”' என்று புன்னகையோடு மறுத்தேன்.
அவர் சொன்ன செய்தி, என்னை ஆச்சரியத்தில் தள்ளியதோடு, அந்தப் பரிசை ஏற்றுக்கொள்ளவும் வைத்து விட்டது.
வங்கிக்கு வெளியே சென்று ஒரு கடையில் தேநீருக்காக அமர்ந்தோம். அவர் பெயர் சந்திரசேகர். மருந்து நிறுவனம் ஒன்றின் முக்கியப் பொறுப்பில் இருந்தார். ஒருமுறை ஓய்வூதியம் வாங்க வங்கிக்கு வந்திருக்கிறார் அவர் அம்மா. கணக்கில் வரவு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதிர்ச்சி அடைந்து நின்று விட்டார். யாரிடம் சென்று விசாரிப்பது என்று அவருக்குத் தெரியவில்லை.
முதுமையின் தள்ளாட்டத்தில் அச்சத்துடன் அலைந்து கொண்டிருந்தவரை நான் தற்செயலாகப் பார்த்து, வாடிக்கையாளர் பகுதியில் ஓர் இருக்கையில் அமர வைத்தேன். தண்ணீர் குடிக்கவைத்து, என்ன பிரச்சினை என்று விசாரித்தேன். அவரது வங்கிக் கணக்கைச் சரிபார்த்து, விடுபட்டிருந்த அந்தத் தொகையை வரவு வைக்க ஏற்பாடு செய்தேன். சூடான பால் வாங்கிக் கொடுத்து, பணமும் பெற்றுக் கொடுத்து, கையைப்பற்றி மாடியிலிருந்து அழைத்துவந்து, வழியனுப்பி வைத்தேன்.
இப்படி நான் பலருக்கும் செய்வதுதான். ஆனால், அந்த அம்மா தன் மகனிடம், “எனக்கு இன்னொரு மகன் அந்த வங்கி ஊழியர்” என்று சொன்னாராம். பெயர்கூடத் தெரியாவிட்டாலும் சந்திரசேகர் என்னைப் பார்க்க வந்துவிட்டார்! அதன் பிறகு அவருடனான தேநீர் சந்திப்பு ஆண்டுக்குச் சில முறை என்று தொடர்ந்து கொண்டிருந்தது.
நான் இடமாற்றலில் சென்ற தலைமை அலுவலகத்திற்கும் புத்தாண்டுப் பரிசு என டயரி, பேனா என்று ஏதாவது கொடுத்து விட்டுச் செல்வார். அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றியெல்லாம் கவலையோடு விவாதிப்பார். எங்கள் தொழிற்சங்க இயக்கங்கள் பற்றியும் ஆர்வத்துடன் கேட்டறிந்துகொள்வார்.
நான் வேறு ஒரு கிளைக்குச் சென்ற பிறகு, எப்படியோ என் முகவரியைப் பெற்று, மாதம் தவறாது அஞ்சலட்டையில் ஐந்தாறு வரிகளை எழுதிப் போட்டு விடுவார். சில மாதங்களுக்கு ஒருமுறை, “என் மகனைப் போய்ப் பார்த்தாயா?” என்று கேட்டுக்கொண்டே இருப்பாராம் அந்த அம்மா!
சில பத்தாண்டுகள் கடந்துவிட்டன. அம்மாவும் மறைந்து விட்டார். ஆனாலும் சந்திரசேகர் தன் அம்மாவின் இன்னொரு மகனுடன் தொடர்பில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்!