

சிறப்பான மாதங்களில் ஒன்று ஆவணி. கார்காலம் தொடங்குவதும் இந்த மாதத்தில் தான். மலையாளத்தில் முதல் மாதம் ஆவணிதான். தமிழகத்தில் ஆவணி மாதம் ‘மடங்கல்’, ‘கார்’ போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. மடங்கல் என்றால் ‘சிங்கம்’.
ஆவணி மாதத்தின் சிறப்பு ‘ஞாயிறு’. ஆவணி மாதத்து ஞாயிற்றுக் கிழமைகள் ‘முதற்கிழமை’, ‘இடைக் கிழமை’, ‘கடைக்கிழமை’ என்பதாகச் சுட்டப்படுகின்றன. அதாவது ஆவணி மாதத்தின் முதல் ஞாயிறு ‘முதற்கிழமை’ என்றும் கடைசி ஞாயிறு ‘கடைக்கிழமை’ என்றும் இடையிலுள்ள ஞாயிறுகள் ‘இடைக்கிழமை’ என்றும் அம்மன் பெயரால் விரதமிருந்து கொண்டாடப்படுகின்றன.
அம்மையும் ஆவணியும்: ஆவணி ஞாயிறு கொண்டாடப்படு வதற்குப் பின்னே அம்மை நோய் காரணமாக இருக்கிறது. அம்மை நோய் மனித குலத்தை அழித்துத் தாண்டவ மாடுகையில் காற்று அந்த நோயைத் துடைத்துச் செல்கிறது. இதிலிருந்து பிறந்ததே, ‘ஆடி வந்தால் அம்மையும் பறக்கும்’. இந்த அம்மைதான் பிறகு ‘அம்மி’ என்றானது. அம்மை நோயை மக்கள் அம்மனாகப் பார்த்தார்கள். ‘அம்மா இறங்கிருக்கிறாள்’, ‘அம்மா குடியிருக்காள்’, ‘அம்மா போட்டிருக் காள்’ இப்படியாக.
அம்மை என்பது உயிரைக்கொல்லும் நோய். அம்மை பீடித்திருப்பவரின் உயிரை எடுக்காது விட்டுச் சென்றால், பதிலுக்குப் படையல் இடுவதாக மக்கள் வேண்டிக் கொண் டார்கள். அந்த வேண்டலை நிறைவேற்றும் பொருட்டு மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று வாசலில் பசுமாட்டுச் சாணத்தில் திட்டாணியிட்டு, அந்தச் சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அருகம்புல் செருகி, அருகில் ஒரு சொம்பில் மஞ்சள் தண்ணீர் வைத்து, அதில் வேப்பிலைக் கொத்து செருகி, பொங்கல் வைத்துப் படைப்பார்கள்.
மாரியம்மன்: மாரியம்மன் இல்லாத ஊர்கள் இல்லை என்பதே உண்மை. மாரியம்மன் என்பது வேப்ப மரம். ஆவணி மாதத்தில் வேப்ப மரம் விசேஷமாகக் கொண்டாடப்படும். ‘யார் கடன் நின்றாலும் மாரி கடன் ஆகாது.’ முத்துப் போன்ற அம்மை நோயை உண்டாக்குபவள் மாரி. எனவே முத்துமாரி என்று அழைத்தனர். அம்மையைத் தணிக்கும் மாமருந்து வேம்பு என்பதால் வேப்பமரத்தை முத்துமாரியாக வழிபடு கின்றனர்.
ஆவணி பிறந்துவிட்டால் ஊர்கள் தோறும் மாரியம்மன் பாடல்கள் ஒலிக்கும். ஒரு வாரம், பத்து நாள்கள் விரதமிருந்து கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனை வழிபடுவர். இந்தத் தீச்சட்டி ஏந்துகையில் நையாண்டி மேளம் முழங்கி ஆடிப்பாடுவர். மலர்க் கரகம் சோடித்துத் தலையில் ஏற்றி ஆடிப்பாடி ஊர்வலம் வருவர். குடத்தில் வேப்பிலை செருகி பூக்களைச் சுற்றிக் கரகத்தைத் தலைமேல் வைத்து மேளதாளத்துடன் ஆடிவருவது கரகம். அம்மனின் சினத்தைத் தணிக்க இவ்வாறு வழிபடுவர்.
ஒற்றைக் கரகம், இரட்டைக் கரகம், முக்கரகம், நாற்கரகம், ஐங்கரகம், அறுகரகம், ஏழ்கரகம், பொன்கரகம், நவக்கரகம், பத்தாம் கரகம் என்று எண்ணிக்கையில் கரகமெடுப்பர். வேப்பிலை இல்லாமல் பூக்களால் அலங்கரித்து ஆடும் கரம் பூங்கரகம். எட்டுக் கரகத்தை எட்டு என்று சொல்லாமல் ‘பொன்கரகம்’ என்பர்.
ஆவணி விரதம்: பெண்களுக்குப் பிடித்த மாதம் ஆவணி. மாரியம்மன் பெயரைச் சொல்லி மஞ்சள் சேலை உடுத்தி, ஒரு மாதம் விரதமிருப்பர். ஆவணி மாதம் ஒவ்வொரு ஞாயிறும் விரதமிருந்து மாலையில் அம்மனை வணங்கி விரதம் முடிப்பர். இதற்கு ஆவணி விரதம் என்று பெயர். பெண்கள் மஞ்சள் நிறச் சேலை அணிந்து இருபத்தோரு நாள்கள் விரதமிருந்து தீ மிதிப்பர். இதனைப் ‘பூமிதித்தல்’, ‘பூக்குழி இறங்குதல்’ என்றும் சொல்வர்.
முருகனுக்கு வேல் என்றால் அம்மனுக்குச் சூலம். முகமெங்கும் மஞ்சள் அணிந்து, நாக்கில் சூலம் குத்தி பம்பை, உடுக்கை இசைத்து வழிபடுவர். உடலில் மஞ்சள், திருநீறு அணிந்து முதுகுப்புறத் தோலில் கொக்கி மாட்டி, சிறுதேர் இழுப்பர். ஒரு மரத்தை நட்டு அதன் குறுக்கில் துளையிட்டு, ஒரு மரத்தை நுழைத்து இரண்டு பக்கங்களிலும் இருவரைக் கயிற்றால் கட்டிச் சுற்றுதலை, ‘செடல் சுற்றுதல்’ என்பர். அம்மன் பெயரால் நூலில் மஞ்சள் முடிந்து கையில் கட்டிக்கொள்வது ‘காப்புக்கட்டுதல்’. இறைவன் எங்களைக் காக்க வேண்டும் என்று கையில் மஞ்சள் கயிறும் வீதியில் மாவிலையும் வேப்பிலைத் தோரணமும் கட்டுவர்.
அம்மை நோயால் பீடிக்கப்பட்ட வர்கள் மாரியம்மனை வேண்டி ‘அம்மா கஞ்சி’ ஆக்கி ஊற்றுவார்கள். சகோதரி களுக்குச் சிலர் மஞ்சள் சேலை எடுத்துக் கொடுப்பர்.
ஆவணி மாதத்து இடி முழக்கத்தினை ‘ஆவணி முழக்கம்’ என்பர். ‘ஆவணி மாதம் மேகம் முழக்கில் மழையுண்டு’ என்பது பழமொழி. ஆவணி மாதத்து வெற்றிலையை ‘ஆவணி அழகன்’ என்பர். அதாவது ஆடி மாதம் வெற்றிலைக் கொடி நட்டு அது ஏறிப்படர ஊன்றும் கோலுக்கு ‘ஆடிக்கால்’ என்று பெயர். அந்த ஆடிக்காலில் பற்றித் தளிர்விடும் வெற்றிலையை ‘ஆவணி அழகன்’ என்பர்.
‘ஆவணியில் அகல நடு; ஐப்பசியில் அணைத்து நடு’ என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது ஆவணி மாதம் முன்மழை என்பதால் நடும் நெல் நன்கு தூர்கட்டும். ஆகவே நடும் பயிரை அகல நட வேண்டும். ஐப்பசி மாதம் பின்மழை என்பதால் மழை பெய்யாமல் கூடப் போகலாம். ஆகவே நடும் பயிரை அணைத்து அருகருகே நடவேண்டும்.
‘ஆனைக்கொம்பு’ என்றொரு நெல் வகை இருக்கிறது. ஆவணி மாத விதைப்புக்கு உகந்த நெல் இது. ‘ஆவணி மாதம் விதைத்தால் ஆனைக்கொம்பு தானாக விளையும்’ என்பது பழமொழி.
சிவபெருமானின் திருவிளை யாடல்களில் ஒன்றான பிட்டுக்கு மண் சுமந்த கதை ஆவணி மாதம் பெருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடியின் பிற்பகுதியில் தொடங்கும் இந்த விழா, ஆவணி நடுப்பகுதியில் நிறைவடையும்.
கிராமங்களில் ‘அம்மாத்தாயி’ இருப்பார்கள். யாருக்கேனும் அம்மை கண்டால் அவர்களுக்காக அம்மனை வேண்டி நோயைத் தணிப்பவர்கள். இவர்கள் ஆவணி பிறந்துவிட்டால், மஞ்சள் சேலை உடுத்தி, முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு, கையில் வேப்பிலையுடன் தட்சிணை கேட்டு வருவார்கள். இவர்களை மக்கள் ‘ஆவணிக் கிழவி’ என்று அழைக்கி றார்கள். இப்படியாக ஆவணி மாதம் மக்களோடு இரண்டறக் கலந்திருக்கிறது.
- rajamanickam29583@gmail.com