

என்னைப் பார்த்ததுமே ஷு பழுது பார்ப்பவர், “வாங்க வாங்க. நீங்க தான ரெண்டு நாள் முன்னால ஸ்போர்ட்ஸ் ஷு குடுத்துட்டுப் போனீங்க?” என்று கேட்டபடியே படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை மடித்து ஓரமாக வைத்தார். அடுத்த நொடியே, “கடைத்தெருவுல ஏதாவது வேலை இருந்தா ஒரு பத்து நிமிஷம் போயிட்டு வாங்களேன் சார்” என்று இழுத்தார்.
“ஏங்க, இன்னும் வேலையை முடிக்கலையா?” என்று சந்தேகத்தோடு கேட்டேன். “அடுத்த நாளே ரிப்பேர் வேலைய முடிச்சிட்டேன் சார். பத்திரமா இருக்கட்டும்னு பொட்டிக்குள்ள வச்சிருக்கேன்” என்று பக்கத்திலிருந்த மரப்பெட்டியைக் காட்டினார்.
“அப்புறம் என்ன சிக்கல்?”
“பொட்டி சாவி எங்கிட்ட இல்லை. என் வீட்டம்மாகிட்ட இருக்குது. பையன் ஸ்கூலில் பணம் கட்டிட்டு வரேன்னு போயிருக்காங்க.”
“பரவாயில்லை. அவங்க பொறுமை யாவே வரட்டும். எனக்கு வேலை ஒண்ணும் இல்லை. நான் இங்கயே வெய்ட் பண்றேன்.”
“சரி, உங்க விருப்பம்” என்றபடி விரிப்பின் மீது ஓரமாக இருந்த ஒரு ஷுவை எட்டி எடுத்துப் பெருவிரல் பக்கமாகத் தெரிந்த ஓட்டைக்குள் துணிச்சுருளைச் செலுத்திச் சுத்தப் படுத்தத் தொடங்கினார் அவர்.
“எந்த ஸ்கூலில் படிக்கிறான் உங்க பையன்?” என்கிற கேள்வியோடு நானாகவே அவரிடம் உரையாடலைத் தொடங்கினேன். அவரும் அடுத்தடுத்து பதில்களைச் சொன்னார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு ஒரு பெரியவர் கடைவாசலில் வந்து தயக்கத் தோடு நின்றார். உரையாடு வதை நிறுத்திய கடைக்காரர் அவர் பக்கமாகத் திரும்பி, “என்ன சார்? ஏதாச்சும் ரிப்பேர் வேலையா?” என்று கேட்டார்.
பெரியவர், “ஷுவுல பாட்டம் சோல் தனியா பிஞ்சி வந்துட்டுது. சரியாக்க முடியுமா?” என்று கேட்டார். பிறகு கைப்பைக்குள் வைத்திருந்த ஷுவை எடுத்து கடைக்காரர் முன் வைத்தார்.
கடைக்காரர் அந்த ஷுவை எடுத்து முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தார். ஷுவுடன் ஒட்டியும் ஒட்டாமலும் அடிப்பகுதி தொங்கிக்கொண்டிருந்தது.
“ரெண்டு துண்டா தொங்குது. ரொம்ப டேமேஜாயிருக்குது. நெறய வேலை இருக்குது. ரிப்பேர்னு செஞ்சிட்டப் பறம் ஒரு ஆறு மாசமாவது வரணுமே. அதுக்குத் தகுந்த மாதிரி செய்யணும்.”
“ஆமாமாம். ஒரு ஆறு மாசம் வந்தா போதும். எப்படியாவது மேல்பக்கத் தையும் கீழ்ப்பக்கத்தையும் பிச்சிக்காத மாதிரி ஒட்டிக் கொடுக்கணும்.”
“பேப்பர் ஒட்டறது, பொம்மையை ஒட்டறது மாதிரி இத ஒட்ட முடியாது பெரியவரே. அந்தப் பசையெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது. தோலையும் தோலையும் ஒட்டவைக்கறதுக்குன்னு ஒரு ஸ்பெஷல் பசை இருக்குது. அதைத்தான் பயன்படுத்தணும்.”
கைக்கு எட்டும் தொலைவில் வைத்திருந்த ஒரு டப்பாவை எடுத்துத் திறந்து காட்டினார். பஞ்சாமிர்த நிறத்தில் அந்தப் பசை கொழகொழவென இருந்தது. அந்த டப்பாவை ஒரு கணம் எட்டிப் பார்த்தார் பெரியவர்.
“வச்சிட்டுப் போங்க பெரியவரே. சுத்தமா செஞ்சி வைக்கறேன். சாயங் காலமா வந்து வாங்கிக்குங்க.”
“சரி, எவ்ளோ ஆகும்னு சொல்லுங்க?”
“எந்த மாதிரியான நெலைமையில ஷு இருக்குதுன்னு நீங்க பார்த்துட்டு தான இருக்கீங்க? உங்களுக்கு எவ்ளோ கொடுக்கணும்னு தோணுதோ, அவ்ளோ கொடுங்க பெரியவரே.”
“நானா எப்படிக் கொடுக்க முடியும்? கொறைவா கொடுத்தாலும் தப்பு. கூடுதலா கொடுத்தாலும் தப்பு. இதான் கூலின்னு தெரிஞ்சா ஒரு பிரச்சினையும் இல்லை. அப்பதான் ரிப்பேர் பண்றது ஒர்த்துதானான்னு நான் முடிவெடுக்க முடியும்.”
“நூறு ரூபா கொடுங்க பெரியவரே.”
“நூறா? என்னப்பா நீ?”
“விலைவாசி அப்படி இருக்குது பெரியவரே. நான் என்ன செய்ய முடியும்? சொல்லுங்க.”
“அந்த அளவுக்கு எல்லாம் தர முடியாதுப்பா. அம்பது ரூபா தரேன். முடிஞ்சா ரிப்பேர் செய். முடியலைன்னா சொல்லிடு. திருப்பி எடுத்துட்டுப் போயிடறேன்.”
அடிப்பகுதியை ஒட்டுவதில் இருக்கும் சிரமங்களை எடுத்துரைத்தார் கடைக்காரர். ஆனால், அதையெல்லாம் அந்தப் பெரியவர் காது கொடுத்துக் கேட்கவே இல்லை. தான் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தார்.
கடைக்காரருக்கு அருகில் இருந்த ஷுவைக் குனிந்து எடுத்து, தன் பைக்குள் போட்டுக்கொண்டு முணுமுணுத்தபடி சென்றுவிட்டார்.
நாங்கள் மீண்டும் உரையாடத் தொடங்கினோம். ஒரு காலத்தில் அந்தந்த வட்டாரத்துத் தொழிலாளர்கள் செய்துகொண்டிருந்த ஷுக்கள் மெல்ல மெல்லத் தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருளாக மாறிவிட்டதை யும் அதன் விளைவாகத் தொழிலா ளர்கள் பழுதுநீக்கும் கூட்டமாகச் சுருங்கிவிட்டதையும் அவர் துயரத் தோடு சொன்னார்.
“இன்னும் அஞ்சு, பத்து வருஷங் களுக்குப் பிறகு தொழிலாளிங்களுக்கு வாழ்க்கையே இருக்காது சார். எந்தப் பொருளா இருந்தாலும் நல்லா இருக்கிறவரைக்கும் பயன்படுத்திட்டுத் தூக்கிப் போட்டுட்டு, புதுசா வாங்கிக்கிற காலம் வந்துடுச்சி.”
அவருடைய கசந்த புன்னகையைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
சிறிது நேரத்துக்குப் பிறகு, “ஷுவுல ஒரு சின்ன கிழிசல். தைச்சி சரிபண்ணித் தர முடியுமா?” என்று கேட்டபடி இன்னொரு பெரியவர் வந்து நின்றார்.
“எடுங்க” என்று கையை நீட்டினார் கடைக்காரர். பெரியவர் கட்டைப்பையிலிருந்து ஷுக்களை எடுத்து அவருக்கு முன்னால் வைத்தார்.
கடைக்காரர் ஒரு ஷுவை எடுத்து ஆய்வு செய்தார். அடிப்பகுதியை இணைக்கும் ஷுவின் பக்கவாட்டுப் பகுதி அங்கங்கே நைந்து இடைவெளி ஏற்பட்டிருந்தது.
“ரெக்சினா இருந்தா, தூக்கிக் கெடாசிட்டுப் புதுசா வாங்கியிருப்பேன். இது ஒரிஜினல் தோல். கான்பூர்ல வாங்கினது. தூக்கி வீச மனசு வரமாட்டுது” என்றார் பெரியவர்.
“ஒண்ணும் கவலைப்படாதீங்க சார். எங்கிட்ட கான்பூர் தோல் இருக்குது. உள்பக்கமா அந்தத் தோலை வச்சி மேலயும் கீழயும் தச்சிட்டா அழகா செட்டாயிடும். அதுக்கப்புறம் ஒரு பிரச்சினையும் வராது.”
கான்பூர் தோல் என்றதும் பெரியவர் முகம் மலர்ந்தது. “அப்படியே செய்ங்க. நான் இங்கயே நிக்கறேன்” என்றபடி எனக்குப் பக்கத்தில் நின்றார்.
கடைக்காரர் தன் வேலையில் மூழ்கினார். கான்பூர் தோல் இருக்கும் பையைத் தேடி எடுத்து, ஒட்டு போடத் தேவையான அளவுக்கு வெட்டி யெடுத்துக் கொண்டார். அந்தப் பெரியவர் என்னிடம் இயல்பாகப் பேசத் தொடங்கிவிட்டார். நகர வளர்ச்சி, மெட்ரோ சேவை, மழை, குளிர் எனப் பல விஷயங்களைத் தொட்டுத் தொட்டு உரையாடல் வளர்ந்துகொண்டே இருந்தது.
வேலையை முடித்த பிறகு ஷுக்களைத் துணியால் துடைத்து, பளபளப்பாக்கி பெரியவர் முன்னால் வைத்தார் கடைக்காரர். பெரியவர் ஷுவை எடுத்து உள்பக்கம் கைவிரலை விட்டுத் தொட்டுப் பார்த்து, “ரொம்ப சாஃப்டா, புது ஷு மாதிரி ஆயிடுச்சி” என்று திருப்தியாகச் சொன்னார். ஒரு பழைய செய்தித்தாளில் அந்த ஷுக்களை வைத்துச் சுருட்டி பைக்குள் வைத்துக் கொண்டார். பிறகு “எவ்ளோ கொடுக்கணும்?” என்று கேட்டார்.
“செஞ்ச வேலையை எல்லாம் நீங்க பார்த்துட்டுதான இருந்தீங்க. ஒரிஜினல் கான்பூர் தோல் போட்டிருக்கேன். உங்களுக்கு என்ன தோணுதோ, அதைக் கொடுங்க” என்றார் பெரியவர்.
பெரியவர் தன் பையிலிருந்து இரண்டு நூறு ரூபாய்த்தாள்களை அவரிடம் கொடுத்தார். கடைக்காரரும் அதை வாங்கிக்கொண்டார். அவர் முகத்தில் திருப்தி தெரிந்தது.
கட்டைப்பையை எடுத்துக்கொண்டு கடையிலிருந்து நான்கடி தொலைவு சென்ற பெரியவர் மீண்டும் கடைவாசலுக்குத் திரும்பிவந்தார்.
“என்ன சார்? ஏதாச்சும் மறந்துட் டீங்களா?” என்று கேட்டார் கடைக்காரர். “அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்று புன்னகையோடு தலையசைத்தபடி பையிலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டொன்றை எடுvத்துக் கொடுத்தார்.
குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்த கடைக்காரரிடம், “வச்சிக்குங்க. ஒரு டீ சாப்புடுங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)
- writerpaavannan2015@gmail.com