வண்ணக் கிளிஞ்சல்கள் 18 - விறுவிறுப்பான விளையாட்டு!

வண்ணக் கிளிஞ்சல்கள் 18 - விறுவிறுப்பான விளையாட்டு!
Updated on
3 min read

அஞ்சல் நிலைய வளாகத்துக்கு வெளியே ஒரு பெண்மணி தக்காளிக்கூடைகளோடு உட்கார்ந்திருந்தார். ஒரு கூடையில் பளபளவென மின்னும் நிறத்துடன் உருண்டு திரண்ட தக்காளிகள். இன்னொரு கூடையில் சற்றே நிறம் மங்கிய தக்காளிகள்.

“ஒரு கிலோ கொடுங்கம்மா” என்றேன். அவர் தானாகவே நிறம் மங்கிய தக்காளிகளை எடுத்து எடைத் தட்டுக்குள் வைத்தார். “ஏம்மா, அதைப் போடக் கூடாதா?” என்று பளபளக்கும் தக்காளியைச் சுட்டிக்காட்டிக் கேட்டேன். “இது நம்ம ஊட்டுத் தோட்டத்துல விளைஞ்சது சார். நாட்டுத்தக்காளி. குழம்பு வச்சா அருமையா இருக்கும். எடுத்துட்டுப் போங்க” என்றபடி பையில் தக்காளிகளை நிரப்பிக் கொடுத்தார். பக்கத்தில் வெள்ளரிப்பிஞ்சுக்கூடை இருந்தது. அதிலும் ஒரு கிலோ கேட்டு வாங்கிக்கொண்டு திரும்பினேன்.

பையிலிருந்து ஒரு வெள்ளரிப் பிஞ்சை எடுத்து கைக்குட்டையில் துடைத்துச் சுத்தப்படுத்திவிட்டு, கடித்துச் சுவைக்கத் தொடங்கினேன். வெள்ளரிப்பிஞ்சின் சாறு கரைந்து தொண்டைக்குழியில் இறங்கும்போது அமுதமாக இருந்தது.

வழியில் ஒரு பள்ளி மைதானத்தில் இருந்து ஆரவாரக்கூச்சலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். மாணவியர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந் தார்கள். பள்ளிகளுக்கிடையே நடக்கும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி. அந்த ஆரவாரக்கூச்சல் என்னை இழுத்தது. கூட்டத்தோடு கூட்டமாக நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.

யாரோ ஒரு மாணவி சுழன்று சுழன்று பந்தை அடித்தபடி இருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் அடித்த பந்து ஊகிக்க முடியாத கோணத்தில் எல்லைக் கோட்டைக் கடந்து சென்றது. எங்கெங்கும் “சிக்சர்” “சிக்சர்” என்கிற குரல்கள் ஒலித்தன.

உயரமான கம்பத்தோடு இணைத்துப் பொருத்தப்பட்டிருந்த கரும்பலகையில் போட்டி விவரங்கள் எழுதப்பட்டிருந்தன. 20-20 ஓவர் மேட்ச். இரண்டு வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவியரின் அணிகள் விளையாடின. ஓர் அணி ஆடி முடித்து 125 ரன்கள் குவித்திருந்தது. அடுத்த அணி பத்து ஓவர் விளையாடி 70 ரன்கள் குவித்துக் களத்தில் இருந்தது. ஒருவர்கூட அவுட் ஆகவில்லை.

பலகையில் குறிப்பிடப்பட்டிருந்த பள்ளியின் பெயர் விவரங்களைப் படித்ததுமே பார்வையாளர்களின் உற்சாகத்துக்கான காரணம் புரிந்து விட்டது. அனைவருமே மட்டைப் பிடித்துஆடிக்கொண்டிருந்த அணிக்கு ஆதரவாக இருந்தனர். அது நகரத்தில்பிரபலமான ஒரு தனியார் பள்ளியின் அணி. அந்த மாணவியரின் தோற்றத் திலும் மிடுக்கிலும் தன்னம்பிக்கை மிகுந்த நடையிலும் ஓட்டத்திலும் ஓர் உற்சாகம் தெரிந்தது. ஒவ்வொரு பந்தும் எல்லைக்கோட்டைத் தொடு வதற்காக ஓடத் தொடங்கியதுமே பார்வையாளர்கள் பகுதியிலிருந்து எழுந்த ஆரவாரம் அந்த மாணவியரை மேலும் உற்சாகம் கொள்ளவைத்தது.

பந்து வீசிக்கொண்டிருந்த அணி புறநகரத்தை ஒட்டிய ஓர் அரசுப் பள்ளி மாணவியர் அணி. சில மாணவியர் மட்டுமே உற்சாகத்தோடும் வேகத்தோடும் காணப்பட்டனர். எல்லாத் தருணங்களிலும் பிறரைப் பார்த்து, “கமான் கமான்” என்று தூண்டிக்கொண்டே இருந்தனர். ஆனால், பிறருடைய முகங்களில் தோல்வியச்சமும் குழப்பமும் அப்போதே கவியத் தொடங்கிவிட்டன. பத்து ஓவர் வீசியும் ஒருவரைக்கூட அவுட் ஆக்க முடியவில்லையே என்கிற இயலாமை அவர்களின் முகங்களில் தெரிந்தது.

எங்கோ எல்லைக் கோட்டில் நின்றிருந்த ஓர் ஆட்டக்காரரைப் பெயர் சொல்லி அழைத்து 11ஆவது ஓவரை வீசும்படி பந்தைக் கொடுத்தார் அணித்தலைவி. அவர் மாறிமாறி கையைச் சுழற்றியபடி பந்து வீச நடந்தார். மெலிந்த உடல். உயரமாக இருந்தார்.

“தைரியமா போடு. டூ ஆர் டை” என்று பார்வையாளர்கள் கூட்டத்திலிருந்து சீருடை அணிந்த மாணவி ஒருவர் கையை உயர்த்தித் திடீரெனச் சத்தமெழுப்பினார். அவருடைய ஒற்றைக்குரலைக் கேட்டு அனைவரும் அவர் பக்கம் பார்வையைத் திருப்பினர். அவர் உடைகள் நிறம் மங்கியிருந்தன. தலைப்பின்னலை மடித்துக் கட்டியிருந்தார். ஆனால், முகம் பளிச்சென இருந்தது. அடுத்த கணமே, அவர் குரலோடு இன்னும் பத்துக் குரல்கள் இணைந்து முழங்கின.

பந்து வீசுவதற்காகச் சென்ற மாணவி தன்னம்பிக்கையோடு ஓடிவந்து பந்து வீசினார். அவருடைய உடலிலிருந்து எழுந்த வேகத்தை நம்பவே முடிய வில்லை. வேகமாகப் பாய்ந்து வந்த பந்தை, மட்டையைப் பிடித்திருந்த மாணவி தடுத்து ஆடினார். ரன் எடுக்க முடியவில்லை. அடுத்த பந்திலும் ரன் கிடைக்கவில்லை. அதுவரை சிக்சர் சிக்சர் என ஆரவாரமெழுப்பிய கூட்டம் சட்டென அமைதியில் மூழ்கியது. அதே நேரத்தில் மறுதிசையிலிருந்து, “டூ ஆர் டை” என்கிற ஆரவாரக் குரல் நிற்காமல் ஒலித்தது.

11ஆவது ஓவரில் ஆறு பந்துகளிலும் ஒரு ரன்கூட எடுக்க முடியவில்லை. அது களத்தில் இருந்த பிறருக்குத் தன்னம்பிக்கையை அளித்தது. 12ஆவது ஓவரை வீச உயரமான ஒரு பெண்ணிடம் பந்து ஒப்படைக்கப்பட்டது.

மட்டையுடன் இருந்த மாணவி, அந்தப் பந்தைத் தவறான திசையில் அடித்தார். அது உயரமாக எழும்பிச் சென்று, அங்கே நின்றிருந்த பந்து வீச்சாளர் அணியிலிருந்த ஒருவரின் கைகளில் தஞ்சமடைந்தது. ஆட்டத்தின் முதல் அவுட். அதுவரை அமைதி நிலவிவந்த பக்கத்திலிருந்து முதன்முறையாக ஆரவாரக்கூச்சல் தொடங்கியது. ஆரவாரக் குரல்கள் ஒலித்த திசை அமைதியில் மூழ்கியது.

அவுட் ஆன மட்டையாளர் அனை வரையும் கோபத்துடன் முறைத்து விட்டு வெளியேறினார். அடுத்த மட்டையாளர் உள்ளே வந்தார். ஏதோ ஓர் ஆவேசத்தின் காரணமாக, தன்னை நோக்கி வந்த எந்தப் பந்தையும் சரியான கோணத்தைக் கணித்து அவரால் ஆட முடியவில்லை. கடைசிப் பந்தை வேகமாக அடிக்க முயன்றபோது, பின்னால் நின்றிருந்த விக்கெட் கீப்பர் கைகளில் பந்து எளிதாகத் தஞ்சமானது. தான் அவுட்டாகிவிட்டோம் என்பதையே நம்ப முடியாத அவர், ஓரிரு நொடி தலைகுனிந்த நிலையில் நின்றுவிட்டு வெளியேறினார். பந்து வீசியவருக்கான ஆதரவு முழக்கம் விண்ணைத் தொட்டது. நான்காவது மட்டையாளர் களத்துக்கு வந்தார்.

16ஆவது ஓவரில்தான் தனியார் பள்ளி அணி நூறு ரன்னைத் தொட்டது. அதற்குள் ஆறு விக்கெட்டுகள் சரிந்திருந்தன. ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் இருந்தது. ரன் எடுத்தால் ஒரு பக்கத்தில் ஆரவாரமும் ரன் எடுக்காவிட்டால் இன்னொரு பக்கத்தில் ஆரவாரமும் மாறிமாறி எழுந்தன.

19ஆவது ஓவரில் ஆடவந்த ஆட்டக்காரர் ஒரு சிக்சருடன் அந்த ஓவரை முடித்தார். ரன் கணக்கு 110. வெற்றி பெற 16 ரன் தேவை என்கிற நிலையில் இறுதி ஓவரை யார் வீசுவது என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வதைப் பார்க்க முடிந்தது. கடைசியில் முதல் விக்கெட்டை வீழ்த்திய பந்து வீச்சாளரிடம் பந்து சென்றது.

“சிக்சர் சிக்சர்” என்கிற முழக்கம் எங்கெங்கும் கேட்டது. ஆனால், முதல் பந்தில் இரண்டு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எல்லைக் கோட்டைத் தொடுவதற்கு முன்பாகவே பந்து தடுக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் முழக்கம் ஓயவில்லை. அடுத்த பந்தில் அவரும் வீழ்ந்துவிட்டார்.

புதிதாகக் களத்தில் இறங்கிய மட்டையாளர் நம்பிக்கையோடு ஆட்டத்தைத் தொடங்கினாலும், மட்டைக்குச் சிக்காமல் பின்பக்கம் சென்ற பந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்ப்பை வீழ்த்தியது. அடுத்தடுத்து ஆட வந்தவர்கள் நிலைத்து நின்று ஆடாததால், 12 ரன்கள் வித்தியாசத்தில் அரசுப் பள்ளி அணி வெற்றிபெற்றது.

அதுவரைக்கும் தனியார் பள்ளி அணிக்காக ஆதரவு முழக்கம் எழுப்பிய கூட்டம் வேகமாகக் கரைந்தது. பரிசுக்கோப்பை வழங்கும் நிகழ்ச்சி வரைக்கும்கூடக் காத்திருக்க அவர்களுக்குப் பொறுமையில்லை. அரசுப் பள்ளி மாணவியர் கோப்பையை உயர்த்திக் காட்டியபடி மைதானத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர். பையிலிருந்து ஒரு வெள்ளரிப்பிஞ்சை எடுத்துக் கடித்தபடி மைதானத்திலிருந்து வெளியேறினேன்.

(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)

- writerpaavannan2015@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in