

சென்னையில் 1960களில் பல இசைக் குழுக்கள் தோன்றின. அவற்றில் காமேஷ் - ராஜாமணி இசைக்குழு தென் சென்னையிலும், குணாளன் - நிர்மலா இணையரின் ‘ஜோதி’ இசைக் குழு வட சென்னையிலும் மிகவும் பிரபலம். முதன்மையான இந்த இரண்டு இசைக் குழுக்களிலிருந்து பல இசைக்குழுக்கள் தோன்றின. இன்றைக்கும் வட சென்னையில் பக்தி இசை நிகழ்ச்சிகளை குணாளன் நடத்திக்கொண்டிருக்கிறார்.
1970களில் ‘மியூசியானோ’ இசைக் குழுவைத் தொடங்கி இசை மேடைகளில் பிரகாசித்தவர் ஏ.வி.ரமணன். இந்த வரிசையில் 1975களில் உதயமான இசைக்குழு ஸ்ரீதரின் ‘நவராக்ஸ்’. அண்மையில் நவராக்ஸின் 50ஆவது ஆண்டைக் கொண்டாடும் இசை நிகழ்ச்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் விமரிசையாக நடந்தது. 50 பாடகர்கள் பங்கேற்றுப் பாடினர்.
50 ஆண்டு கால இசைப் பயணம் குறித்து நவராக்ஸ் இசைக்குழுவின் நிறுவனர் ஸ்ரீதரிடம் கேட்டோம்: “நவராக்ஸின் 50 ஆண்டு காலப் பயணம் இனிமை யானது. இதுவொரு கப்பல் பயணம் போன்றது. 50 ஆண்டு நிறைவையொட்டி எனக்குச் சிறிய கப்பல் ஒன்றை நினைவுப் பரிசாக நண்பர்கள் அளித்தனர். நிறைய தடங்கல்களைத் தாண்டித்தான் இந்தப் பயணம் தொடர்கிறது.
1975 ஆகஸ்ட் 18 அன்று எங்கள் முதல் நிகழ்ச்சியைத் தொடங்கினோம். இனிமையான தமிழ், இந்தி மெலடிப் பாடல்களைத்தான் எங்களின் நிகழ்ச்சியில் பாடுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தோம்.
‘பாடலில் இருக்கும் மெலடியை எடுத்துவிட்டால் கேட்பவர்களுக்கு நோய் பிடித்துவிடும்’ என்பார் எம்.எஸ்.விஸ்வநாதன். இந்த நுணுக்கம் தெரிந்ததால்தான் அவர் இன்றைக்கும் மெல்லிசை மன்னராக மக்களின் மனங்களில் வாழ்கிறார்.
“நவராக்ஸின் இசைப் பயணத்தில் ‘கலாரசனா’ எஸ்.ஆர்.சீனிவாசன் முக்கியமானவர். அவருடைய சபாவின் சார்பாக ராணி சீதை அரங்கத்தில் குறைந்தது 70 நிகழ்ச்சிகளைச் செய்திருக்கிறேன். அவர் இன்றைக்கு இல்லை. அவரின் ஆசிர்வாதத்தில் எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம்.
கோவை முரளி டி.எம்.எஸ். குரலில் 36 ஆண்டுகளாக எங்கள் இசைக் குழுவில் பாடிக்கொண்டிருக்கிறார். ஏறக்குறைய 3 ஆயிரம் பாடல்களை மனப்பாடமாகப் பாடக்கூடியவர். ஜெயஸ்ரீ பல முன்னணிப் பாடகிகளின் குரலில் பாடுபவர். எங்களிடம் 17 ஆண்டுகளாகப் பாடிக்கொண்டிருப்பவர்.
பானுமதி, பி.லீலா, கே.பி.சுந்தராம்பாள் குரல்வளத்திலும் பாடல்களைப் பாடுபவர். ஏ.எம். ராஜாவின் குரலில் பாடுபவர்களில் சிறந்தவர் என்றால் சி.ஏ. ராஜா என்றுதான் சொல்வார்கள். ஞானசேகரன், ரூபன் உள்ளிட்ட பாடகர்கள் இசைக் குழுவின் பலம்” என்றார் ஸ்ரீதர்.