

“நீங்க வாக்கிங் போகும்போது ஒரு குரல் கொடுக்க முடியுமா சார்? பொண்ணு போனதுக்கப்புறம் தனியா வெளியே நடக்கறதுக்கே பயமா இருக்குது. கெட்ட யோசனை எல்லாம் வருது. நானே போய் ஏதாச்சும் வண்டி முன்னால விழுந்துடுவோமோன்னு பயமா இருக்குது” என்றார் ஞானவேல்.
எனக்குச் சங்கடமாக இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருடைய ஒரே மகள் சென்னையில் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்து விட்டார். அந்த அதிர்ச்சியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. பாறை மாதிரி உறுதியாக இருந்த அவர் மனம் களிமண் பொம்மையைப் போலச் சுக்குநூறாக உடைந்துவிட்டது.
அவர் மகள் சுறுசுறுப்பான பெண். பொறியியல் பட்டம் பெற்ற கையோடு கேம்பஸில் தேர்வு பெற்று சென்னைக்கு வேலைக்குச் சென்றார். முழுதாக ஓர் ஆண்டுகூட முடியவில்லை. அதற்குள் அவர் வாழ்ந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. “பயப்படாதீங்க ஞானவேல். உங்களுக்குத் துணையா நான் இருக் கேன்” என்று அவருடைய கைகளைப் பற்றி நம்பிக்கையூட்டினேன். கண்கள் கசிய அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
அடுத்த நாள் காலையில் நான் நடைப்பயிற்சிக்குத் தயாரானதும் ஞானவேலுவுக்குக் கைபேசி வழியாகத் தகவல் சொன்னேன். நான் குடியிருந்த தெருவிலேயே பத்து வீடு தள்ளி குடியிருந்தார் அவர். நான் அவருடைய வீட்டை நெருங்கிய நேரத்தில் அவர் வீட்டுக்கு வெளியே காத்திருந்தார். இரண்டு பேருமாகச் சேர்ந்து நடந்தோம். அன்று மாலை நடையிலும் அவர் என்னோடு சேர்ந்துகொண்டார்.
ஒருநாள் மாலை ஞானவேலுவுக்காக அவர் வீட்டை அடைந்தபோது வாசலில் ஞானவேலுவின் மனைவி நின்றிருந்தார். கதவையொட்டி விரித்த பாயில் அடுக்கடுக்காகப் புடவைகள் குவிந்திருந்தன. “எல்லாமே புதுப்புடவைங்கதான். ஏன் வேணாங்கறீங்க?” என்று பக்கத்தில் நின்றிருந்த ஒருவரிடம் அவர் கேட்டார். அவரோ, “பட்டுப் புடவைங்களதாம்மா எடுப்போம். இதுங்கள எடுக்கறதில்லம்மா” என்று எழுந்து நின்றார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்களுடைய உரையாடலில் குறுக் கிட்டு, “தம்பி, நீங்க போங்க. தப்பா எடுத்துக்காதீங்க” என்று சொல்லி அனுப்பிவைத்தார் ஞானவேல். பிறகு தன் மனைவியின் பக்கம் திரும்பி, “போனா போவுது விடு சிவகாமி. உள்ள வா. எல்லாத்துக்கும் வேற ஒரு ஏற்பாடு செய்யறேன்” என்று சொல்லிக்கொண்டே தோளைத் தொட்டு அறைக்குள் அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தார். பிறகு பாய் மீது கிடந்த புடவைகளை எல்லாம் பக்கத்திலிருந்த கட்டைப்பைகளில் போட்டு ஓரமாக வைத்தார். கதவைச் சாத்தியபடி, “வாங்க போகலாம்” என்று இறங்கினார்.
பிரதான சாலையை அடையும் வரைக்கும் ஞானவேல் எதுவும் பேச வில்லை. பிறகு மெதுவாகச் சொல்லத் தொடங்கினார்: “பொண்ணு அலமாரி நிறைய துணியா வாங்கி அடுக்கி வச்சிருக்குது. ஒவ்வொரு நாளும் அதைத் தெறந்து பார்த்துப் பெருமூச்சு விடறதே அவளுக்கு வேலையா போச்சு. எல்லாத்தையும் எப்படி டிஸ்போஸ் பண்ணறதுன்னு தெரியலை. யாரோ ஒரு டி.வி.எஸ். வண்டிக்காரர் பழைய புடவை வாங்கறோம்னு சத்தம் போட்டுக்கிட்டு போனார். உடனே அவரைக் கூப்பிட்டு வச்சிக்கிட்டுப் பேச ஆரம்பிச்சிட்டா.”
அந்தச் சிக்கலின் ஆழத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று தோன்றியது.
“சிட்டிக்குள்ள அதை டிஸ்போஸ் செய்யறது கொஞ்சம் கஷ்டம்தான் சார். ஊருல சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கன்னு யாரும் இல்லையா? அவுங்களுக்கு ஆளுக்குக் கொஞ்சம் பிரிச்சிக் கொடுக்கலாமே?” “தம்பிகிட்ட அதை ஆரம்பத்திலயே சொன்னேன்.
முதல்ல சரி சரின்னு சொன்னான். அப்பறமா விசாரிச்சிட்டு யாரும் வேணாம்னு சொல்றாங்கன்னு சொல்லிட்டான்.” “ஏன்?” “நம்ம வீட்டுல நடந்ததுதான் ஊருக்கே தெரிஞ்ச விஷயமாச்சே. செத்தவங்க டிரெஸ்னு சொல்லும்போது எல்லாருக்குமே ஒரு தயக்கம் வருது சார்.”
“கொஞ்சம் கஷ்டத்துல இருக்கற வங்கள அணுகினா வாங்கிக்க மாட்டாங்களா?” “எல்லா முயற்சியும் பண்ணியாச்சு சார். இப்ப எல்லாருமே பணமாதான் எதிர்பார்க்கறாங்க. சாப்பாடு, துணிமணின்னு சொன்னாவே வேணாம்னுதான் சொல்றாங்க.” நடையை முடித்துக்கொண்டு காபி குடித்துவிட்டுத் திரும்பியபோது எனக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. “கவலையை விடுங்க ஞானவேல். ஒரு தீர்வு இருக்குது.” “என்ன சார்?”.
“இந்திரா நகர்ல ஒரு ஹோம் இருக்குது ஞானவேல். பணம், அரிசி, பருப்பு, மளிகை, சோப்பு, பழைய துணி, பழைய புக்ஸ், நியூஸ் பேப்பர்னு நமக்கு முடிஞ்சத எடுத்துட்டுப் போய் கொடுக்கலாம். அதுக்காகவே ஒரு சின்ன அறை இருக்குது. அங்க வச்சிட்டு வந்துடலாம்.” “அதையெல்லாம் அவுங்க என்ன செய்வாங்க?” “என்ன செஞ்சா நமக்கென்ன ஞானவேல்? நாங்க வருஷா வருஷம் பழைய துணிகளை எல்லாம் சேர்த்து ரெண்டு, மூணு கட்டைப்பையில நிரப்பி அங்க வச்சிட்டு வந்திடுவோம். எங்க பர்த்டே, வெட்டிங்டே நேரத்துல ஸ்வீட் பாக்ஸ், கேக், சாக்லெட் எல்லாம் வாங் கிட்டுப் போய் வைக்கறதும் உண்டு.”
நான் சொல்லச் சொல்ல அவர் முகம் மலர்ந்தது. “இப்படி ஒரு இடம் இருக்கறதே எனக்குத் தெரியாது சார்” என்றார். “வீட்டுல எதெல்லாம் இருக்க வேணாம்னு நெனைக்கறீங்களோ, அதையெல்லாம் தனித்தனியா கட்டைப் பைகள்ல போட்டு வைங்க. தெனமும் நாம ரெண்டு பை எடுத்துட்டுப் போய் வச்சிட்டு வரலாம்.
நாளைக்கே ஆரம்பிச்சிடுவோம். சரியா?” “சரி சார்.” “பைக்குள்ள வெறும் துணியை மட்டும் வைக்க வேணாம். துணிகளோடு ஒவ்வொரு பையிலயும் ரெண்டு கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை, உளுந்து, மிளகாய்த்தூள்னு ஏதாச்சும் ஒண்ணு வைங்க.”
“சரி சார்” “முடிஞ்சா கவருக்குள்ள ஒரு சின்ன தொகையையும் போட்டு ஒட்டிவச்சிடுங்க.” “நிச்சயமா அப்படியே செய்றேன் சார்.” நீண்ட காலத்துக்குப் பிறகு அவர் முகத்தில் ஒரு புன்னகையைப் பார்த்தேன். அடுத்த நாள் மாலை கட்டைப் பைகளோடு அவர் வீட்டு வாசலில் காத்திருந்தார். ஆளுக்கொரு பையை எடுத்துக்கொண்டு நடந்தோம்.
பூங்கா நடைக்குப் பதிலாக அன்று சாலையோர நடையாக அமைந்துவிட்டது. அந்த இல்லத்தின் முன்னால் வைக்கப் பட்டிருந்த திறப்பை அவரிடம் சுட்டிக் காட்டினேன். “இத்தன வருஷங்கள்ல ஒரு நூறு தரமாவது இந்தத் தெரு வழியா நான் போயிருப்பேன் சார். ஒருநாளும் இந்த இல்லம் என் கண்ணுலயே படலை” என்றவர், பைகளைத் தூக்கி, திறப்பின் கதவைத் திறந்து ஒவ்வொன்றாக வைத்தார். அவை உருண்டு சென்று தரையைத் தொடும் சத்தம் கேட்டது.
திரும்பி வரும்போது பூங்காவையும் ஒரு சுற்று சுற்றிவிட்டுத் திரும்பினோம். ஆறு நாள்களில் பன்னிரண்டு பைகளை எடுத்துச் சென்று சேர்த்துவிட்டோம். ஏழாவது நாள் ஞானவேல் இரண்டு பைகளோடு வாசலில் காத்திருந்தார். “இன்னையோடு முடிஞ்சிடும் சார்” என்றார். “இதான கடைசிப் பை? இன்னைக்கு உங்க வீட்டம்மாவை அழைச்சிட்டுப் போங்க ஞானவேல்.
அவங்க கையால எடுத்து வச்சிட்டு வரட்டும். அவங்க மனசுக்கும் திருப்தியா இருக்கும்” என்று ஞானவேலுவிடம் சொன்னேன். “ஏன் சார்?” “சொல்றபடி செய்ங்க ஞானவேல்.” ஞானவேல் தன் மனைவியை அழைத்தார். இரண்டு பேரும் ஆளுக் கொரு பையை எடுத்துக்கொண்டு நடந்தார்கள்.
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)
- writerpaavannan2015@gmail.com