

அல்சூரில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு அருகில் ‘காவேரி பள்ளிக்கூடம்’ இயங்கிவந்தது. எல்.கே.ஜி. முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் அங்கு படித்துவந்தார்கள். எங்கள் மகனையும் அந்தப் பள்ளியில் சேர்த்தோம்.
காலையில் அவனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை நான் ஏற்றிருந்தேன். வீட்டிலிருந்தே அவனைத் தூக்கிக்கொண்டு செல்வேன். வீட்டை விட்டுப் புறப்படும்போது ஒரு கதையை ஆரம்பித்து, பள்ளி வாசலை நெருங்கும்போது முடிப்பேன். காதருகில் அவன் உம் கொட்டும் சத்தத்தைக் கேட்டபடியே நடப்பது ஓர் இனிய அனுபவம்.
நாங்கள் நடந்துசெல்லும் வழியில் ஒரு பூங்கா. அதற்கு எதிரில் வண்ணம் பூசிய சுற்றுச்சுவர். சுற்றுச்சுவருக்குள் ஒரு பாதி இடத்தில் வீடும், மறு பாதி இடத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட கூடமும் இருந்தன. சுவரையொட்டி இரண்டு ஊஞ்சல்கள் இருந்தன. 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கிரில் கதவுக்கு அருகில் நின்றிருந்தார். நெற்றியில் திருநீறு பளிச்சென்றிருந்தது.
அவர் வீட்டைக் கடந்து செல்லும் ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் அவருக்கு வணக்கம் சொல்வார்கள். ‘குட்மார்னிங் மிஸ்’, ’நமஸ்தே டீச்சர்’, ‘நமஸ்காரா மிஸ்’ எனப் பலவிதமான குரல்கள் ஒலிக்கும். அவரும் பதில் வணக்கம் சொல்வார்.
எல்லாப் பிள்ளைகளையும் போல, ஒருநாள் என் மகனும் ஏதோ உத்வேகத்தில் அவரைப் பார்த்து ’குட்மார்னிங் டீச்சர்’ என்று சொன்னான். அவர் அவனை ஆச்சரியத்தோடு பார்த்துவிட்டு விழிவிரிய, ‘குட்மார்னிங் மை டியர் சைல்ட்’ என்றார். அதைக் கேட்டதும் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் துள்ளினான் அவன். அந்த மகிழ்ச்சிக்காகவே ஒவ்வொரு நாளும் அந்த குட்மார்னிங் பரிமாற்றம் தொடர்ந்தது.
இரண்டு, மூன்று வாரங்களுக்குப் பிறகு அவன் குட்மார்னிங் சொன்னபோது, “ஒரு நிமிஷம், இங்க வா” என்று அழைத்தார் அவர். அவன் என்னைப் பார்த்தான். நான் அவனைத் தூக்கி வைத்திருந்த நிலையிலேயே அவர் நின்றிருந்த இரும்புக் கதவுக்குப் பக்கத்தில் நின்றேன்.
அவனுடைய பெயர், வயது, படிப்பு என ஒவ்வொரு கேள்வியாக அவனிடம் அவர் கேட்டார். கடைசியாக அவர் அவனுடைய கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளிவிட்டு, “பெரிய புத்திசாலி பையனா இருக்க. ஆனா, கொழந்தை மாதிரி அப்பா இடுப்புல ஏன் உக்காந்துட்டுப் போற? உனக்கு நடக்கத் தெரியாதா?” என்று கேட்டார். அதைக் கேட்டு அவன் முகம் சிவந்துவிட்டது. உடனே என் இடுப்பிலிருந்து கீழே இறங்கிவிட்டான்.
“இப்பதான் நீ குட் பாய். உன் புத்தகப் பையையும் நீயே எடுத்துக்கணும். அப்பதான் நீ வெரிகுட் பாய்” என்றார். விசையூட்டப்பட்ட இயந்திரத்தைப் போல அவன் என்னிடமிருந்த புத்தகப்பையை வாங்கி முதுகுப்பக்கம் போட்டுக் கொண்டான். “வெரி வெரி குட்பாய். போய் வா” என்று குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டார் அவர்.
அவனுடைய மாற்றம் ஒருவகை யில் மகிழ்ச்சியை அளித்த போதும், பிறிதொரு கோணத்தில் எனக்கு வருத்தத்தை அளித்தது. அந்த நாளுக்குப் பிறகு, அவனைத் தூக்கிக் கொண்டு நடப்பதற்கான வாய்ப்பையே அவன் எனக்கு அளிக்கவில்லை. திடீரென அவன் ஒரு தனிமனிதனைப் போல நடந்து செல்லத் தொடங்கினான்.
ஒரு விடுப்பு நாளில் நடைப் பயிற்சிக்காக டீச்சர் வீட்டுக்கு எதிரிலிருந்த பூங்காவுக்குச் சென்றேன். அந்தத் திறந்தவெளிக்கூடத்தில் பத்துப் பன்னிரண்டு சிறுமியர் உட்கார்ந் திருந்தனர். கரும்பலகையில் எதையோ எழுதி விளக்கிக்கொண்டிருந்தார் டீச்சர்.
ஒரு சிறிய வகுப்பறைபோல இருந்தது. அந்த வாசலைக் கடந்து செல்லும்போது அவர் என்னைப் பார்த்துவிட்டார். நான் “வணக்கம் டீச்சர்” என்றேன். வணக்கம் சொல்வதுபோல அவர் அங்கிருந்தே கையை உயர்த்தினார். அடுத்த நாள் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் போது, “டியூஷன் நடத்தறீங்களா டீச்சர்?” என்று கேட்டேன். அவர் புன்னகைத்தபடி “ம்” என்று தலையசைத்தார்.
ஒரு தனியார் பள்ளியில் பல ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தவர். கணவர் வங்கி ஊழியர். ஒரே மகன். பொறியியல் பட்டதாரி. மேற்படிப்புக்காக கனடாவுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டார். எதிர்பாராத விதமாக டீச்சரின் கணவர் உடல்நலம் குன்றி இறந்துவிட்டார்.
இறுதிச் சடங்குக்காக வெளிநாட்டிலிருந்து வந்த மகன், அம்மாவைத் தன்னோடு அழைத்துச் செல்ல விரும்பினான். ஆனால், டீச்சருக்கு அதில் விருப்பமில்லை. கணவர் கட்டிய வீட்டிலேயே வாழ வேண்டும் என்கிற முடிவில் உறுதியாக நின்றுவிட்டார்.
தனிமைத் துயரிலிருந்து மீண்டுவர அப்போதுதான் அக்கம்பக்கத்தில் வசிக்கும் ஏழைச் சிறுமிகளுக்கு இலவசமாகக் கற்பிக்கத் தொடங்கினார். பிறகு, கால ஓட்டத்தில் அதுவே அவருடைய வாழ்க்கையாக மாறிவிட்டது.
ஐந்தாம் வகுப்பு முடிக்கும் வரை என் மகனும் நானும் ஒன்றாகவே பள்ளிக்கூடத்துக்கு நடந்து சென்றோம். அந்த ஆண்டு கோடை விடுமுறையில் அவன் தன் நண்பர்களோடு சேர்ந்து மிதிவண்டி ஓட்டப் பழகிக்கொண்டான். அவனுக்கு நாங்கள் ஒரு மிதிவண்டியைப் பரிசாக வாங்கிக் கொடுத்தோம்.
ஆறாம் வகுப்பிலிருந்து அந்த வண்டியிலேயே அவன் பள்ளிக்கும் செல்லத் தொடங்கி விட்டான். அவனோடு சேர்ந்து நடப்பது சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என வகுப்புகள் மாற மாற கதை பேசுவதும் படிப்படியாக நின்றது.
பூங்கா பாதை வழியாகச் செல்வது குறைந்ததால் டீச்சரை எப்போதாவது ஒருமுறைதான் சந்திக்க முடிந்தது. ஒருமுறை முடிதிருத்தும் நிலையத்துக்கு டீச்சரம்மா வீட்டு வழியாகச் சென்றோம். அவர் என் மகனை அழைத்து உரையாடினார். கல்லூரியில் படிப்பதாகச் சொன்னபோது புருவத்தை உயர்த்தி புன்னகைத்தார். விடைபெறும்போது செல்லமாக அவன் கன்னத்தைத் தட்டினார்.
ஆண்டுகள் வேகமாக உருண்டன. பொறியியல் பட்டம் பெற்றதும் என் மகன் வேலை நிமித்தமாக மைசூருக்குச் சென்றுவிட்டான். ஒரு நாள் காலை கடைவாசலில் ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியைப் பார்த்து, உறைந்துவிட்டேன். அது டீச்சரின் புன்னகை தவழும் முகம். பதற்றத்தோடு டீச்சர் வீட்டுக்குச் சென்றேன். வாசல் முழுக்க ஏராளமான சிறார்கள் கூடியிருந்தனர்.
வீட்டை நெருங்கி இரும்புக் கதவைத் தொட்டதுமே என் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. அவர் காலருகில் சென்று கைகுவித்து வணங்கினேன்.
“ஏர்போர்ட்ல எறங்கிட்டாராம். இன்னும் ரெண்டு மணி நேரத்துல இங்க வந்துடுவாராம்.”
அருகில் யாரோ ஒருவர் கைபேசி வழியாக உரத்த குரலில் இன்னொருவருக்குச் செய்தியைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்.
மைசூரிலிருக்கும் என் மகனுக்குத் தகவலைத் தெரிவித்தேன். அதிர்ச்சியில் அவனிடமிருந்து பதில் வரவில்லை. எனக்கும் பேச்சு வரவில்லை.
சில நிமிடங்களுக்குப் பிறகு, “என்னப்பா சொல்றீங்க? நெஜமாவா? ரெண்டு நாள் முன்னால என் கனவுல அந்த டீச்சர் வந்தாங்கப்பா. என் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்தாங்கப்பா” என்றான்!
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)
- writerpaavannan2015@gmail.com