

தஞ்சையின் கரந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. அடிப்படையில் பொறியாளரான இவர், அறிவியலைச் சாமானிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் காணொளிகளைத் தன் இன்ஸ்டகிராம் / யூ டியூப் பக்கத்தில் பக்கத்தில் (chellavandu_pechu) வெளியிட்டுவருகிறார். இவரது காணொளிகள் லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றிருக்கின்றன.
ஒரு தீக்குச்சியின் பின்னாலிருக்கும் அறிவியல் என்ன என்பதை விளக்கமாகக் கூறுவதோடு, கருவிகளையும் உருவாக்கிவிடுகிறார் கார்த்தி! ஊசிதுளை ஒளிப்படக் கருவி, நுண்ணோக்கி, தொலைநோக்கி என இவரது அறிவியல் கருவிகளின் பட்டியல் நீள்கிறது.
ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் கார்த்தி பேசுவது அவரது அறிவியல் காணொளிகளுக்குக் கூடுதல் மதிப்பைச் சேர்த்திருக்கிறது.
“இன்ஜினீயரிங் படிப்பை முடித்து, வட இந்திய மாநிலங்களில் சில காலம் பணியாற்றினேன். பிறகு நைஜீரியா, ஸாம்பியா போன்ற நாடுகளில் டெஸ்டிங் இன்ஜீனியராக வேலை செய்தேன். அங்கு நான் பார்த்த வேலை பணத்தை அளித்ததே தவிர, மனநிறைவு கிடைக்கவில்லை. அதனால், ஊருக்குத் திரும்பிவிட்டேன்.
என் உறவினரின் மீன் பண்ணை ஒன்றில் உதவியாக இருந்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே அறிவியலின் மீது ஆர்வம் உண்டு. என் ஓய்வு நேரத்தில் விசைகளின் செயல்பாடு குறித்து ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பேன். அப்போதெல்லாம் அறிவியல் காணொளிகளை உருவாக்குவேன் என்று நினைத்தது இல்லை.”
அறிவியல் தொடர்பான காணொளிகளின் தேர்வு மட்டுமல்ல, அதை விளக்கும் முறையிலும் வித்தியாசத்தைக் கையாளும் கார்த்தி, செய்முறைகளுக்காக வீட்டிலிருக்கும் பொருள்களையே பெரும்பாலும் பயன்படுத்திவருகிறார்.
“ஒரு செயலைச் செய்வதற்கு வலுவான காரணம் வேண்டும். இந்த அறிவியல் காணொளிகளை உருவாக்க எனக்கும் ஒரு காரணம் இருந்தது. நம் தலைமுறையின் மிகப் பெரிய பிரச்சினையாக அடிப்படையை அறிவதில் ஆர்வமில்லாத குறைபாட்டைப் பார்க்கிறேன். நாம் எதையும் அதன் அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்வது கிடையாது.
நாம் வேலையைக் கற்றுக்கொண்டு, அதன் மூலம் பணம் ஈட்ட ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், அந்த வேலையின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள விரும்புவது இல்லை. அந்த மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நினைத்தேன். மேலும், தமிழர்களின் பழம் பெருமைகளை மட்டும் கூறிக்கொண்டு இல்லாமல், நவீன உலகில் நாமும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும். அதற்கு அடிப்படைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதன் பொருட்டே காணொலிகளை உருவாக்கிவருகிறேன்.”
“இன்ஸ்டா கன்டென்ட்களைப் பொறுத்தவரை ஒரு நிமிடத்திற்குள் நாம் சொல்லும் செய்தியைத் தெளிவாகவும் முழுமையாகவும் கூறிவிட வேண்டும். அப்போதுதான் அது பார்வையாளர்களுக்குச் சுவாரசியமாக இருக்கும். ஆனால், அறிவியலை இந்தக் குறுகிய நேரத்துக்குள் வழங்குவது சற்றுச் சவாலானது. என் காணொளிகளைத் தமிழில்தான் வழங்கிவருகிறேன். இதற்காக நிறைய புத்தகங்களைப் படிக்கிறேன்” என்கிறார் கார்த்தி.
பிரபலத்துக்காகச் சமூக ஊடகங்களைக் கையிலெடுக்கவில்லை; தான் அறிந்த ஒன்றை மற்றவருக்கும் கற்பிக்கும் எண்ணத்தில் இப்பணியைத் தொடர்வதாகக் கூறும் கார்த்தி, மாணவர்கள், இளைய தலைமுறையினர் பயன்பெறும் வகையில் காணொளிகளை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்.