வண்ணக் கிளிஞ்சல்கள் 15 - இளநீர் என்ன விலை?

வண்ணக் கிளிஞ்சல்கள் 15 - இளநீர் என்ன விலை?
Updated on
3 min read

உரையாடலை முடித்துவிட்டுத் தொலைபேசியை வைப்பதற்கு முன்னால், “லைப்ரரிக்கா போகணும்?” என்று கேட்டார் நண்பர். நான் “ஆமாம்” என்றேன். உடனே அவர், “நானும் அந்தப் பக்கமாதான் டூ வீலர்ல போறேன். வழியில உங்கள எறக்கிவிட்டுட்டுப் போறேன். பத்தரை மணிக்கு ரோட்டு முனையில இளநி வண்டிக்குப் பக்கத்துல வந்து நில்லுங்க” என்றார். நானும் அவர் சொன்ன திட்டத்தை ஏற்றுக்கொண்டேன்.

வேகமாக எல்லா வேலைகளையும் முடித் தேன். நூலகப் புத்தகங்களை வைத்திருக்கும் பையோடு கால் மணி நேரம் முன்பாகவே இளநீர் வண்டி நிற்கும் இடத்தை அடைந்து, வேடிக்கை பார்த்தபடி காத்திருந்தேன்.

வண்டி நிறைய புத்தம் புதிய இளநீர்க் குலைகள் நிறைந்திருந்தன. ஒரு குலையின் மீது க்யூ.ஆர்., கோடு அச்சிடப்பட்ட அட்டை சாத்திவைக்கப்பட்டிருந்தது. கடைக்காரர் வண்டியை ஒட்டிப் போட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்திருந்தார்.

வேலை நாள் என்பதால் தெருவில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது. தொள தொளவெனச் சட்டையை அணிந்த ஒரு சிறுமி இளநீர் வண்டிக்கு அருகில் வந்து நின்றாள். சதுரமான க்யூ.ஆர்., கோடு சித்திரத்தை அவள் வெவ்வேறு விதமாகத் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.

“என்ன பாப்பா, என்ன வேணும் ஒனக்கு?” என்று அச்சிறுமியிடம் கேட்டார் கடைக்காரர்.

“இது என்ன படம் அங்கிள்? கட்டம் கட்டமா இருக்குது. ஒண்ணுமே புரியலை.”

“இது படம் இல்லை பாப்பா. இது மூலம் போன் வழியாவே பணம் அனுப்பலாம். அதெல்லாம் சரி, ஒனக்கு என்ன வேணும்?” என்று கேட்டார் கடைக்காரர்.

“ஒரு இளநி வேணும் அங்கிள்.”

கடைக்காரர் அச்சிறுமியின் முகத்தை ஒருமுறை தீவிரமாகப் பார்த்தார். பிறகு, “பணம் வச்சிருக்கியா?” என்று கேட்டார். உடனே சிறுமி கைக்குள் மடித்துவைத்திருந்த ரூபாய் நோட்டை எடுத்துக் காட்டினாள்.

“அம்பது ரூபாயா? அதுக்கெல்லாம் இளநி கிடைக்காது பாப்பா. ஒரு இளநி அறுபது ரூபா. இன்னும் பத்து ரூபா வேணும். வீட்டுல போய் வாங்கிட்டு வா.”

சிறுமி குழம்பிய முகத்தோடு கடைக் காரரையே பார்த்தாள். பிறகு குரலைத் தாழ்த்தி, “இவ்ளோதான் இருக்குது அங்கிள்” என்றாள்.

“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? அம்பது ரூபாய்க்கெல்லாம் இளநி வராது, போ.”

“ஒண்ணே ஒண்ணு கொடுங்க அங்கிள்.”

“சொன்னா கேளு பாப்பா. காலங்கார்த்தால தொல்லை கொடுக்காத, போ. போய் பெரியவங்கள அனுப்பு.”

கடைக்காரர் அலுப்போடு சொல்லிவிட்டு, தோளில் இருந்த துண்டை எடுத்து இளநீர்க்குலைகள் மீது ஒருமுறை விசிறினார். சிறுமி வருத்தத்துடன் திரும்பி நடந்தாள்.

அவள் நடந்து செல்லும் காட்சி வேதனை யளிப்பதாக இருந்தது. மீண்டும் சாலையில் பறந்து செல்லும் வாகனங்களைப் பார்க்கத் தொடங்கினேன்.

சிறிது நேரத்துக்குப் பிறகு சற்றே பெரிய சிறுவன் ஒருவன் இளநீர் வண்டியின் முன்னால் வந்து நின்றான். ஒல்லியான தோற்றம். நிறைய தலைமுடி. கன்னங்கள் ஒடுங்கி முகம் சின்னதாகத் தெரிந்தது.

“அங்கிள், ஒரு இளநி வேணும். எவ்ளோ அங்கிள்?” என்று கடைக்காரரிடம் கேட்டான்.

அவர் அமைதியாக அவனிடம், “நீ எவ்ளோ வச்சிருக்க?” என்று கேட்டார். அவன் மூடியிருந்த தன் கையைப் பிரித்து ஐம்பது ரூபாய் நோட்டைக் காட்டினான்.

“எந்தக் காலத்துல இருக்கடா நீ? ஒரு இளநி அறுபது ரூபா” என்றார்.

சிறுவன் கடைக்காரரின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான்.

“என் மூஞ்சியையே பார்த்துக்கிட்டு நின்னா பத்து ரூபா கெடைச்சிடுமா? போ” என்று சலிப்போடு சொன்னார் கடைக்காரர். சிறுவன் சென்றான்.

எனக்கு அந்தச் சிறுவனுக்கு உதவ வேண்டும் போல இருந்தது. ஆனால், ஏற்கெனவே பல இடங்களில் இப்படி வலியச் சென்று உதவியபோது நான் அடைந்த கசப்பான அனுபவங்களின் நினைவுகள் என்னைத் தடுத்தன. அந்தச் சங்கடத்தைக் கடக்கும் விதமாக, போக்குவரத்து இடையூறினால் முன்னேறிச் செல்ல முடியாமல் நின்றிருந்த வாகனங்களைப் பார்க்கத் தொடங்கினேன்.

“ஒரு இளநி என்ன விலைண்ணா?” என்கிற குரல் கேட்டு என் கவனம் தானாக வண்டியின் பக்கம் திரும்பியது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி நின்றிருந்தார். தலைமுடியைச் சுருட்டி கொண்டையாகக் கட்டியிருந்தார். அவருக்கு அருகிலேயே சற்றுமுன் வந்து போன சிறுமியும் சிறுவனும் நின்றிருந்தனர். அவர்கள் முகங்களைப் பார்த்த படியே கடைக்காரர், “அறுபது ரூபா” என்றார்.

“அறுபதா? அம்பது ரூபாய்க்குத் தர மாட்டீங்களா?”

“அதெல்லாம் கட்டுப்படியாவாதும்மா. கொடுக்கிறதா இருந்தா, ஏற்கெனவே அந்தப் பசங்க வந்து கேட்டப்பவே கொடுத்திருக்க மாட்டனா? போம்மா” என்றார் கடைக்காரர்.

“இப்படி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசினா எப்படிங்கண்ணா? இந்த மாதிரி தெனந்தெனமும் விலை ஏறிக்கிட்டே போனா ஏழைங்கள்லாம் எப்படிண்ணா இளநி குடிக்க முடியும்? அம்பது ரூபா வச்சிக்கிட்டு கொடுங்கண்ணா” என்று குரலைத் தாழ்த்திச் சொன்னார் அவர்.

“அப்படிலாம் வெல கொறைச்சி தர முடியாதும்மா. போம்மா.”

“சின்ன சைஸா இருந்தாலும் போதும்ணா. அம்பது ரூபாய வச்சிக்கிட்டு ஒண்ணு கொடுங்கண்ணா.”

“ஏம்மா, சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிட்டே இருக்கியே. ஒரு தரம் சொன்னா ஒனக்குப் புரியாதாம்மா?”

“புரியாம இருக்க நான் என்ன மூளையில்லாதவளா? நல்லாவே புரியுதுண்ணா. ஊட்டுல சம்பாதிக்கிற மனுஷன் மஞ்சக்காமாலை வந்து பத்து நாளா படுத்துக் கெடக்கறாருண்ணா. மூணு வேளையும் இளநி குடுன்னு சொல்றாரு அந்த டாக்டரு. மூணு வேளை கஞ்சிக் குடிக்கவே நாய் படாதபாடு படறவங்க நாங்க. இந்த லட்சணத்துல மூணு வேளை இளநிக்கு எங்கண்ணா போறது? ஒரு வேளைக்காவது குடுக்கலாம்னுதான் அம்பது ரூபா கடன் வாங்கியாந்தேன்.”

அவர் குரல் உடைந்து அடங்கியது. பிறகு முந்தானையை உயர்த்தி, கசியத் தொடங்கிய கண்களையும் மூக்கையும் துடைத்துக்கொண்டு திரும்பினார்.

என்ன நினைத்தாரோ கடைக்காரார், “இரும்மா” என்று குரலை உயர்த்தி அவரைத் தடுத்து நிறுத்தினார். குலையிலிருந்து ஓர் இளநீரை வெட்டியெடுத்து அவரிடம் கொடுத்தார். கையில் மடித்து வைத்திருந்த ஐம்பது ரூபாய்த் தாளைக் கொடுத்துவிட்டு, அந்த இளநீரை வாங்கினார் அவர்.

“இரும்மா” என்று மீண்டும் அவரைத் தடுத்து நிறுத்தினார் கடைக்காரர். குனிந்து குலையிலிருந்து இன்னும் இரண்டு இளநீர்க்காய்களை வெட்டியெடுத்து, “இதையும் எடுத்துட்டுப் போம்மா” என்றார்.

“அதுக்கெல்லாம் எங்கிட்ட பணம் இல்லையேண்ணா.”

“பரவாயில்லை. பணமெல்லாம் வேணாம். எடுத்துட்டுப் போயி அந்தாளுக்குக் குடு. இன்னைக்கு ஒண்ணு வாங்கினா ரெண்டு ஃப்ரீ” என்று சிரித்தார் கடைக்காரர்.

அந்தப் பெண் தலையசைத்தபடி அவற்றை எடுத்துச் சிறுமியிடம் ஒன்றும் சிறுவனிடம் ஒன்றும் கொடுத்தார். மூவரும் ஆளுக்கோர் இளநீரை எடுத்துக்கொண்டு நடந்து சென்றார்கள்.

(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)

- writerpaavannan2015@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in