

இன்றும் கிராமத்தின் சாலையோரங்களில் நான்கு அடி, ஐந்தடி உயரத்தில் இரண்டு கற்கள், குறுக்கே ஒரு கல்லுமான அமைப்புகள் உண்டு. அவை ’சுமைதாங்கிக் கற்கள்’. சில சுமைதாங்கிகள் தலையில் இருக்கும் சுமையை இறக்கி வைப்பதற்கும் சில சுமைதாங்கிகள் தோளில் இருக்கும் சுமையை இறக்கி வைப்பதற்கும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இப்போதும் சந்தை, பேருந்து, ரயில் நிலையங்களில் தலையிலோ முதுகிலோ மூட்டை தூக்கி வருவோரைப் பார்க்கலாம். இந்தத் தொலைவு என்பது குறைவாகவே இருக்கும். கைவண்டி, மிதிவண்டி, சரக்கு வண்டி, பேருந்து, ரயில் என வசதிகள் வந்த இந்தக் காலத்தில் நெடுந்தொலைவுக்குச் சுமையைச் சுமந்து செல்வது அரிதாகிவிட்டது. என்றாலும் இன்றும் பேருந்து வசதியே இல்லாத மலைக்கிராமங்களும் உள்ளன.
நகரங்களில்கூட நம் வீடுகளுக்கு வரும் கீரைக்கார, காய்கறிக்கார அம்மாக்கள் தலைச்சுமையாகப் பொருள்களைக் கொண்டு வந்து விற்பதைப் பார்க்கலாம். சுமையைக் கீழே இறக்குவதற்கும் மீண்டும் தலையில் தூக்குவதற்கும், ‘ஒரு கை பிடி தாயி’ என நம்மிடம் கேட்பதையும் பார்த்திருக்கிறோம். நாமும் தூக்குவதற்கு, இறக்குவதற்கு உதவி இருக்கிறோம். ஆனால், ஆளே இல்லாத இடத்தில் சுமையை இறக்கி வைக்க, தூக்க வேண்டுமென்றால் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு உதவத்தான் இந்தச் சுமைதாங்கிகள்.
காடுகளில் புல்லுக்கட்டு, விறகுக் கட்டு, முள்ளுக் கட்டு போன்றவற்றைத் தலையில் தூக்க மக்கள் சிரமப்படுவார்கள். அதுவும் முள்ளுக் கட்டைத் தூக்குவது அவ்வளவு எளிதல்ல. முள் நிறைந்த உடை மரத்தின், சுள்ளி எனப்படும் சிறு கம்புகளை, ஏறக்குறையப் பத்து அடி நீளத்திற்கு அடுக்கிக் கட்டாகக் கட்டி, ஊருக்குள் கொண்டு வந்து பெண்கள் விற்பார்கள். வாங்குபவர்கள், ஏறக்குறைய ஓர் அடி நீளத்திற்கு வெட்டிப் பயன்படுத்துவார்கள். இதில் வாங்குபவர், விற்பவர் இருவருமே ஏழைகள்தான்.
கையில் முள் குத்தும் வாய்ப்பு இருக்கும் என்பதால் அருகில் ஆள்கள் இருந்தால்கூடத் தூக்கி விடுவதற்கு முன்வர மாட்டார்கள். அதனால், பனை மரத்தின் மீது கட்டைச் சாய்த்துத் தலையில் சும்மாடு வைத்துத் தூக்கிச் சுமந்து வருவார்கள். சும்மாடு நழுவிவிட்டால் சிரமம். நல்ல அனுபவம் இருப்பவர்களால் மட்டுமே, ஒரே தடவையில் தூக்க முடியும்.
இவ்வாறு தூக்கிக்கொண்டு வரும்போது, வழியில் இளைப்பாற வேண்டும் என்றால் என்ன செய்வது? சுமைதாங்கிக் கற்கள் அவர்களுக்கு இளைப்பாறுவதற்கு உதவியாக இருந்தன. அப்படியே கல்லில் சுமையை வைத்துவிட்டு, அருகில் இருக்கும் குளத்தில் தண்ணீர் குடிப்பது, சாமி கும்பிடுவது, மர நிழலில் இளைப்பாறுவது, உண்பது எனப் பலவகையிலும் இவை வழிப்போக்கர்களுக்கு உதவியாக இருந்திருக்கின்றன. சுமைதாங்கியின் குறுக்குக் கல்லின் இரண்டு புறமுமாகத் துணியைக் கட்டி, குழந்தைகளைத் தூங்கவைக்கும் தொட்டிலாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இவை பொதுவாகப் பாதை ஓரங்களில், கோயில் அருகில், சாவடி அருகில், குளக்கரையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுமைதாங்கி அமைப்பது என்பது, ஓர் அறச்செயலாக இருந்தது. கருவுற்ற பெண் இறந்துவிட்டால், அவர் நினைவாகச் சுமைதாங்கிக் கல் அமைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. இன்றைய வாகன வசதி என்பது, இவற்றின் தேவை என்பதே இல்லாத அளவிற்கு, நம் பயணங்களை லகுவாக்கிவிட்டது.