

எங்கள் அலுவலகத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் ஒரு நாடக அரங்கமும் திரையரங்கமும் இருந்தன. ஆனால், எந்தக் காட்சியாக இருந்தாலும், அது ஏழு மணிக்குத்தான் தொடங்கும். எங்கள் அலுவலகமோ ஆறு மணிக்கெல்லாம் முடிந்துவிடும். இடைப்பட்ட ஒரு மணி நேரத்தைக் கழிப்பதற்காக, சுற்று வட்டாரத்தில் வாகன நடமாட்டம் இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் கால் போன போக்கில் வேடிக்கை பார்த்தபடி நடப்பேன். காட்சிக்கான நேரம் நெருங்கியதும் எங்காவது ஒரு கடையில் காபி அருந்திவிட்டு, அரங்கத்துக்குத் திரும்பிவிடுவேன்.
ஒருநாள் குடியிருப்புச் சாலையில் நடந்துகொண்டிருந்தபோது, தற்செய லாக ஒரு வீட்டின் தோற்றம் கண்ணைக் கவர்ந்தது. சுற்றுச்சுவரிலிருந்து ஐந்தாறடி இடைவெளியோடு அந்த வீடு கட்டப்பட்டிருந்தது. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் விதவிதமான பூச்செடிகள் நின்றிருந்தன. வீட்டைச் சுற்றி மட்டுமல்ல, வீட்டு மாடியிலும் ஒரு தோட்டம் இருந்தது. அங்கும் ஏராளமான செடிகள்!
ஒரு வெள்ளைச் செம்பருத்தியின் அழகில் மயங்கி பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்த வீட்டின் கதவைத் திறந்துகொண்டு ஒரு பெரியவர் வெளியே வந்தார். சற்றே தளர்வான டிஷர்ட், வேட்டி அணிந்திருந்தார். நேர்த்தியாகச் சீவி, நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்திருந்தார். நான் அவரை நோக்கி, “சூப்பர் நந்தவனம்” என்று பெருவிரலை உயர்த்திக் காட்டினேன். அவர் புன்னகைத்தார்.
நான் அப்போது அதே நகரத்தில் வேறொரு திசையில் வாடகை வீட்டில் குடியிருந்தேன். மிகவும் நெருக்கடியான இடம். ஒரே ஓர் ஆள் மட்டுமே நடக்கக்கூடிய அளவுக்கு மாடிப்படிக்கட்டுகளும் சந்தும் கொண்ட அந்த வீட்டில் செடி வளர்ப்பதைப் பற்றியெல்லாம் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியாது.
அதனால், அந்த நந்தவனத்தைப் பார்க்கும் போதெல்லாம், அப்படிப்பட்ட ஒரு வீட்டில் சாய்வுநாற்காலியில் அமர்ந்திருப்பதுபோலவும், மல்லிகை மணத்தை நுகர்ந்துகொண்டே புத்தகம் படிப்பதுபோலவும் கற்பனை செய்துகொள்வேன். அது நினைக்க நினைக்க வளர்ந்துகொண்டே போகும் பேரனுபவமாக இருக்கும்!
சில மாதங்களுக்குப் பிறகு அந்தப் பகுதிக்குச் சென்றபோது, நந்தவனத்து வீட்டின் வாசலையொட்டி ஒரு ஸ்கூட்டர் நிற்பதையும் ஒரு நடுத்தர வயதுக்காரர் அதைத் துடைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்தேன். அந்தப் பெரியவரை என் கண்கள் தேடின. எங்கும் காணவில்லை.
அவர் அங்கே இல்லை என்பது என்னை ஏதோ ஒரு வகையில் அமைதி இழக்க வைத்தது. அதன் விளைவாக ஒருநாள் விட்டு ஒருநாள் என ஆறேழு முறை அந்த நந்தவனத்து வீட்டின் பக்கம் சென்று பார்த்தேன். ஒருமுறைகூடச் சந்தனப்பொட்டு வைத்தவரின் முகம் தென்படவில்லை. ஒருமுறை ஸ்கூட்டர் காரர் நின்றிருப்பதைப் பார்த்தேன்.
உடனே அந்த வீட்டை நெருங்கிச் சென்று, “வணக்கம் சார்” என்றேன். அவர் புருவங்களைச் சுருக்கியபடி “என்னங்க?” என்று கேட்டார். சந்தனப் பொட்டுக்காரரைப் பற்றிச் சுருக்கமாக அவரிடம் தெரிவித்துவிட்டு, “என்னாச்சி அவருக்கு? ரொம்ப நாளா அவரைப் பார்க்காதது கஷ்டமா இருக்குது” என்றேன்.
அவர் என்னை விசித்திரமாகப் பார்த்தார். பிறகு, “அவரு அமெரிக்காவுல சவுக்கியமா இருக்காரு. கவலைப் படாதீங்க. அவரு பையன் ரொம்ப காலமா இவரை அமெரிக்காவுக்கு வாங்க வாங்கன்னு கூப்பிட்டுட்டேதான் இருந்தான். இவுங்கதான் போகலை. இந்தத் தோட்டத்து மேல அவ்வளவு ஆசை. அதனால இந்தியாவைவிட்டு எங்கயும் போக மாட்டேன்னு பிடிவாதமா இருந்தாரு பெரியவரு. அந்தப் பையன் அங்க ஏதோ ஒரு விபத்துல சிக்கி ஆஸ்பத்திரியில இருக்கான்னு திடீர்னு ஒரு செய்தி வந்தது.
ரெண்டு பேரும் அமெரிக்கா போயிட்டாங்க. நாங்க அவருக்குத் தூரத்துச் சொந்தம். வாடகையெல்லாம் வேணாம், தோட்டத்தைப் பார்த்துக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிருக்காரு” என்றார். அதைக் கேட்ட பிறகுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது. எங்கோ இருக்கிறார். நன்றாக இருக்கிறார். அது போதும் என்று நினைத்துக்கொண்டேன்.
அதற்குப் பிறகும் அவ்வப்போது நான் அந்த நந்தவனத்து வீட்டின் பக்கம் சென்றுகொண்டுதான் இருந்தேன். வீட்டைச் சுற்றி மலர்ந்திருக்கும் பூக்களைப் பார்க்கும் ஆனந்தத்துக்கு ஈடு இணையே இல்லை! ஸ்கூட்டர்காரர் வாசலில் நின்றிருந்தால் கையசைத்து வணக்கம் சொல்லிவிட்டுச் செல்வேன்.
திடீரென்று என்னை நகரத்திலேயே வேறோர் அலுவலகத்துக்கு மாற்றிவிட்டனர். நாடகம், சினிமா எதையும் நினைத்துக்கூடப் பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது. ஓராண்டுக்குப் பிறகுதான் நான் மீண்டும் பழைய அலுவலகத்துக்குத் திரும்பினேன். வந்ததுமே நந்தவனத்தைத்தான் நினைத்துக் கொண்டேன். ஓய்வாக இருந்த ஒருநாள் மாலையில் நந்தவனத்தைப் பார்ப்பதற்காகக் குடியிருப்புப் பகுதிக்குச் சென்றேன்.
அதிர்ச்சியில் உறைந்தேன். சுற்றுச்சு வரையொட்டி தொட்டிகள் மட்டுமே காணப்பட்டன. ஒரு செடியோ கொடியோ எதுவும் இல்லை. மாடியிலும் எதுவும் இல்லை. அந்த வீடே அலங்கோலமாக இருந்தது. உள்ளே நடைபாதையை ஒட்டி புல் உயரமாக வளர்ந்திருந்தது. ஸ்கூட்டர்காரருக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமல் குழப்பத்துடன் அந்த வீட்டின் வாசலிலேயே நின்றிருந்தேன்.
“என்ன சார்? யார தேடறீங்க?” என்று கேட்டபடி பக்கத்து வீட்டிலிருந்து ஒருவர் வந்தார். அவரிடம் சுருக்கமாக விஷயத்தைத் தெரிவித்தேன்.
“அந்த ஸ்கூட்டர்காரனும் அவன் பொண்டாட்டியும் சண்டை போடாத நாளே இல்லை. ராத்திரியெல்லாம் கத்துவாங்க. அழுவாங்க. திடீர்னு அந்த ஸ்கூட்டர்காரன் உள்பக்கமா கதவைச் சாத்திட்டு, அந்தப் பொண்ணு மேலயும் கொழந்தை மேலயும் மண்ணெண்ணெய் ஊத்திக் கொளுத்திட்டான். அப்புறமா, அவனும் நெருப்பு வச்சிக்கிட்டான். வீடே சுடுகாடாயிடுச்சி.”
அந்த வீட்டை என்னால் திரும்பிக் கூடப் பார்க்க முடியவில்லை. மனபாரத்துடன் வீட்டுக்குத் திரும்பி விட்டேன். அதற்குப் பிறகு அந்தக் குடியிருப்புப் பகுதிக்குள் நடந்து செல்லவே மனம் வரவில்லை.
ஆறேழு மாதங்களுக்குப் பிறகு நானும் இன்னொரு நண்பரும் கடையில் காபி அருந்திக்கொண்டிருந்தோம். எங்களுக்கு அருகில் சந்தனப்பொட்டு வைத்த ஒரு பெரியவர் வந்து நின்று காபி வாங்கினார். அவரைப் பார்த்ததும் எனக்கு நந்தவனத்துப் பெரியவரின் நினைவு வந்துவிட்டது. அந்த வீட்டின் நினைவும் வந்தது. நண்பரிடம் விடைபெற்றுக்கொண்டு அந்த நந்தவனத்து வீட்டை நோக்கி நடந்தேன்.
அந்த இடத்தில் வீடு இருந்த சுவடே இல்லை. தெரு மாறி வந்துவிட்டேனோ என்று குழப்பமாக இருந்தது. ஒரு பெரிய கம்பிவேலிக்கு நடுவில் வெறும் மனை மட்டும் இருந்தது. என்னைக் கடந்து சென்ற ஒரு பாட்டியை நிறுத்தி அந்த வீட்டைப் பற்றி விசாரித்தேன்.
“அமெரிக்காவுல இருக்கறவங்க வீடு தம்பி இது. யாரோ ஒரு சொந்தக்காரங்க குடும்பத்தைத்தான் இங்க குடுத்தனம் வச்சிட்டுப் போயிருந்தாங்க. புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஏதோ தகராறு. எண்ணெய் ஊத்தி நெருப்பு வச்சிக்கிட்டாங்க. அதுக்கப்புறம் புதுசா யாரும் இந்த வீட்டுக்கு வாடகைக்கு வரலை. வீட்டுக்குச் சொந்தக்காரங்க அங்கிருந்தே புரோக்கர் மூலமா யாருக்கோ வித்துட்டாங்க. வாங்கன பார்ட்டி ரெண்டே நாள்ல புல்டோசர் வச்சி இடிச்சி எடுத்துடுச்சு. வீடு வரப்போவுதோ, ஏதாச்சும் கடை வரப்போவுதோ யாருக்குத் தெரியும்?”
ஒருகணம் அந்த வேலி சூழ்ந்த வெற்றுமனையைத் திரும்பிப் பார்த்துவிட்டு நடந்தேன்.
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்!)
- writerpaavannan2015@gmail.com