

ஒரு விழாவுக்காகக் கோயம்புத்தூர் சென்றிருந்தோம். மறுநாள் வித்தியாசமான இட்லியைச் சாப்பிடு வதற்காகவே பாலக்காடு செல்வதென்று முடிவானது. ஓர் உணவுக்காக, அதுவும் இட்லிக்காக ஒரு பயணமா என்று ஆச்சரியமாக இருந்தது.
மறுநாள் காலை பாலக்காடுக்குச் செல்லும் வழியில் ராமசேரி என்கிற கிராமத்தை அடைந்தோம். ஒரு பழைய கட்டிடத்தின் இரு பக்கங்களிலும் பல வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. மிக எளிய உணவகமாகக் காட்சியளித்தது. ஐந்து பேர் என்பதால் இட்லிக்காகச் சற்று நேரம் காத்திருக்கச் சொன்னவர்கள், இட்லி செய்யும் இடத்தைப் பாருங்கள் என்றார்கள்.
உணவகத்தின் உள்ளே மூன்று விறகு அடுப்புகளில் வாய் குறுகலான வித்தியாசமான மண் பாத்திரங்களில் இட்லிகள் வெந்துகொண்டிருந்தன. வயதான அம்மா ஒருவர் எங்களைப் பார்த்துப் புன்னகை செய்துகொண்டே, ஒரு பாத்திரத்திலிருந்த இட்லிகளை வெளியே எடுத்தார். தட்டு இட்லி போல் ஒரே இட்லியாக இருந்தது. ஒரு தடவைக்கு மூன்று இட்லிகளை மட்டுமே வேக வைக்க முடியும். அதனால்தான் இந்தக் காத்திருத்தல் என்பது புரிந்தது.
இட்லிகளை ஒரு பாத்திரத்தில் போட்டவர், மூங்கில் தட்டில் துணியை விரித்து, மாவை ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்தார். மூன்று நிமிடங்களில் வெந்துவிடும், நீங்கள் போய்ச் சாப்பிட அமருங்கள் என்றார்.
வாழை இலையில் 4 இட்லிகளை வைத்தார்கள். இவ்வளவு வேண்டாம் என்றதும் பரிமாறியவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “சாப்பிட்ட பிறகு இன்னும் நாலு இட்லி கேட்பீங்க” என்று சொல்லிவிட்டு, தேங்காய் சட்னி, மிளகாய் சட்னி, உருளைக்கிழங்கு ஸ்டூ ஆகியவற்றை வைத்தார். சாம்பார் இல்லையா என்று நண்பர் கேட்க, “சாம்பார் கிடையாது. பொடி தரேன்” என்று பொடியை வைத்து, தேங்காய் எண்ணெய்யை ஊற்றினார்.
இட்லி என்று சொன்னாலும் அது இட்லிபோல் இல்லை. ஊத்தப்பம் என்றும் சொல்ல முடியவில்லை. இட்லிக்கும் ஊத்தப்பத்துக்கும் உறவாக இருந்தது. அப்படி ஒரு மென்மையான இட்லியைச் சுவைத்ததில்லை. தேங்காயின் சுவை இட்லியிலிருந்து வந்தது. அது இளநீரா, தேங்காய்ப்பாலா என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. சட்னிகளுடனும் பொடியுடனும் இட்லி உள்ளே செல்வதே தெரியவில்லை. வயிறும் வேகமாக நிறையவில்லை. குறைந்தது 8 இட்லிகளாவது ஒவ்வொருவரும் சாப்பிட்டிருப்போம்.
10 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய கடையில் அன்று கூட்டம் அதிகமாக இல்லாவிட்டாலும் பார்சல் வாங்குவதற்கு ஆள்கள் வாகனங்களில் காத்திருந்தார்கள். திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் இருந்து எல்லாம் பார்சல் வாங்கிச் சென்றார்கள். ராமசேரி இட்லி 5 நாள்களுக்குக் கெடாது என்பதால் வெளிநாடுகளுக்கும் செல்கிறது.
இட்லிக்காக ஒரு பயணமா என்று யோசித்த எங்களுக்கு, ராமசேரி இட்லிக்காகப் பயணித்திருக்காவிட்டால் ஓர் அற்புதமான சுவையையும் அனுபவத்தையும் இழந்திருப்போம் என்பது புரிந்தது.