

எல்லாரும் வேகமாகக் கைவீசி நடந்து கொண்டிருந்த நடைப் பயிற்சி சாலையில் ஓரமாக ஒரு பெண்மணி, ‘சந்தா ஹை தூ, மேரா சூரஜ் ஹை தூ’ என்கிற பழைய காலத்து ஆராதனா பாட்டைப் பாடியபடி நிதானமாக நடந்துகொண்டிருந்தார்.
அங்கிருந்த மரம், செடி, கொடிகளை வேடிக்கை பார்க்க வந்தவரைப்போல அக்கம் பக்கம் பார்த்தபடியே நடந்தார். அவருடைய கையில் இருந்த வாளியில் பால் இருந்தது.
நான் நடப்பதை நிறுத்திவிட்டு அவரைக் கவனிக்கத் தொடங்கினேன். அவர் இளஞ்சிவப்பு சல்வார் அணிந்தி ருந்தார். பருத்தித்துணியால் ஆன வெண் துப்பட்டா அவர் தோளைச் சுற்றிக் காற்றில் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. நரைத்த தலைமுடியை அள்ளிச் சுருட்டிக் கொண்டை போட்டிருந்தார்.
அவர் குரலைக் கேட்டதும் கோவைக்கொடிப் புதரிலிருந்து மூன்று நாய்கள் ஓடிவந்து அவருக்கு முன்னால் நின்று வாலாட்டின. அவர் குனிந்து அந்த நாய்களின் தலையைத் தடவிக்கொடுத்தார். பிறகு ‘வாங்க வாங்க’ என்று அந்த நாய்களுடன் உரையாடிக்கொண்டே அருகிலிருந்த மரத்தடிக்குச் சென்றார்.
மரத்தடியில் வாயகன்ற ஒரு மண்சட்டி இருந்தது. வாளியிலிருந்து பாலை எடுத்து அந்தச் சட்டியில் ஊற்றினார். அந்த நாய்கள் எதிரும்புதிருமாக நின்று பாலை நக்கி நக்கிக் குடித்தன.
அந்தப் பாதையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் மண் சட்டி களை வைத்திருப்பதையும் ஒவ்வோர் இடத்திலும் அவருடைய வரவுக்காக ஏழெட்டு நாய்கள் கூட்டமாகக் காத்திருப்பதையும் பார்த்தேன்.
வளர்ப்பு நாய்களும் தெருநாய்களும்: சங்கிலியால் பிணைக்கப்பட்ட வளர்ப்புநாய்களுடன் நடந்து செல்ப வர்கள் அந்தத் தெருநாய்களின் மீது அருவருப்பான பார்வையை வீசியபடி செல்வதைக் கவனித்தேன். அந்த வளர்ப்புநாய்களும் தெருநாய்களைக் கடித்துக் குதறத் துடிப்பதைப்போல ஆத்திரத்தோடு குரைத்தன. தெருநாய் களும் அவற்றைப் பார்த்துச் சீறின.
அடுத்த நாளும் நான் அந்தப் பெண் மணியைக் கவனித்தேன். அன்று தன் வாளியில் குழம்பு ஊற்றிப் பிசைந்த சோற்றை வைத்திருந்தார் அவர். ஒவ்வொரு சட்டியிலும் சோற்றை அள்ளி வைத்துக்கொண்டே சென்றார். இன்னொரு நாள் உப்புமா மாதிரி குழைந்த கலவையை வைத்தார்.
அவர் வைத்துவிட்டுச் செல்லும் உணவை அந்த நாய்கள் மட்டும் உண் ணுவதில்லை. அவை சாப்பிட்டதுபோக எஞ்சிய பகுதியை அக்கம்பக்கத்தில் இருக்கும் பூனைகள் வந்து சாப்பிட்டன. கோழிகள் சாப்பிட்டன. காகங்களும் குருவிகளும் பறந்துவந்து சாப்பிட்டன.
வெறுப்பு: அந்தப் பாதையைச் சுற்றி நடப்பவர் களில் பெரும்பாலானோர் அந்தப் பெண்மணியின் செயல்பாடுகளைப் பொருள்படுத்தவில்லை.
அன்று ஒரு மீசைக்காரர் தன் நண்பரிடம், “அடிப்படையில நாய் ஒரு அசைவை பிராணி. அதுக்குக் கறி, மீனு, கருவாடு, முட்டை, எலும்புதான் வைக்கணும். இந்த மாதிரி சைவ சாப்பாட்டை நாய்க்குக் கொடுக்கவே கூடாது” என்று சொன்னபடி செல்வதைக் கேட்டேன். அவரோடு சென்ற தாடிக்காரரும், “ஆமாம், நீங்க சொல்றது நூத்துல ஒரு வார்த்தை. இந்த அன்னதானம்லாம் ஒரு நாடகம்” என்று தலையசைத்தபடி நடந்தார்.
ஆறு குட்டிகள்: ஒருநாள் உணவு நிரப்பிய வாளி யோடு நடந்துகொண்டிருந்த அந்தப் பெண்மணியோடு இன்னோர் இளம்பெண் ஆறேழு அட்டைப் பெட்டிகளை எடுத்துக்கொண்டு வந்தார். வழியில் ஏதோ ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து நெருங்கிச் சென்றார். வேர்ப்புடைப்புகளுக்கு நடுவில் ஒரு குகைபோல அந்த இடம் காட்சியளித்தது.
அந்த மறைவிடத்தை நீட்டிப்பதுபோல, வேரையொட்டி நான்கைந்து அட்டைகளை நீள வாக்கிலும் குறுக்குவாக்கிலும் வைத்து முன்னும் பின்னுமாக நகர்த்தினார். ஒரே நிமிடத்தில் அங்கே ஒரு கொட்டகை உருவாகிவிட்டது! ஆனால், எதற்காக அந்தக் கொட்டகை என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
மூன்றாவது நாள் காலை அந்தப் பக்கம் சென்றிருந்தபோது, என் குழப்பம் தானாகவே நீங்கியது. அந்தக் கொட்டகையில் ஒரு நாய் குட்டிகளை ஈன்றிருந்தது. ஆறு குட்டிகள். அனைத்தும் அதன் மடியையொட்டிப் படுத்திருந்தன. வெவ்வேறு கோணங்களில் அடுக்கிவைத்த பொம்மைகளைப்போல அவை காட்சியளித்தன.
அந்தப் பெண்மணி அக்கொட்டகை யிலிருந்து சிறிது தொலைவில் நின்றிருந்தார். அவரோடு ஆறேழு சிறுவர்கள் கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களுக்கு அந்தக் குட்டிகளைக் காட்டி இந்தியிலேயே ஏதோ விளக்கிக் கொண்டிருந்தார் அவர்.
ஒவ்வொரு குட்டியும் ஒரு நிறத்தில் இருந்தது. வெள்ளைவெளேரென ஒரு குட்டி. சாம்பல் நிறத்தில் இரண்டு குட்டிகள். செங்கல் நிறத்தில் ஒரு குட்டி. கரிய நிறத்தில் இரண்டு குட்டிகள். ஒவ்வொன்றும் சின்ன சின்ன பஞ்சுப்பொதியைப்போல சுருண்டிருந்தது. அவற்றைப் பார்த்த பரவசத்தில், “ஒன் டெலிவரி. சிக்ஸ் பப்பிஸ்” என்று என்னை மீறிச் சொற்கள் வெளிப்பட்டுவிட்டன.
அதைக் கேட்டு அந்தப் பெண்மணி “எஸ்” என்றபடி புன்னகை செய்தார். பிறகு அவர் மட்டும் அட்டைக் கொட்டகையை நெருங்கிச் சென்று சட்டி நிறைய பாலை ஊற்றிவிட்டு, குட்டிகளை நெருக்கமாக நின்று பார்த்துவிட்டுத் திரும்பினார்.
ஒரே ஒரு குட்டி: மூன்று நாள்களுக்குப் பிறகு பெரிய நாய் எழுந்து நின்று அக்கம்பக்கத்தில் தலையைத் திருப்பிப் பார்ப்பதையும் குட்டிகளைச் சுற்றிச் சுற்றி வருவதையும் பார்த்தேன். விழித்திருக்கும் நேரம் எல்லாம் குட்டிகள் பால் குடித்தபடியே இருந்தன.
மறுநாள் காலை அந்தப் பக்கமாகச் சென்றபோது அந்தப் பெண்மணி நின்றிருந்தார். அவர் முகத்தில் துயரத்தின் நிழல் படிந்திருந்தது. அவரைச் சுற்றி நின்றிருந்த சிறுவர் களில் ஒருவன், “டூ பப்பிஸ் மிஸ்ஸிங் ஆன்ட்டி” என்றான். என் மனம் பதறியது. “யாராவது சின்னப்பசங்க வீட்டுல வளர்க்கறதுக்கு எடுத்துட்டுப் போயிருப்பாங்க” என்றார் அந்தப் பெண்மணி.
ஒரு வாரத்துக்குப் பிறகு குட்டிகள் கண்களைத் திறந்து உருட்டி உருட்டிப் பார்ப்பதைக் கண்டேன். அடுத்த ஒரு வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு நாய்க்குட்டி என மூன்று நாய்க்குட்டிகளை யாரோ தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். ஒரு குட்டி மட்டுமே நாயோடு எஞ்சியிருந்தது. மெல்ல மெல்ல நான்கு கால்களையும் ஊன்றி எழுவதற்கு அது முயற்சி செய்வதும் உறுதியாக நிற்கப் போதிய வலிமையின்றி கீழே விழுவதுமாக இருந்தது. குட்டியின் முயற்சியை வேடிக்கை பார்த்தபடி படுத்திருந்தது நாய்.
மேலும் பத்து நாள்களுக்குப் பிறகு நாய்க்குட்டி அம்மா நாய்க்குப் பின்னாலேயே ஓடத் தொடங்கியது. எல்லாருக்கும் தன் முகத்தைத் தூக்கித் தூக்கிக் காட்டியது. மினுமினுக்கும் அதன் கரிய உடலைப் பார்க்கப் பார்க்க தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது. ஆயினும் ஏதோ ஓர் அச்சம் என்னைத் தடுத்தது.
வியப்பும் வருத்தமும்: நாளுக்கு நாள் நாய்க்குட்டி நாயாக வளர்ந்துகொண்டே வந்தது. சில நாள்களுக்குப் பிறகு, ஒன்றை மற்றொன்று மறந்துவிட்டதுபோல ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து திரியத் தொடங்கின. நடந்தது எதுவும் ஞாபகத்திலேயே இல்லாத தியாகியைப்போல பெரிய நாய் நடந்து சென்றதைப் பார்க்க வியப்பாகவும் வருத்தமாகவும் இருந்தது.
என்னுடைய வியப்பும் வருத்தமும் அந்தப் பெண்மணியிடம் இல்லை. இப்படி எண்ணற்ற பிரசவங்களையும் பிரிவுகளையும் பார்த்த அனுபவத்தில் அவர் எப்போதும்போல, “சந்தா ஹை தூ, மேரா சூரஜ் ஹை தூ” என்று பாடிக்கொண்டே சட்டிகளில் பாலும் சோறும் நிரப்பியபடி நடந்துகொண்டே இருந்தார். அவர் பின்னாலேயே நாய்களும் நடந்துகொண்டே இருந்தன.
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)
- writerpaavannan2015@gmail.com