அந்தக் கால மறுவீடு | ‘எம் மச்சான் எங்கே இருக்காக?’

அந்தக் கால மறுவீடு | ‘எம் மச்சான் எங்கே இருக்காக?’
Updated on
2 min read

அந்தக் காலத்தில் கல்யாணம் முடிந்துவிட்டால் மாப்பிள்ளையும் பெண்ணும் மூன்று மாதங்களுக்கு ஒன்றுசேரக் கூடாது. மூன்று மாதங்களுக்குப் பிறகு பெரிய மறுவீடு என்று ஒன்று நடத்துவார்கள். அப்போதுதான் பெண்ணுக்குத் தாலி பிரித்துப் போட்டு, பண்டம் செய்து பனைநார்ப் பெட்டியில் வைத்து, புதுப் பெண்ணின் கையில் ஒரு குத்துவிளக்கையும் ஒரு பசுமாட்டையும் சீதனமாகக் கொடுத்து மாப்பிள்ளை வீட்டில் விடுவார்கள்.

அந்த மூன்று மாதங்களும் மாப்பிள்ளை, மாமியார் வீட்டில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அப்போதெல்லாம் நெல்லுச்சோறு அரிதானது. ஆனாலும், இந்த மாப்பிள்ளைக்குத் தினமும் நெல்லுச்சோறும் கறிக்குழம்புமாகத்தான் போட வேண்டும். வசதியானவர்கள் ஓர் ஆட்டையோ கிடாவையோ அறுத்து, உப்புக்கண்டம் போட்டு வைத்துக்கொண்டு நாள்களைக் கடத்துவார்கள்.

வசதி இல்லாதவர்கள் கோழிகளை வளர்த்து, கோழிக்கறியில் விருந்து வைப்பார்கள். காட்டு வேலைக்குப் போகிறவர்கள் காடை, கவுதாரிகளைப் பிடித்துக்கொண்டுவந்து சமைத்துப் போடுவார்கள். எப்படியோ மாப்பிள்ளைக்குக் கறியும் சோறும் போட வேண்டும். இதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது.

ஆனால், இந்த மூன்று மாதங்கள் முடிந்து மறுவீடு வைப்பது வரை, மாப்பிள்ளை தன் பெண்டாட்டியைப் பார்க்கக் கூடாது, பேசக் கூடாது, சோறும் அவள் வைக்க மாட்டாள். யாராவதுதான் மாப்பிள்ளையைக் கவனித்துக்கொள்வார்கள்.

புதுப்பெண்ணோ எப்போதும்போல் சேத்திக்காரிகளோடு வேலைக்குப் போவது, அவர்கள் வீட்டிலேயே சாப்பிடுவது, அவர்களுடனே படுத்துக் கொள்வது என்று இன்னும் கல்யாணம் ஆகாத பெண் போலவே இருப்பாள்.

மயில்சாமிக்கும் ரத்னகிளிக்கும் கல்யாணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டதால் அன்றுதான் மறுவீடு வைத்தார்கள். எப்போதும் பகலில் மறுவீடு வைப்பதில்லை. எல்லாரும் வேலைக்குப் போய்விடுவதால் இரவில்தான் மறுவீடு வைப்பார்கள்.

மயில்சாமி கிராமத்துக்கு இரண்டு மைல் தூரம் நடக்க வேண்டும் என்பதால் விளக்கு வைத்தவுடன் புறப்பட்டார்கள். இரண்டு கிராமங்களுக்கும் இடையில் வேட்டையன் கோயில் இருந்தது. அதனால் அந்தச் சாமிக்கு ஒரு தேங்காயை எடுத்து ‘வெடலை’ போட்டுவிட்டுப் போவார்கள்.

அப்படித்தான் தன் உறவினர்களோடு மாலையும் கழுத்துமாக மயில்சாமியும் ரத்ன கிளியும் மறுவீடு வந்துகொண்டிருந்தனர். வானத்து நிலா வெளிச்சத்தைப் பொழிந்து கொண்டிருந்தது. ரத்னகிளி பூவரசம்பூ கண்டாங்கிச் சேலை உடுத்தி, புளியம்பூ ரவிக்கைப் போட்டிருந்தாள். மஞ்சள் பூக்கக் குளித்திருந்தாள்.

கைகளிலும் கால்களிலும் மருதாணி பூத்து அழகு காட்டியது. கூந்தலை எடுத்துப் பெரிய கொண்டை போட்டு, பிச்சிப்பூவும் மரிக்கொழுந்தும் சூடியிருந்தாள். முதல் முறை கணவன் வீட்டுக்குப் போகும் சந்தோஷத்தில் அவள் முகத்தில் பவுசு ஏறியிருந்தது.

வேட்டையன் கோயிலுக்கு வந்தபோது ரத்னகிளி எப்படியோ தலைகுப்புற விழுந்துவிட்டாள். எல்லாரும் பதறிவிட்டனர். அவளைத் தூக்கி நிறுத்தி, சாமிக்கு ஒரு சூடத்தையும் காட்டி, சாமி கும்பிட்டனர். வீடு வந்து சேர ஒரு சாமம் ஆகிவிட்டது. உடனே ரத்னகிளிக்குக் காய்ச்சல் வந்துவிட்டது.

எல்லாரும் பயந்துவிட்டனர். சாமி முன்னாடி விழுந்ததால் ஏதாவது பிரச்சினையோ என்று நினைத்தனர். மறுநாள் விடிந்ததும் கோடாங்கிக்காரரை அழைத்துவந்தனர். ரத்னகிளிக்கு எதிரே உட்கார்ந்துகொண்டு கோடாங்கிக்காரர் நீண்ட நேரம் கோடங்கியை அடித்த பிறகு, அவர் மீது வேட்டையன் சாமியே வந்துவிட்டது.

‘நான் எண்ணெய்த் தலை முழுகி

ஏகாந்தமாய் பொட்டு வைத்து

வண்ணக் கவிபாடி நான்

வேட்டைக்குப் போகையிலே

இவ பொண்ணான பொண்ணுமில்ல

பொண்ணுக்கேத்த அழகுமில்ல – அதனால

எதுக்க வந்த பொண்ண நானு

எத்திவிட்டேன் கால் விரலால. என்

திருநூறப் பூசுங்க, துள்ளி எழுந்துடுவா’

என்று கோடங்கிக்காரர் பாடியபடியே ரத்னகிளியின் நெற்றியில் திருநீற்றைப் பூசிவிட்டார். உடனே ரத்னகிளிக்குக் காய்ச்சல் எல்லாம் பறந்து போய்விட்டது.

‘எம் மச்சான் எங்க இருக்காக? அவரைப் பார்த்து மாசக்கணக்கில்ல ஆயிருச்சு’ என்று ரத்னகிளி கேட்க, எல்லாருக்கும் நிம்மதியானது. இரண்டு பேருக்கும் பண்டங்களைக் கொடுத்து, தனிக்குடித்தனம் வைத்துவிட்டு எல்லாரும் புறப்பட்டார்கள்.

- arunskr@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in