

“உங்க வீட்டுக்கு எப்படி வரணும், வழி சொல்லுங்க?” என்று கேட்டார் நண்பர். “அல்சூர் பஸ் ஸ்டாண்டுல எறங்கி இடது பக்கமா நடந்து வாங்க. பத்தொம்பதாவது கிராஸ் வரும். அதுலதான் நான் குடியிருக்கிற வீடு இருக்குது” என்றேன்.
“அப்படி மொட்டையா சொன்னா எப்படி சார்? வீட்டுக்கு நம்பர்லாம் கெடையாதா?”
“இருக்குது. ஆனா அந்தத் தெருவுல எந்த வீட்டையும் நம்பர வச்சிக் கண்டுபிடிக்கவே முடியாது. எல்லாமே முன்ன பின்ன இருக்கும். அந்தத் தெருவுலயே வாசல்ல மரம் இருக்கிற ஒரே வீடு நாங்க இருக்கிற வீடுதான். அதை வச்சி சுலபமா கண்டுபிடிச்சிடலாம்.”
“மரமா?”
“ஆமாம். பெரிய முருங்கைமரம். கீழ ஓனர் குடும்பம் இருக்குது. அங்க போகாதீங்க. நேரா மாடிக்குப் படியேறி வாங்க. அங்கதான் நாங்க இருக்கோம்.”
என்னைத் தேடி வருகிறவர்களுக்குத் தற்செயலாக இப்படி வழி சொல்லத் தொடங்கி, பிறகு அதுவே பழகிவிட்டது. வாய்ப்பேச்சு வழியாகவே அந்த வீட்டுக்கு ‘முருங்கைமரத்து வீடு’ எனும் அடையாளம் நிலைத்துவிட்டது.
முருங்கை மரத்தடி பல வழிகளில் அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்களுக்குப் பயனளிப்பதாக இருந்தது. இரவு நேரத்தில் எல்லா விதமான வாகனங்களுக்கும் அதுதான் நிறுத்துமிடம். சில நேரம் சிறுவர்களுக்கு விளையாடும் இடமாகவும் இருக்கும்.
பிள்ளைகள் சென்ற பிறகு அதே இடத்தில் பெரியவர்கள் உயரமான ஸ்டூல் மீது கேரம் போர்டை வைத்து நின்றுகொண்டே விளையாடுவார்கள். பகல் நேரத்தில் காய்கறி வண்டிக்காரர்கள் முதல் சைக்கிள் வியாபாரிகள் வரை அந்த மரத்தடியில் நின்றுகொண்டுதான் வியாபாரம் செய்வார்கள்.
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்தவர், இருபத்தைந்து வருஷம் ராணுவத்தில் வேலை செய்துவிட்டு, எக்ஸ் சர்வீஸ்மேன் பிரிவில் வங்கியொன்றில் வேலை செய்துவந்தார். அவரைப் பார்த்தால் ராணுவத்தில் வேலை பார்த்தவரைப் போலத் தெரியவே தெரியாது. அந்த அளவுக்குச் சாது. அவருடைய மனைவிதான் ராணுவத்தில் வேலை செய்துவிட்டு வந்தவரைப்போல நடந்துகொள்வார். அந்த வீட்டுக்கு ‘மிலிட்டரிக் காரர் வீடு’ என்பது பட்டப்பெயர்.
முருங்கைமரம் தொடர்பாக எங்கள் ஓனரம்மாவுக்கு எப்போதும் ஒரு பெருமிதம் உண்டு. “அந்தக் காலத்துல வரிசையா அஞ்சு இடத்துல தண்டு ஊனி வச்சோம். இது ஒண்ணுதான் பொழைச்சி நிமிர்ந்து நின்னுது” என்று முருங்கை மரத்தைச் செல்லமாக தட்டியபடிச் சொல்வார்.
நான்கு திசைகளிலும் கிளை பரப்பி நிற்கும் அந்த மரத்தின் கோலம் ஓர் ஓவியம் போலவே இருக்கும்! மாடிச்சுவரை ஒட்டி நீண்டுவரும் கிளையில் இலைக்கொத்துகள் அசையும். பச்சைமொட்டு போல மலர்ந்திருக்கும் கொழுந்து இலைகளைப் பார்க்கும்போதே, பறித்துத் தின்னும் ஆசையில் என் கை நீளும். அக்கணமே என் மனைவியின் குரல் உயர்ந்து என்னைத் தடுத்துவிடும். இலை அடர்ந்திருக்கும் அந்த மரத்தில் ஒரு பூகூடப் பூத்ததில்லை. ஒரு காய்கூடக் காய்த்ததில்லை.
“ஊரு உலகத்துல ஒவ்வொரு மரத்துலயும் நூறு எரநூறுன்னு காய் காய்க்குது. இங்க ஒண்ணுக்குக்கூட வழியில்லை” என்று சொல்லி வருத்தப்படுவார் எங்கள் ஓனரம்மா. “இதெல்லாம் ஒரு மனிதன் நெனச்சி நடக்கக்கூடிய காரியமா? நேரமும் காலமும் கூடி வந்தா எல்லாம் தானா நடக்கும்” என்று ஆறுதல் சொல்வார் ஓனர். ஓய்வான நேரத்தில் உரையாடும்போது முருங்கைமரம் பற்றித்தான் பேசிக்கொள்வார்கள்.
ஒருநாள் மிலிட்டரிக்காரர் மனைவி ஓனரம்மாவோடு பேசும்போது, “எங்க ஊருல பூக்காத மரத்துல ஒரு கறுப்புத் தோல்செருப்பைக் கட்டித் தொங்கவிடுவாங்க. உடனே அடுத்த பருவத்துலயே பூ பூக்கறதைப் பார்த்திருக்கேன்” என்றார்.
அன்று இரவே தன் பிள்ளையை எழுப்பி, முருங்கை மரக்கிளையில் ஒரு செருப்பைக் கட்டித் தொங்க வைத்துவிட்டார் ஓனரம்மா. காலையில் எழுந்து நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது முருங்கை மரக்கிளையில் செருப்பு தொங்குவதைப் பார்த்தேன்.
ஒரு மாதம் ஓடியது. ஒரு பூகூடப் பூக்கவில்லை. நம்பிக்கையோடு இருந்த ஓனரம்மாவின் மனதில் மீண்டும் நிராசை குடிபுகுந்தது.
ஒருவர் அடிமரத்தைச் சுற்றி வட்டமாகப் பள்ளமெடுத்து சாணத்தைக் கரைத்து ஊற்றச் சொன்னார். இன்னொருவர் பெளர்ணமி இரவில் யார் கண்ணிலும் படாமல் சென்று, துடைப்பத்தால் அடிக்கச் சொன்னார். மற்றொருவர் பிய்ந்துபோன பழைய முறத்தைக் கட்டி தொங்கவிடச் சொன்னார். ஓனரம்மா அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தார். மாதங்கள் கடந்தனவே தவிர, முருங்கைமரத்தில் ஒரு மாற்றமும் இல்லை.
ஒருநாள் இரவில் எதிர்பாராத விதமாக புயல்காற்றுடன் மழைபொழிந்தது. அப்போது, முருங்கைமரத்திலிருந்து இரண்டு, மூன்று கிளைகள் முறிந்து மிலிட்டரிக்காரர் நிறுத்தி வைத்திருந்த இரண்டுசக்கர வாகனத்தின் மீது விழுந்தன. முன்பக்கக் கண்ணாடிகள் உடைந்தன. மிலிட்டரிக்காரரின் மனைவியால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சாடைமாடையாக மரத்தைக் குறை சொல்லிப் பேசத் தொடங்கினார்.
அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் மரத்தைச் சுற்றி விழுந்து குவிந்திருக்கும் இலை களை முன்வைத்து எரிச்சலைக் கொட்டினார். “இந்தக் குப்பையைப் பெருக்கிப் பெருக்கி இடுப்பே வலியெடுக்குது” என்று ஒருநாள் முனகினார். நான்கைந்து நாள்களுக்குப் பிறகு சத்தமாகவே சொல்லத் தொடங்கினார்.
ஒருநாள், “இந்த மரம் இங்கேருந்து தொலைஞ்சாதான் நமக்கு நிம்மதி. நீங்க போய் அந்த ஓனரைப் பார்த்து மரத்தை வெட்டச் சொல்லிட்டு வாங்க” என்று மிலிட்டரிக்காரரை அதட்டினார். அவரோ, “இரும்மா, இலை தானம்மா. விழுந்தா விழுந்துட்டுப் போவட்டுமே. வேணும்னா நான் பெருக்கிச் சுத்தப்படுத்தறேன்” என்று மனைவியை அமைதிப்படுத்த முயன்றார்.
நாளுக்கு நாள் முணுமுணுப்பு வளர்ந்து கொண்டே போனது. ஒருநாள் திடீரென, ”மரத்தை அவுங்க வெட்டறாங்களா, இல்லை நானே வெட்டிவிடட்டுமா? ரெண்டுல ஒண்ணு கேட்டுச் சொல்லுங்க” என்று மிலிட்டரிக்காரரின் மனைவி மிலிட்டரிக்காரிடம் சொன்னார். வேறு வழியில்லாமல் மிலிட்டரிக்காரர் எங்கள் வீட்டு ஓனரைச் சந்தித்துத் தகவலைத் தெரிவித்தார்.
நான்கைந்து நாள்கள் மாறி மாறி இரண்டு குடும்பங்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. வேறு வழியில்லாமல் முருங்கைமரத்தை வெட்டும் முடிவை ஓனரின் குடும்பம் ஏற்றுக்கொண்டது.
ஞாயிறு வந்தது. அதிகாலையில் மாடிச்சுவரையொட்டி நின்றபடி தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன். அப்போது மரத்தை வெட்டியெடுக்கும் ஆள்கள் வந்து சேர்ந்தார்கள்.
ஓனரும் ஓனரம்மாவும் கதவைத் திறந்து கொண்டு முருங்கைமரத்துக்கு அருகில் சென்றனர். அதே நேரத்தில் மிலிட்டரிக்காரரின் மனைவி வேகமாகப் படியிறங்கி வந்து வாசலில் நின்றார். அவரைத் தொடர்ந்து மிலிட்டரிக்காரரும் வந்து நின்றார்.
“என்ன சார், வெட்டறதுக்கு ஆரம்பிக்க லாமா?” என்று கேட்டார் கோடலிக்காரர். முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், “சரி சரி ஆவட்டும்” என்று கையை மட்டும் அசைத்தார் ஓனர். அதைப் பார்த்ததும் கோடாலிக்காரர் மரத்தை நோக்கி அடிவைத்தார்.
“இருப்பா, இருப்பா” என்றபடி பதற்றத்தோடு அவர்களை நோக்கி வந்தார் மிலிட்டரிக்காரர்.
“வேலை செய்ய வந்தவங்கள எதுக்குங்க தடுக்கறீங்க? வாங்க இந்தப் பக்கம்” என்று எரிச்சலோடு அவருடைய கைகளைப் பற்றி இழுத்தார் அவர் மனைவி.
மிலிட்டரிக்காரர் அவருடைய பிடியை உதறிவிட்டு, “அதோ, அந்தக் கிளையில பாருங்க பூ விட்டிருக்குது” என்று ஒரு கிளையின் பக்கம் விரலை நீட்டினார். அங்கே வெண்ணிற முத்துக்குவியலைப்போல மொட்டுகள் மேடிட்டிருந்தன. அதைப் பார்த்ததும் சுற்றி நின்றிருந்தவர்கள் மகிழ்ச்சியில் கத்தினர்.
“மரத்தை வெட்ட வேணாம். அப்படியே இருக்கட்டும்” என்று சொன்ன மிலிட்டரிக் காரரின் மனைவியை அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர்!
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)
- writerpaavannan2015@gmail.com