

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு உலகெங்கும் பரவினாலும் இன்றும் மின்சாரம் சென்று அடையாத பகுதிகளும் உண்டு. அதே நேரம் உலகில் பயன்படுத்தப்பட்டுவந்த சில கருவிகள் வழக்கொழிந்தும் போயிருக்கின்றன.
ரேடியோ: பேட்டரி போட்டுப் பயன்படுத்தும் ரேடியோ, மின்சாரத்தில் இயங்கும் ரேடியோ, கையில் வைத்துக்கொண்டு கிரிக்கெட் வர்ணனை கேட்கும் சிறு ரேடியோ இருந்த காலம் மாறி, இப்போது வானொலி அலை வரிசைகளைத் திறன்பேசியில் கேட்கும் வசதி வந்துவிட்டது. இதனால் அனைத்து ரேடியோ பெட்டிகளும் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டன.
கிராமபோன்: ஒரு காலத்தில் பாடல்களைக் கேட்பதற்கு கிராமபோன் இருந்தது. ஓர் இசைத்தட்டுப் போடுவதற்கான கருவியும் அதனுடன் இணைந்த ஒலிபெருக்கிக் குழாயுமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் ஜுக்பாக்ஸும் (Jukebox) இருந்திருக்கிறது. பிரபல உணவகங்களில் வைத்திருப்பார்கள். இசைத்தட்டுகள் அருகில் இருக்கும். நாணயத்தைப் போட்டு நமக்குத் தேவையான பாடல்களைக் கேட்கலாம்.
டேப் ரெக்கார்டர்: பிறகு ‘டேப் ரெக்கார்டர்’, டேப் ரெக்கார்டருடன் ரேடியோவும் இணைந்த ‘டூ இன் ஒன்’ போன்றவையும் வந்தன. வளைகுடா நாடுகளிலிருந்து வந்தவர்கள் தவறாமல் கொண்டுவந்த பொருள்களில் இதுவும் ஒன்று. பாடல் கேசட்டுகளை விற்கவும், விருப்பமான பாடல்களைப் பதிந்து கொடுப்பதற்கும் கடைகள் இருந்தன.
பிறகு ஒலிநாடாவின் காலக்கட்டம் முடிந்து ‘டிஸ்க்’ காலம் வந்தது. ஐபாட் வந்தது. இப்போது ஆயிரக்கணக்கான பாடல்களை ஒரே இடத்தில் வைத்துக் கேட்கும் வசதி வந்தபின், இவை எல்லாம் ஒட்டுமொத்தமாக வழக்கொழிந்துவிட்டன.
விசிடி: திரைப்படங்களைப் பார்ப்பதற்கு டிவிடி, விசிடி பிளேயர்கள் வந்தன. அவற்றுக்கெனத் தனித்துவமான கேசட்களும் உண்டு. பின் அதுவே டிஸ்க் என உருமாறியது. இவற்றை விற்பதற்கும் வாடகைக்குக் கொடுப்பதற்கும் கடைகள் இருந்தன. திருட்டு விசிடி விற்பதற்கும் வாடகைக்குக் கொடுப்பதற்கும் பெரும் கூட்டமே இருந்தது.
அதை ஒழிக்க அரசு முயல வேண்டும் என்று திரைப்படத்துறையினர் போராட்டம் நடத்திய காலம் எல்லாம் இருந்தது. அதற்கு முன்பு ஒவ்வொரு வீட்டிலும் கேசட்டுகள் வாங்கி வைத்திருப்பார்கள். அவை ஒவ்வொரு வீடாகச் சுற்றிவரும். ஒரு பெரிய கூட்டமே ஒரு வீட்டில் அமர்ந்து திரைப்படம் பார்ப்பார்கள். இப்போது இவை முற்றிலும் வழக்கொழிந்துவிட்டன.
திரைப்படம், ஒளிப்படம் எடுப்பதற்கு பிலிம் இருந்தது. முதலில் கறுப்பு வெள்ளையாக மட்டும் இருந்த அவை, பின் வண்ணத்திற்கு மாறின. அவற்றை லேப்களில் சென்று டெவலப் செய்ய வேண்டும். இப்போது அவை முற்றிலும் மறைந்துவிட்டன.
டைப்ரைட்டர்: டைப்ரைட்டர் பயன்பாடும் அதைக் கற்றுக்கொள்வதற்கு டைப்ரைட்டிங் இன்ஸ்டி டியூட்களும் வந்தன. காகிதத் தைக் கையில் சுருட்டிக் கொண்டு உள்ளே நுழையும் இளைஞர்கள் பலருக்கும் மனதில் காதல் நுழையும் இடமாக இன்ஸ் டிடியூட்கள் இருந்தன!
தந்தி: ‘கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது’ என்கிற பாடலைக் கேட்கும் பலருக்கும்கூட, இப்போது தந்தி என்றால் என்ன என்று தெரியாது. தபால் நிலையத்தில் தந்தி சேவை என ஒரு பிரிவே இருந்தது. எந்த அவசரச் செய்தியாக இருந்தாலும் அறிவிக்கும் சேவை இது. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு விதமான ஒலி உண்டு.
தந்தி இயந்திரத்தை இயக்கும்போது, அவர் எந்தத் தபால் நிலையத்துடன் இணைப்பில் இருக்கிறாரோ அதன் இயந்திரம் உள்வாங்கும். ‘தட் தடா தட் தடா’ என ஒலித் துக் கொண்டே இருக்கும். திருமண வாழ்த்து, வேலையில் சேர்கிற செய்தி எனப் பலவற்றைத் தந்தியில் அனுப்பினாலும், பெரும்பாலும் தந்தி என்பது இறப்புச் செய்தியையே சுமந்துவந்தது.
அதனால், தந்திக்காரர் தெருவுக்குள் வருகிறார் என்றால் ஊரே நடுங்கிக்கொண்டு, அவர் பின்னால் குறிப்பிட்ட வீடுவரை வரும். இப்போது அந்தச் சேவையின் தேவையை அலைபேசிகள் பூர்த்தி செய்துவிட்டதால் அது இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது.
தொலைபேசி: ஆரம்பக் காலத்தில் பேசுவதற்கும் கேட்பதற்கும் தனித்தனி அமைப்புகள் இருந்தன. எண்களை ஒவ்வொன்றாக டயல் செய்ய வேண்டும். தொலைதூரத்திற்குப் பேச வேண்டுமென்றால் முன்கூட்டியே டிரங் கால் பதிவுசெய்ய வேண்டும். அதற்காகக் காத்துக்கிடக்க வேண்டும். பெரும்பாலும் ஊருக்கு ஒரு தொலைபேசி, அதுவும் தபால் நிலையத்தில் மட்டுமே இருக்கும். யாரவது வந்து கூப்பிடுவார்கள். சில நேரம் காலை முதல் மாலை வரை காத்துக்கிடந்தாலும் அழைப்பு வராது.
வீட்டிற்கான தொலை பேசிக்குப் பதிந்து வைத்துவிட்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் உறவினர் இருப்பவர் வீடுகளில் தொலைபேசி இருக்கும். ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படத்தில் ஊரே போய் ஒரு வீட்டுத் தொலை பேசியில் பேசுவதுபோல, ஓர் ஊருக்கே அல்லது ஒரு தெருவிற்கே ஒரு தொலைபேசி என இருந்த காலமும் உண்டு. பின் தொலைபேசி இணைப்புகள் வழங்குவதற்கான முறை எளிதாக்கப்பட்டு, விரும்புபவர் எல்லாரும் போன் வைத்துக் கொள்ளலாம் என்கிற நிலை வந்தது.
அப்படி இருந்தாலும் தொலைதூரத்திற்குப் பேசுவதாக இருந்தால் அதற்கெனத் தனித் துவமான இணைப்பு வேண்டும். அதற் கான கட்டணம் கூடுதல் என்பதால் எப்போதாவது மட்டும் பயன்படுத்துபவர்கள் அதை வைத்திருக்க மாட்டார்கள். அதற்கென பிசிஓ, எஸ்டிடி, ஐஎஸ்டி பூத்கள் இருந்தன. சிலர் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பார்கள். கைபேசி அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டது. எதிர்காலத்தில் இப்போது இருக்கும் கருவிகளும் மறைந்து போகலாம்; அந்த இடங்களைப் புதுக் கருவிகள் பிடிக்கலாம்! மாற்றம் முன்னேற்றம்!
- bhathilahar@gmail.com