

சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்றிருந்தேன். தென்றல் உடலோடு சேர்த்து மனதையும் வருடியது. வெளியூர்களில் இருந்து வந்திருந்தவர்கள் கடலின் பிரம்மாண்டத்தையும் அலைகளின் ஆர்ப்பாட்டத்தையும் வியப்புடன் ரசித்துக்கொண்டிருந்தனர். ஆயிரம் முறை பார்த்து ரசித்தாலும் அடுத்தமுறை பார்க்கத் தூண்டுவது கடல்தான்!
எட்டாம் வகுப்புப் படித்தபோது பள்ளியிலிருந்து எங்களை மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர். அதுதான் என் முதல் சுற்றுலா. கடலைக் கண்டதும் பரவசமாக இருந்தது. நண்பன் பாலு, “இவ்வளவு தண்ணியை யார் கொண்டு வந்து இங்கே ஊத்தியிருப்பாங்க?” என்று வெகுளியாகக் கேட்டான்.
நண்பர்களுடன் கைகோத்துக்கொண்டு கடல் அலைகளில் கால் நனைத்தோம். கடற்கரை முழுவதும் கால்கள் புதையப் புதைய விளையாடினோம். தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டலும் பாப்கார்னும் வாங்கி, பகிர்ந்து உண்டோம். துரத்தில் தெரிந்த கப்பல்களையும் படகுகளையும் பார்த்து டாட்டா காட்டினோம்.
யாரும் தனியாகச் சென்று கடலில் கால் நனைக்கக் கூடாது என்று ஆசிரியர்கள் சொன்னதைக் காதில் வாங்காமல் சென்ற பாலுவை ராட்சத அலை இழுத்துச் சென்றது. நாங்கள் செய்வதறியாது கடலைப் பார்த்துக் கதறினோம். அங்கிருந்த மீனவர்கள் கடலுக்குள் குதித்து, பாலுவைக் காப்பாற்றிவிட்டனர்.
ஆசிரியர்கள் எங்களை அழைத்து, “எதற்காகத் தனியாகச் செல்ல வேண்டாம்ன்னு சொல்றோம் என்று இப்போது புரிந்திருக்கும். ஏதாவது விபரீதம் நடந்திருந்தா என்ன செய்வது? எங்களை நம்பித்தானே உங்களை எல்லாம் அனுப்பி வைத்திருக்கிறார்கள்” என்று கேட்டனர்.
நாங்கள் அமைதியாக நின்றோம். எங்கள் மகிழ்ச்சி எல்லாம் காணாமல் போயிருந்தது. எல்லாரும் இருக்கிறோமா என்று சரிபார்த்த ஆசிரியர்கள், ஆளுக்கு ஓர் ஐஸ்கிரீமை வாங்கிக் கொடுத்துப் பேருந்தில் ஏற்றினார்கள். ஓயாத கடல் அலைகளையும் நங்கூரமிட்ட கப்பலையும், அலைகளோடு போட்டியிட்டுப் பயணிக்கும் படகுகளையும், ஆரவாரத்துடன் இருக்கும் கடற்கரையையும் இனி எப்போது பார்ப்போம் என்கிற ஏக்கத்துடன் புறப்பட்டோம்.
அந்தப் பள்ளிச் சுற்றுலாவுக்குப் பிறகு இப்போதுதான் கடற்கரைக்கு வந்த எனக்கு, கடல் அன்னை தன்னிடம் பாதுகாத்து வைத்திருந்த எங்கள் பால்ய நினைவுகளைப் பரிசாக அளித்து, சிலிர்க்க வைத்தார். என்னைப் போலவே என் நண்பர்களும் என்றோ ஒருநாள் தனியாகவோ குழுவாகவோ இந்தக் கடற்கரைக்கு வந்திருக்கலாம். அவர்களுக்கும் கடல் அன்னை இந்தப் பரிசை நிச்சயம் கொடுத்திருப்பார்!