

சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வட்டாரத்தைச் சேர்ந்த கரடுமுரடான நடைப்பயிற்சிப் பாதையைச் செம்மைப்படுத்தி, சதுரமான வண்ணக் கற்களைப் பதிக்கும் வேலை நடந்தது. அப்போது, நான்கு திசைகளிலும் பெரிய அளவில் நான்கு நிழற்குடை களும் அமைக்கப்பட்டன. ஓரடி உயரத்துக்குத் தரைப்பகுதியும் வட்டவடிவில் எழுப்பப்பட்டது. கண்ணுக்கு இனிய அழகான ஓவியங்களோடு வடிவமைக்கப்பட்ட பருத்த தூண்கள் நிழற்குடையைத் தாங்கிக்கொண்டிருந்தன. தூண் களை இணைத்தபடி உள்வட்டமாகக் கல்மேடைகள் அமைந்திருந்தன.
நுழைவாயிலில் தென்படும் முதல் நிழற்குடை பெண்களுக்குரியது. எந்த நேரத்தில் போனாலும் பத்துப் பேர் அந்தக் கல்மேடைகளில் வட்டமாகச் சுற்றி அமர்ந்துகொண்டு சிரித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். இரண்டாவது குடையின்கீழ் இளைஞர் களுக்கான யோகா வகுப்பு நடக்கும். மூன்றாவது குடையில் சிறார்களுக்கான கராத்தே வகுப்பு. ‘ஆ ஊ’ என்று அவர்கள் எழுப்பும் சத்தம் அந்த வட்டாரம் முழுதும் எதிரொலிக்கும். இறுதியாகத் தென்படும் நிழற்குடை ஆண்களுக்குரியது.
நடைப்பயிற்சிக்கு நான் தனியாகச் செல்லும்போது எங்கும் அமர்ந்து ஓய்வெடுப்பதில்லை. நிழற்குடையின் கீழே அமர்ந்திருக்கும் நண்பர்களைப் பார்த்துப் புன்னகைத்தபடி கையசைத்து விட்டுச் சென்றுவிடுவேன்.
கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு அருகில் குடியிருக்கிறார். சில நாள் அவரும் நடைப்பயிற்சியில் என்னோடு சேர்ந்துகொள்வார். ஆனால் ஒரு சுற்றுதான் நடப்பார். அதற்குப் பிறகு கல்மேடைதான் அவருடைய களம்.
நடக்கும்போது அவருக்குப் பேச்சு வராது. உட்கார்ந்தால் அருவி மாதிரி பேச்சுப் பொங்கி வழியும். அவர் விவரிக்கும் சிறுவயது அனுபவங் களைக் கேட்பது மிகப்பெரிய அனுபவம். ஒருபோதும் அதைத் தவறவிடக் கூடாது என்கிற எண்ணம் உள்ளவன் நான். அதனால் அவர் உட்கார்ந்தால், அவரோடு சேர்ந்து நானும் உட்கார்ந்துவிடுவேன்.
ஒருநாள் காலையில் நானும் பேராசிரியரும் நடப்பதற்குச் சென்றிருந் தோம். வழக்கம்போல ஒரு சுற்று முடிந்ததும், “வாங்க, உக்காந்து வேடிக்கை பார்த்துட்டே பேசலாம்” என்று கல்மேடையின் பக்கம் திரும்பி விட்டார். தன் திருமணத்துக்கு முன்னால் சென்றுவந்த கங்கோத்ரி, யமுனோத்ரி பயணங்கள் தொடர்பான நினைவுகளை அப்போதுதான் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியிருந்தார். அதைப் பாதியில் நிறுத்த எனக்கு மனம் வரவில்லை. அவரோடு சேர்ந்து நானும் கல்மேடைக்குச் சென்றேன்.
கல்மேடையில் எங்களுக்கு எதிர்மூலையில் யாரோ ஒருவர் உடலைச் சுருட்டி வளைத்துக்கொண்டு இடுப்பு வேஷ்டியையே இழுத்துப் போர்வையாகப் போர்த்தியபடி உறங்கிக்கொண்டிருந்தார். பார்ப்பதற்கு நீளவாக்கில் மடித்துக் கட்டிய மூட்டை மாதிரி இருந்தது.
“யாரோ வெளியூரு ஆளு மாதிரி தெரியுது. இங்க வந்து படுத்திருக்காரு.”
அந்த உருவத்தின் பக்கமாகப் பார்த்து முணுமுணுத்தபடி மேடையின் வேறொரு பக்கமாகச் சென்று உட்கார்ந்தார் பேராசிரியர்.
“ஏதாவது கிராமத்துப் பக்கத்துலே ருந்து நடந்துவந்த ஆளா இருக்கும். களைப்புல அப்படியே தூங்கிட்டாரோ என்னமோ!”
“யாரா இருந்தா என்னங்க? இப்ப மணி என்ன ஆவுது? எட்டரை வரைக்குமா ஒரு ஆளு தூங்குவாரு?”
நான் அந்தப் பேச்சை வளர்க்க விரும்பவில்லை. அவர் பாதியில் நிறுத்திய கங்கோத்ரி தகவலை நினைவூட்டி உரையாடலைத் தொடரச் செய்தேன். அந்தத் தகவலைச் சொன்னதுமே அவர் முகம் மலர்ந்துவிட்டது. அனைத்தையும் மறந்து அதை விவரிக்கத் தொடங்கினார். அந்த அனுபவத்தைச் சொல்லி முடிக்கும் வரை வேறு எந்த ஞாபகமும் அவருக்கு வரவில்லை.
அத்தருணத்தில் இன்னும் இரண்டு பெரியவர்கள் கல்மேடையின் பக்கம் வந்து மூச்சு வாங்கியபடி உட்கார்ந்தார்கள். சொல்லி வைத்ததுபோல அவர்களுடைய பார்வையும் முதலில் அந்த உருவத்தின் பக்கம் சென்று மீண்டது.
அடுத்த சில நிமிடங்களில் கல்மேடையை நோக்கி இன்னும் சிலர் வந்து சேர்ந்தனர். “சூரியன் வந்து முதுகுல சுடறதுகூடத் தெரியாம தூங்கறத பார்த்தா, நெதானத்துல தூங்கற ஆளு மாதிரி தெரியலையே. ஏதாச்சும் போதையில தூங்கறாரோ என்னமோ?” என்றார் ஒருவர்.
“உனக்கு எதுக்குயா ஊருவம்பு? அந்த ஆளு எழுந்து சண்டைக்கு வந்தா என்ன பண்ணுவ? அதெல்லாம் நமக்குத் தேவையா? இன்னும் கொஞ்ச நேரமானா தானா எழுந்து போயிடுவாரு” என்றார் மற்றொருவர்.
அதற்குப் பிறகு யாரும் பேசவில்லை. எங்கள் உற்சாகம் திடீரென வடிந்து விட்டது. அமைதியாக மேடையிலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினர். பேராசிரியரும் “வாங்க போகலாம்” என்று எழுந்துவிட்டார். நான் குழப்பத்துடன் உறக்கத்தில் மூழ்கியவரின் முகத்தைப் பார்த்தேன். கலைந்த தலை. அழுக்கேறிய உடை. கழுத்துக்குக் கீழே நீளமான ஒரு வடு.
சிற்றுண்டிக்குப் பிறகு கடைத்தெரு வுக்குச் செல்லும் வேலை இருந்தது. அந்த மும்முரத்தில் பூங்கா சம்பவத்தை மறந்துவிட்டேன். பொழுது சாய்ந்து வீட்டுக்குத் திரும்பி, சூடான தேநீருக்குப் பிறகு மீண்டும் நடைப்பயிற்சிக்குப் புறப்பட்டேன். அப்போதுதான் அந்த மனிதரின் முகம் நினைவுக்கு வந்தது.
வீட்டு வாசலில் பேராசிரியர் அழைக் கும் குரல் கேட்டது. உடனே “இதோ வந்துட்டேன் சார்” என்றபடி அவரோடு சேர்ந்துகொண்டேன். காலையில் உரையாடலை நிறுத்திய புள்ளியிலிருந்து மீண்டும் தொடங்கி உற்சாகமான குரலில் பேசிக்கொண்டே நடந்தார் பேராசிரியர்.
ஒரு சுற்று நடை முடிந்ததும் கல்மேடையின் பக்கம் திரும்பிப் பார்த்தார் பேராசிரியர். அந்த மனிதர் இன்னும் அந்த மேடையிலேயே படுத்திருந்தார். ஊன்றிப் பார்த்தபோதுதான் அவர் படுத்திருந்த நிலை மாறியிருப்பதைப் பார்த்தேன். போர்த்திக்கொண்டிருந்த வேட்டியிலிருந்து கால்கள் விடுபட்டு நீண்டிருந்தன. நான் அந்த மாற்றத்தைப் பேராசிரியருக்குச் சுட்டிக்காட்டினேன். அதைப் பார்த்துவிட்டுப் பேராசிரியரும் பெருமூச்சுவிட்டார். “எப்படியாவது கெடக்கட்டும். உயிரு இருக்குது. அது போதும்” என்றார். அவருக்குக் கீழே இரண்டு மூன்று சிறிய பாலிதீன் பைகள் கிடந்தன. எல்லாமே சாராய பாக்கெட்டுகள்.
வழக்கமாக நடைப்பயிற்சிக்குப் பிறகு கல்மேடையில் கூடும் நண்பர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். அந்த மனிதர் கிடந்த கோலத்தைப் பார்த்து ஒவ்வொருவரும் கோபம் கொண்டனர்.
“எல்லாம் போதை செய்யற வேலை சார். ஓங்கி ஒரு உதை விட்டா தானா எழுந்துருவாரு. பார்க்கறீங்களா?” என்று கையை முறுக்கினார் ஒருவர்.
“போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ண லாமா?” என்று இன்னொருவர் கேட்டார்.
“ஐயோ, அதை மட்டும் தயவுசெஞ்சு யாரும் செஞ்சிடாதீங்க. சாட்சி கீட்சின்னு நம்மள கோத்து விட்டுடுவாங்க.”
வீட்டுக்குச் சென்ற பிறகு சிறிது நேரம் வரை அந்த நினைவு வாட்டியது. பிறகு தொலைபேசி உரையாடல்கள், திரைப்படப் பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் என மனம் வேறு திசையில் திரும்பிவிட்டது.
அடுத்த நாள் காலையில் நடைப் பயிற்சிக்கான காலணிகளை அணியும் போதே எனக்கு அந்தக் கல்மேடை நினைவு வந்துவிட்டது. அந்த முகம். அந்த வடு. அந்தக் கோலம். உடல் ஒருகணம் நடுங்கியது.
பேராசிரியர் அந்தச் சம்பவத்தைப் பற்றி ஏதேனும் நினைவுபடுத்திக்கொண்டு சொல்லக்கூடும் என நினைத்தேன். ஆனால் அவர் அதைப் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. கன்னியாகுமரியில் பார்த்த சூரியோதயத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசத் தொடங்கிவிட்டார்.
ஒரு சுற்று நடையை முடித்துக் கொண்டு கல்மேடையை நெருங்கியதும் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் அந்தத் திசையில் திரும்பிப் பார்த்தோம். அந்த மனிதரைக் காணவில்லை. கீழே விழுந்திருந்த பாக்கெட்டுகளையும் காணவில்லை.
இப்போதுதான் மனம் நிம்மதி அடைந்தது.
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)