வண்ணக் கிளிஞ்சல்கள் - 10: விடை தெரியாத கேள்விகள்

வண்ணக் கிளிஞ்சல்கள் - 10: விடை தெரியாத கேள்விகள்
Updated on
3 min read

எங்கள் அலுவலகம் நான்கு மாடிகள் கொண்ட ஒரு கட்டிடத்தில் நான்காவது மாடியில் ஒரு மூலையில் இருந்தது. ஒவ்வொரு தளத்திலும் சில அலுவலகங்கள். நான்கு தளங்களிலும் பன்னிரண்டு அலுவலகங்கள். எல்லாத் தளங்களிலும் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஆறு பேர் மிக நெருக்கமாகப் பழகிவந்தோம். அக்குழுவில் ராகவன்தான் மூத்தவர். அதனால் நாங்கள் அவரை மரியாதையுடன் ‘ஜி’ என்று அழைத்தோம்.

நண்பரின் வாகனம்: அந்த வளாகத்தில் டி.வி.எஸ். வாங்கி ஓட்டி வந்த முதல் தலைமுறை ஊழியர்களில் அவரும் ஒருவர். அதே காலக்கட்டத்தில் அந்த வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அடுத்த ஐந்து, பத்தாண்டுகளில் வெவ்வேறு வாகனங்களுக்கு மாறியபோதும், ஜி அந்த டி.வி.எஸ். வண்டியை மாற்றவில்லை.

ஆண்டுக்கணக்கில் நல்லவிதமாக ஓடிக்கொண்டிருந்த அந்த வண்டி, ஒருகட்டத்தில் விசித்திரமான சில பிரச்சினைகளை அடிக்கடி அளிக்கத் தொடங்கியது. ஜியும் மனம் சலிக்கா மல் அதைப் பழுது பார்த்துச் சரிப்படுத்தி ஓட்டினார்.

ஒருநாள் மாலையில் வண்டியை எடுப்பதற் காக அவர் சென்றபோது, அவருக்குத் துணை யாக நானும் சென்றேன். பழுது பார்த்ததற்கான தொகையைக் கொடுத்துவிட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்து பார்த்து திருப்தியுடன் தலையசைத்தார் ஜி. “எல்லாமே நல்லா இருக்கிற மாதிரிதான இருக்குது. அப்புறம் ஏன் திடீர் திடீர்னு நின்னு போயிடுது?” என்று கடைக்காரரிடம் கேட்டார்.

கடைக்காரர் ஒருகணம் அவரைப் பார்த்து உதட்டைப் பிதுக்கித் தெரியாது என்பதுபோலக் கைகளை விரித்தார். பிறகு ஒரு பெருமூச்சுடன், “லொடலொடன்னு இருந்தாலும் நிக்காம ஓடிக்கிட்டே இருக்கற வண்டியும் இருக்குது. பாக்கறதுக்கு ஜோரா இருந்தாலும் படுத்தியெடுக்கிற வண்டியும் இருக்குது. இதுக்கெல்லாம் ஒரு காரணமும் கெடையாது சார். ஓடுற வரைக்கும் ஓட்டுங்க. இல்லைன்னா ஓரம்கட்டி நிறுத்திடுங்க” என்றார்.

காதல் திருமணம்: ஒருநாள் எங்களிடம், “நாளைக்கு மதியம் யாரும் சாப்பாடு எடுத்துட்டு வராதீங்கப்பா. லஞ்சுக்கு எல்லாரும் சேர்ந்து ஓட்டலுக்குப் போகலாம்” என்றார் ஜி.

“என்ன ஜி விசேஷம்?” என்று கேட்டேன். “என் மூத்த பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு. அதான் விசேஷம்” என்று புன்னகை செய்தார்.

“மாப்பிள்ளை எந்த ஊரு ஜி? என்ன வேலை செய்றாரு?”

“யாரோ குஜராத்திகாரன். இந்தி பேசற ஆளு. கம்பெனியில ஒண்ணா வேலை செய்யறவனாம். அவனைத்தான் கல்யாணம் செஞ்சிக்குவேன்னு பொண்ணு சொல்லிட்டா. நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்.”

நகரத்திலேயே ஒரு பெரிய மண்டபத்தில் திருமணம் கோலாகலமாக நடந்தது. நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று ஜி வீட்டுக் கல்யாணத்தில் கலந்துகொண்டோம்.

அலுவலகத்துக்குச் செல்வதற்கு வசதியாக, அலுவலகத்துக்கு அருகிலேயே ஓர் அடுக்க கத்தில் வாடகைக்கு வீடு பார்த்து மணமக்களைக் குடிவைத்துவிட்டதாகத் தெரிவித்தார் ஜி.

“பொண்ணு குடும்பம் நடத்தறத பார்க்கும் போது நான் கல்யாணம் செஞ்சிக்கிட்டு குடும்பம் நடத்தனதுலாம் ஞாபகம் வருது” என்று வெட்கத்துடன் சொல்லிச் சிரித்தார் ஜி.

விவாகரத்து: “நம்பிக்கையான வக்கீல் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று ஒருநாள் ஜி கேட்டார். அந்தக் கேள்வி என்னைத் திகைக்க வைத்தது. “என்ன பிரச்சினை ஜி?” என்று கேட்டேன். “பொண்ணு ஆசைப்பட்டாளேன்னு அந்தக் குஜராத்திகாரனுக்குக் கல்யாணம் செஞ்சி குடுத்துப் பெரிய தப்புப் பண்ணிட்டேன்.

இப்ப எதுவும் செட்டாகலப்பா; எனக்கு இந்த வாழ்க்கையே வேணாம்னு வீட்டுல வந்து உக்கார்ந்திருக்கா. பிரிச்சி விடுங்க பிரிச்சி விடுங்கன்னு பிடுங்கியெடுக்கிறா. எனக்கு என்ன செய்றதுன்னு புரியலை” என்றார். சொல்லும் போதே அவர் கண்கள் கலங்கின.

நான் அவர் தோள்களை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தேன். இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லும்போது சந்தித்துப் பேசுகிற ஒரு பெண் வழக்கறிஞரின் முகம் நினைவுக்கு வந்தது. அவருடைய முகவரியை ஜியிடம் கொடுத்துச் சந்திக்கும்படி சொன்னேன்.

இரண்டு ஆண்டு காலம் வழக்கு நீண்டு, இறுதியாகத் தீர்ப்பு கிடைத்தது. சட்டரீதியாக இருவரும் பிரிந்துவிட்டார்கள். அந்தப் பையன் இடமாற்றல் வாங்கிக்கொண்டு பம்பாய் பக்கம் போய்விட்டான். மகள் அதே அடுக்ககத்தில் தனித்து இருக்கப்போவதாகத் தெரிவித்துவிட்டதாகச் சொன்னார். பெண்ணின் வாழ்வில் நிகழ்ந்த துயரம் அவருடைய புன்னகையைப் பறித்துவிட்டது. அதற்குப் பிறகு அவர் புன்னகை செய்து நான் பார்க்கவே இல்லை. ஆண்டுகள் கடந்து போனாலும், வேதனை மறையவில்லை.

பணிநிறைவு பெற்ற தினத்தில்கூட அவர் முகத்தில் படிந்திருந்த வெறுமை அகலவில்லை. வழக்கமாக அலுவலகம் சார்பாக அளிக்கப்படும் பிரிவு உபசாரத்தைக்கூட அவர் நாகரிகமாக மறுத்துவிட்டார். அதற்குப் பிறகு அவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

சந்தித்த வேளையில்... ஆறேழு ஆண்டுகளுக்குப் பிறகு எம்.ஜி. ரோடு மெட்ரோ ஸ்டேஷன் சிக்னல் அருகில் தற்செயலாக ஜியைப் பார்த்தேன். எனக்கு முன்னால் அவர் டி.வி.எஸ். வண்டியில் சிக்னலுக்காகக் காத்திருந்தார். உடனே பரவசத்தில் “ஜி” என்று அழைத்துவிட்டேன். அவரும் வேகமாக என் பக்கம் திரும்பிவிட்டார். தலை முழுவதும் வெளுத்திருந்தது. தசைப்பற்றில்லாத முகம் ஒடுங்கியிருந்தது.

அவர் பாதையோரமாக வண்டிகளை நிறுத்தும் பகுதியில் வண்டியை நிறுத்திவிட்டு வந்தார். “நல்லா இருக்கிறீங்களா?” என இருவரும் ஒரே நேரத்தில் விசாரித்துக்கொண்டோம்.

“ஒரு காபி சாப்பிடலாமா ஜி?” என்று கேட்டேன். எந்தத் தயக்கமும் இல்லாமல் “சாப்பிடலாமே” என்றார் அவர். சிக்னலிலிருந்து திரும்பி அடுத்த தெருவில் இருந்த இந்தியன் காபி ஹவுஸுக்குச் சென்றோம்.

ஆறேழு ஆண்டுகாலக் கதைகள். பேசப் பேசத் தீரவே இல்லை. அவர் என் குடும்பத்தைப் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் ஆர்வத்தோடு விசாரித்தார். எல்லாவற்றுக்கும் நான் விரிவாகப் பதில் சொன்னேன். அவர் மகிழ்ச்சியடையக்கூடும் என்பதற்காக இரண்டாவது பெண்ணைப் பற்றிய பேச்சைத் தொடங்கினேன்.

“ரெண்டாவது பொண்ணுக்குப் பார்த்திட்டி ருந்தீங்களே, கல்யாணம் முடிஞ்சிடுச்சா ஜி?”

அவர் என்னை ஒரு கணம் அமைதியாக ஏறிட்டுப் பார்த்தார். பிறகு ஆழ்ந்து பெருமூச்சு விட்ட பிறகு, “கல்யாணமும் முடிஞ்சிடுச்சி. டைவர்சும் முடிஞ்சிடுச்சி” என்றார். “என்ன ஜி சொல்றீங்க?” என்று அதிர்ச்சியுடன் அவர் முகத்தைப் பார்த்தேன்.

“மூத்த பொண்ணு கதைதான் உங்களுக்குத் தெரியுமே. ரெண்டாவது பொண்ணுக்காவது நல்ல இடமா பார்த்து முடிப்போம்னு சொந்த ஊருல தேடித் தேடி ஒரு மாப்பிள்ளையை முடிச்சி வைச்சோம். எல்லாம் ஒரு ஆறு மாசம்தான். அதுக்கப்புறம் ஒருநாள் வீட்டுக்கு வந்து, ஒண்ணும் செட்டாகல, அவன் என்னைப் புரிஞ் சிக்கவே மாட்டறான், பிரிச்சி விட்டுடுங்கப்பான்னு அழுதுகிட்டே நின்னா.”

“அப்புறம்?”

“அதே பழைய கதைதான். அதே பழைய வக்கீலம்மா. அதே கேஸ். அதே அலைச்சல். அதே விவாகரத்து. அதுக்கு நடுவுல என் ஊட்டுக்காரி மேல போய்ச் சேர்ந்துட்டா.”

விடை தெரியாத கேள்விகள்: அவரை எப்படி அமைதிப்படுத்துவது என்றே புரியவில்லை. எழுந்து அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டேன். “மனச தளரவிடாதீங்க. தைரியமா இருங்க ஜி” என்று ஒவ்வொரு சொல்லாகச் சொன்னேன்.

“இனிமேல எனக்கு எதுக்குங்க தைரியம்? தானா விருப்பப்பட்டுக் கல்யாணம் செஞ்சிக்கிட்டுப் போன பொண்ணும் வாழலை. நாமளே முயற்சியெடுத்துத் தேடி கல்யாணம் செஞ்சிவச்ச பொண்ணும் வாழலை. ஏன் இப்படியெல்லாம் நடக்குது?”

என்னிடம் ஏதோ ஒரு பதில் இருக்கிறது என நினைத்து அவர் கண்கள் என்னையே சில கணங்கள் பார்த்தபடி இருந்தன. என் நெஞ்சிலிருந்து ஒரு சொல்லும் எழவில்லை. எச்சில் கூட்டி விழுங்கியபடி அவர் கைகளையே அமைதியாக அழுத்திக்கொண்டிருந்தேன்.

(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)

- writerpaavannan2015@gmail

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in