

தியான அறையாக இருந்தாலும் மூச்சு இழுத்து விடுகிற ஓசையாவது கேட்கும். ஆனால், ஒரு குண்டூசி விழுந்தாலும் கேட்கிற அளவுக்கு அமைதி அடைகாக்கும் ஓர் இடம் உண்டு என்றால், அது மாணவர்களின் தேர்வு அறைதான். நானும் ஓர் அடைக் கோழியாகப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தேன்.
ஒருவரை இன்னொருவர் பார்த்தபடி அமைதியாக இருந்தோம். எங்களுக்குள் இருந்த ஒரே போட்டி யார் நன்றாக எழுதி இருக்கிறார்கள் என்பதல்ல, யார் முதலில் விடைத்தாளைக் கொடுப்பது என்பதில்தான்.
இரண்டு விஷயங்கள் எங்களைப் பரிதவிக்கச் செய்தபடி இருந்தன. ஒன்று இது கடைசிப் பரீட்சை. இன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு விடுமுறை. மற்றொன்று இன்றிலிருந்து எங்கள் ஊர் அம்மன் கோயிலுக்குக் கொடைத் திருவிழாவிற்கான பந்தல் கட்டும் பணி ஆரம்பம். பந்தல் அமைக்கும் பணியிலிருந்து கொடை முடியும் வரை எங்களின் உலகமே வேறு.
ஒருவருடைய மனமும் பரீட்சையில் இல்லை. விடைத்தாளை யார் முதலில் தருவது என்பதுதான் பிரச்சினை. ‘என்னத்த எழுதியிருக்கிற, உட்காருடா’ என்கிற அதட்டலுக்குப் பயந்து உட்கார்ந்திருந்தோம். ஒருவன் கொடுத்துவிட்டால் போதும், அனைவரும் வரிசைகட்டிக் கொண்டு கொடுத்துவிடுவோம். கடைசிப் பரீட்சை வரலாறு, புவியியல். அதில் வினாத்தாள் வழங்கும்போது வரைபடமும் தருவார்கள்.
விடைத்தாள் வாங்கும்போது, வரைபடத்தில் மாணவர்கள் குறித்திருப்பதைப் பார்த்து ஆசிரியர் அதிர்ச்சியடைந்துவிடுவார். இமய மலையைத் தெற்கிலும் கன்னியாகுமரியை வடக்கிலும் பல மாணவர்கள் மாற்றியிருப் பார்கள்! சோழ நாட்டின் தலைநகரம் டெல்லியில் இருக்கும். அனைத்தும் தேர்வு அறையிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்கிற ஆர்வத்தால்.
கொட்டகைப் பந்தலை முக்கோண வடிவில் நூறு அடி நீளத்திற்குத் தரையிலேயே அமைப்பார்கள். அதற்குள் நாங்கள் புகுந்துகொள்வோம். கொட்டகையின் நான்கு பக்கமும் கயிறு கட்டி, மக்கள் அனைவரும் சேர்ந்து உற்சாகக் குரல் கொடுத்து மேல் நோக்கி உயர்த்துவதில் ஆரம்பமாகும் அந்த ஒற்றுமைத் திருவிழா.
ஊரே திரண்டு நின்று அம்மனுக்குத் தலையில் சுமந்துகொண்டு வந்த பாலில் நீராட்டி, அலங்காரத் திரையிட்டு மூடியிருப்பார்கள். எந்த நேரம் திரை விலக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்திருக்கும் வேளையில், திரை விலகியதும் கற்பூர ஒளியில் அம்மன் தோன்ற, அப்போது அடிக்கும் நையாண்டி மேளத்திற்கு ஆடத் தோன்றும். யாருக்குச் சாமி வரும் என்று தெரியாது. திடீரென்று ஒரு குரல் ஓங்கி ஒலிக்கும். கூட்டத்தின் மீது விழுந்து அவர் ஆட ஆரம்பித்துவிடுவார். அவ்வளவுதான், அவர் சாமி ஆகிவிடுவார்!
என் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாமா மகளுக்குச் சாமி வந்துவிட்டது. என் தலைமுடியைப் பிடித்து, “அம்மனுக்கு நல்ல பிள்ளையா இருப்பாயா?” என்றாள். “சரி சாமி” என்று சொன்ன பின்னரே என் தலை தப்பியது. சாமி இறங்கியதும் “ஏன் தலையைப் பிடித்து அப்படி ஆட்டினே?” என்று கேட்டதற்கு, “நான் எங்க ஆட்டுனேன், சாமியில்ல ஆட்டியிருக்கு” என்று அவள் சொல்லும்போது, வெற்றிப் பெருமிதம் முகத்தில் பரவியிருந்தது.
அன்று மாலை அனைவரும் கோயில் முன் பொங்கல் வைப்பார்கள். ஐநூறு அடுப்புகளிலிருந்து வரும் புகை, வேற்றுமைப் பகையை ஒழிக்கும் புகையாக வானில் வட்டமிடும்.
தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் கொடை என்றும் வடக்குப் பகுதியில் கூழ்வார்க்கும் திருவிழா என்றும் நடைபெறும் அனைத்துக் கொண்டாட்டங்களிலும் அடிநாதமாக இருப்பது மனித ஒற்றுமை மட்டுமே. அனைத்துத் திருவிழாக் காலங்களும் சித்திரை தொடங்கி ஆடி வரையில் தமிழ் நாட்டில் வெயில் உக்கிரமெடுக்கும் நாள்கள். வெக்கையில் மதியம் வில்லுப்பாட்டு நடைபெறும். வருடந்தோறும் கேட்ட கதை என்றாலும் அந்த ராகத்தில் கேட்பது தனி சுகம்.
எங்களது சிந்தனை எல்லாம் வரப்போகும் கரகாட்டம் பற்றித்தான் இருக்கும். இந்த வருடமாவது இளம் கரகாட்டக்காரர்களை அழைத்து வருவார்களா என்று காத்திருப்போம். இதற்காகவே டவுனிலிருந்து செய்தி சேகரித்துக்கொண்டு வந்தவர், “மாப்ளே, பஸ்டாண்டுல பார்த்தேன்டா... ஏமாத்திட்டாங்கடா” என்று புலம்புவார்.
கோயிலுக்கு எதிரே இருக்கும் நண்பன் வீட்டில்தான் கரகாட்டக் கலைஞர்கள் மேக்கப் போடுவார்கள். நண்பன் கதவைச் சாத்தி யாரும் பார்த்துவிடாமல் காவல் இருப்பான். அவனுக்குத் திருவிழாவில் விற்கும் ஐஸ் வாங்கிக் கொடுத்தால் உள்ளே நுழைவதற்கான அனுமதி கிடைக்கும்.
இரவு பன்னிரண்டு மணிக்கு அம்மனுக்குச் சாமக் கொடை நடந்து, சாமி வேட்டைக்கு ஊர் சுற்றக் கிளம்பும். அதன் பின்புதான் எங்கள் திருவிழா ஆரம்பமாகும். ஊரின் பெரிய மைதானம் போன்ற ஓர் இடத்தில் கரகாட்டம் நடக்கும். பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் நாகஸ்வரக் கலைஞர்களின் ஓசையும் நையாண்டி மேளமும் சேர்ந்து வேறோர் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். காலில் சலங்கை கட்டியபடி பெண் கலைஞர்கள் எதிரெதிர்த் திசையில் ஆடியபடி வர, நடுவில் ஆண் கலைஞர் புகுந்து வர விசில் சத்தம் வானைப் பிளக்கும்.
அவர்களே பாடல்களை உருவாக்கி மெட்டமைத்துப் பாடுவது, அவர்கள் பாடியதும் அதே மெட்டை நாகஸ்வரத்தில் மீண்டும் இசைக்கையில் அவர்கள் துள்ளி ஆடுவதும் மறக்க முடியாத காட்சி.
அனைவருக்கும் கொடை அன்றோடு முடிந்துவிடும். ஆனால், எனக்குள் நையாண்டி மேளமும் கரகாட்டமும் அகல்வதற்குப் பல மாதங்கள் தேவைப்படும்.