இளம் தொழில்முனைவோர் - ‘உழமகள்’ திவ்யா

இளம் தொழில்முனைவோர் - ‘உழமகள்’ திவ்யா
Updated on
2 min read

இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கிறார் திவ்யபாரதி. இன்ஸ்டகிராமில் ஒரு லட்சம் பேர் இவரைப் பின்தொடர்கிறார்கள் என்பது இவர் அடையாளம் அல்ல. லட்சங்களில் வியாபாரம் செய்யும் தொழில் முனைவோர் என்பதே இவரது அடையாளம். கிராம வாழ்க்கை. அப்பா விவசாயி. இந்தப் பின்னணியில் இருந்து முற்றிலும் புதிய துறையில் கால்பதித்து, முதல் தலைமுறைத் தொழில்முனைவோர் ஆகியிருக்கிறார் திவ்யா.

உழமகள் (Instagram @uzhamagal) என்கிற இன்ஸ்டா ஐடி மூலம் துணிகளை விற்கிறார் திவ்யா. அலுவலகத்துக்கு அணியும் உடையிலிருந்து விசேஷ நாள்களுக் கான உடைகள் வரை இவரிடம் இருக்கின்றன.

திருப்பூர் அருகில் உள்ள பொன்னே கவுண்டன் புதூர் கிராமத்தில் தொழிலைத் தொடங்கி, உலகம் முழுக்க வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கும் திவ்யாவின் கதை சுவாரசியமானது. 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்து, இன்று ஐந்து பேருக்கு நேரடியாகவும் பலருக்கு மறைமுகமாகவும் வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார். படிப்பை முடித்த இரண்டு ஆண்டுகளிலேயே தான் படித்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருது வாங்கியிருக்கிறார்!

தொழில்முனைவோர் ஆகும் எண்ணம் எப்படி வந்தது? - பள்ளியில் படிக்கும்போதே ஃபேஷன்தான் என்னுடைய துறை என்று முடிவு செய்து விட்டேன். பத்தாவது முடித்தவுடன் தையல் கற்றுக்கொண்டேன். ஒரு தையல் மெஷின் வாங்கி வீட்டில் தைத்தேன். அப்போதே தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. பெண் குழந்தைகளை மட்டம் தட்டிப் பேசுபவர்கள் மத்தியில், ஏன் பெண்ணால் இதைச் செய்ய முடியாது என்கிற எண்ணத்துடன் வளர்ந்தேன்.

எப்போது தொடங்கினீர்கள்? - பி.டெக். ஃபேஷன் டெக்னாலஜி படித்தேன். அப்போதே திவ்யா டிசைனர்ஸ் என்று ஒரு இன்ஸ்டகிராம் பக்கம் உருவாக்கி, என்னுடைய டிசைன்களைப் பதிவாகப் போடுவேன். கல்லூரி இன்டர்ன்ஷிப்புக்காக வேலை செய்த நிறுவனம் ஒன்றில் போட்டியில் கலந்துகொண்டேன். அந்தப் போட்டிக்காக டிசைன் செய்த உடையை இன்ஸ்டாவில் பதிவிட்டேன். அதைப் பார்த்து ஒருவர் தனக்கும் இதே மாதிரி வேண்டும் என்றார்.

செய்து கொடுத்தேன். லாக் டவுன் நேரத்தில் இன்னும் தீவிரமாக இதைச் செய்ய ஆரம்பித்தேன். முதலில் தெரிந்தவர்கள் மட்டும் வாங்கினார்கள். பிறகு நிறைய வாடிக்கையாளர்கள் வந்துவிட்டார்கள். நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தும் தொழில் செய்வதில்தான் எனக்கு விருப்பம் இருந்தது. இன்று ‘உழமகள்’ ஒரு பிராண்டாக வளர்ந்துகொண்டிருக்கிறது.

முதல் தலைமுறை தொழில்முனைவோராக என்னென்ன சவால்களை எதிர்கொண்டீர்கள்? - தொழில் செய்யப்போகிறேன் என்று சொன்ன நாள் முதலே சவால்கள் ஆரம்பித்துவிட்டன. ‘நல்ல வேலை கிடைச்சிருக்கே, அதுக்கே போ. கல்யாணம் பண்ணிக்குறவங்க பிசினஸ் வேணாம்னு சொன்னா என்ன பண்ணுவ? இதுக்காகக் கல்யாணம் வேணாம்னு சொல்லுவியா’ என்றார் அம்மா. சிறிய முதலீடு கொடுக்கும் அளவுக்கு அப்பாவிடம் பொருளாதார பலம் இருந்தும் பணம் தரவில்லை. என் அக்கா தான் முதலீட்டுக்கான பணம் கொடுத்தார். சில மாதங்களுக்குப் பிறகே குடும்பத்தின் முழு ஆதரவு கிடைத்தது.

ஐந்தாயிரம்தான் என் முதலீடு. என்னிடம் டெய்லரிங் மெஷின் இருந்தது. கிராமத்தில் நவீன உடைகளைத் தைக்கத் தெரிந்தவர்கள் இல்லை. ஒருவருக்குப் பயிற்சி கொடுத்து, அவர் அருகிலேயே இருந்து தைத்து வாங்குவேன். வருமானத்தைத் திரும்பவும் தொழிலில் போட் டேன். இன்ஸ்டா பதிவுகளைப் போட்டதும் வரும் ஆர்டர்களை வைத்து உடைகளைத் தயார் செத்து அனுப்புவேன்.

ஆரம்பத்தில் நானே ஆடைகளை அணிந்து மாடலாக இருப்பதில் தயக்கம் இருந்தது. இன்ஸ்டா வில் மற்றவர்களைப் பார்த்து, தன்னம்பிக்கை பெற்று, என்னுடைய டிசைன்களுக்கு நானே மாடலிங் செய்ய ஆரம்பித்தேன். படமெடுத்துப் பதிவு செய்வதில் இருந்து ஆர்டரை கொரியர் செய்வது வரை எல்லாமே நான் தனியாகத்தான் செய்தேன்.

இன்ஸ்டா பதிவு மூலம் ஆர்டர்கள் குவிந்தால், அதைக் கொடுக்க எங்களிடம் ஆள் பலம் இருக்காது. லட்ச ரூபாய்க்கு ஆர்டர் வந்தால் அந்த மாதம் முழுவதும் இடைவேளையின்றி உழைத்தால்கூட அந்த ஆர்டர்களை முடித்துக் கொடுக்கக் கஷ்டமாக இருக்கும். இப்போது ஐந்து பேர் வேலை செய்கிறார்கள். ஆர்டர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து டிசைன், டெய்லரிங் அவுட் சோர்ஸ் செய்துகொள்கிறோம்.

கோயம்புத்தூர் வரைக்கும் சென்று தேவை யான துணிகளை வாங்குவேன். இப்போது கிராமத்துக்கே வந்து கொடுத்துவிடுகிறார்கள். ஆறு மாதங்களாக ஒரு பார்ட்னருடன் இணைந்து வேலை செய்கிறேன். அதனால் வேலைகளைப் பகிர்ந்துகொண்டு இன்னும் நிறைய வாடிக்கை யாளர்களுக்குச் சேவை செய்ய முடிகிறது.

எதிர்காலத் திட்டம் என்ன? - நேரில் பார்த்து வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக ஒரு கடையை விரைவில் திறக்க இருக்கிறோம். நீண்ட கால நோக்கி்ல் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை போன்ற இடங்களில் கடைகளைத் திறக்க வேண்டும் என்கிற லட்சியம் இருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in