

கன்னங்கரிய சுவரில் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த முருகன் படத்தை “முருகா முருகா” என்றபடி தொட்டுக் கும்பிட்டு விட்டு, விழிமூடி நின்றார் அவர். பிறகு வேறோர் ஆணியில் தொங்கிய துணி உறையிலிருந்து நாகஸ்வரத்தை வெளியே எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டார். கொடியில் கிடந்த ஒரு துணியை எடுத்து அக்குழலைத் துடைத்தார். இரண்டு, மூன்று சீவாளிகளை எடுத்துப் பொருத்தி வாசித்துப் பார்த்து, மனதுக்கு இசைவாகப் பொருந்தி வந்த சீவாளியோடு வெளியே வந்தார்.
அவர் புறப்பட்டதைக் கவனித்ததும் குடிசைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஓடிவந்து, “அப்பா, எனக்கு இட்லி” என்றாள். அவளோடு சேர்ந்து ஓடிவந்த அவளைவிடச் சிறிய சிறுமி, “எனக்கு மசால் தோசை” என்று சிரித்தாள். அவர்களைவிட வயதில் குறைந்த சிறுவன் முன்னால் வந்து, “ரெண்டு வடை வேணும் எனக்கு” என்று விரல்களைப் பிரித்துக் காட்டினான்.
எல்லாரிடமும் “சரி சரி” என்று பதில் சொன்னவாறு முதுகைத் தட்டிக் கொடுத்தார் அவர். அவருடைய மனைவி எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்தபடி அமைதியாக நின்றார். “வரேன்” என்று அவரிடம் சொல்லிவிட்டு நாகஸ்வரத்தோடு நடந்தார் அவர்.
குடிசைப் பகுதியைக் கடந்து, புதிதாக உருவாகியிருந்த குடியிருப்புப் பகுதியை நெருங்கினார். அது நீண்ட தெரு. அகலமான சாலை. எல்லாமே அடுக்க கங்கள். ஒவ்வொன்றும் நான்கைந்து மாடிகளைக் கொண்ட உயரமான கட்டிடம்.
நாகஸ்வரத்தை எடுத்து ஒருமுறை கண்களில் ஒற்றிக்கொண்டு இசைக்கத் தொடங்கினார். எந்தத் திட்டமும் இல்லாமல் அவர் நெஞ்சிலிருந்து ‘சிங்காரவேலனே தேவா’ ஒலிக்கத் தொடங்கியது.
அவர் எந்த அடுக்ககத்தின் வாசலுக் கும் செல்லவில்லை. நடுச்சாலையிலேயே நடந்தார். சீரான இடைவெளியில் அங்கங்கே நின்றிருந்த வாதுமை மரங் களுக்குக் கீழே நின்று வாசித்தார். ஒரு மரத்தின் கீழ் நின்று வாசித்து முடித்ததும் அடுத்த மரத்தடிக்குச் சென்றார்.
நாதஸ்வர ஓசையின் அழைப்பைக் கேட்டு மாடி முகப்பில் நின்று சிலர் எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சற்றே வேகத் தைக் குறைத்து சில நொடிகள் அவரைப் பார்த்துவிட்டு மீண்டும் பறந்தனர். சாப்பாட்டுப் பெட்டிகளோடு இரண்டு சக்கர வாகனங்களில் முகவரி தேடிப் பறந்து கொண்டிருந்தவர்கள் தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என அறியாம லேயே ஓடிக்கொண்டிருந்தார்கள்.
ஒருவரும் அவரைப் பொருள்படுத்த வில்லை. அதைப் பற்றிய கவலை எதுவுமின்றி அடுத்த வாதுமை மரத்தடிக்குச் சென்று நின்றார் அவர். ‘நலம்தானா, உடலும் உள்ளமும் நலம்தானா?’ என்று தொடங்கினார். அந்தப் பக்க மாக நடைப்பயிற்சிக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு முதியவர் களை அந்த இசையின் இனிமை ஈர்த்து நிற்கவைத்தது. அந்த ராகத்தில் திளைத்து நின்றிருந்த அவர்கள் ஒருவரைப் பார்த்து இன்னொருவர் புன்னகைத்தபடி மீண்டும் நடக்கத் தொடங்கினர்.
அவர் சாலையின் வலப்புறத்தி லிருந்து இடப்புறத்தை நோக்கி வந்து, அங்கிருந்த வாதுமை மரத்தடியில் நின்றார். நான்கைந்து இளஞ்சிறுவர்கள் ஓவென்று கூச்சலிட்டபடி மிதிவண்டி களில் தெருமுனையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தனர். உடனே அவருக்குத் தன் பிள்ளைகளும் அவர்கள் தெரிவித்த விருப்பங்களும் நினைவுக்கு வந்தன போலும். மெதுவாக நாகஸ்வரத்தை உயர்த்தி ‘மாங்குயிலே பூங்குயிலே’ என்று தொடங்கினார்.
தள்ளுவண்டியில் பூக்கூடைகளை வைத்துக்கொண்டு கூவியபடி வந்த ஒரு நடுவயதுப் பெண்மணி, அவருக்குப் பக்கத்தில் இருந்த வாதுமை மரத்தடியில் நின்றார். உடனே அடுக்ககங்களின் வாசல் கதவுகள் திறந்து பலர் வெளிப்பட்டனர். போகும்போதும் வரும்போதும் அவர்க ளுடைய பார்வை நாகஸ்வரக்காரரின் பக்கம் பதிந்து மீண்டதே தவிர, அவர் இசைக்கும் பாட்டை நின்று கேட்கும் பொறுமை ஒருவரிடமும் இல்லை.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவரைப் போல நாகஸ்வரக்காரர் அடுத்த வாதுமை மரத்தடிக்குச் சென்றார். அங்கே நின்று தன் வாகனத்தைத் துடைத்துக்கொண்டிருந்த ஒருவர், அவரை மறுபக்கமாகச் செல்லுமாறு அனுப்பி வைத்தார்.
நாகஸ்வரக்காரர் அவர் சுட்டிக்காட்டிய மரத்தடிக்குச் சென்று ‘விண்ணோடும் முகிலோடும்’ பாடினார்.
அந்த மரத்தடிக்கு அருகிலிருந்த அடுக்ககத்தின் முன்னால் தண்ணீர் சுமந்த ஒரு டேங்கர் லாரி வந்து நின்று ஓசை எழுப்பியது. காவல்காரர் கதவுகளைத் திறந்தார். டேங்கர் லாரி இடப்பக்கமும் வலப்பக்கமுமாக நகர்ந்து ஓசை எழுப்பியபடி அடுக்ககத் துக்குள்ளே சென்றது.
அந்த இரைச்சலில் நாகஸ்வரக் காரரால் தொடர்ந்து இசைக்க முடிய வில்லை. வேறொரு மரத்தடியில் சிறிது நேரம் அமைதியாக நின்றார். அப்போது முதல் தளத்தில் மாடிக்கதவைத் திறந்துகொண்டு ஒரு சிறுமி எட்டிப் பார்த்தாள். “அங்கிள், அங்கிள்” என்ற அவளுடைய குரலைக் கேட்டு அந்தப் பக்கமாகத் திரும்பினார் அவர். “நீளமா இருக்குதே, அது என்ன அங்கிள்?” என்று அவருடைய நாகஸ்வரத்தைச் சுட்டிக்காட்டி கேட்டாள். புன்னகையுடன் பதில் சொல்ல முற்பட்ட தருணத்தில் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த பெண்மணி, ஆங்கிலத்தில் அதட்டியபடியே அச்சிறுமியை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டார்.
அவர் அமைதியாக அடுத்தடுத்த வாதுமை மரத்தடிகளை நாடிச் சென்று கொண்டே இருந்தார். ‘உள்ளம் உருகுதையா முருகா உன்னடி காண்கையிலே’, ‘மனமே கணமும் மறவாதே’, ‘பித்தன் என்றாலும் அவன் பேயன் என்றாலும்’, ‘சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே’ என அடுத்தடுத்த பாடல்கள் ஒலித்தன.
வாதுமை மரவரிசை முடிவடைந்து விட்டது. தெருமுனைக்கு வந்து நிற்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார். அங்கே நின்றபடி நீண்டிருந்த அத் தெருவை மீண்டும் ஒருமுறை பார்த்தார். ஒரு பெருமூச்சோடு முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
அந்தக் குறுக்குத்தெரு முதன்மைச் சாலையுடன் இணையும் இடத்தில் ஒரு முருகன் கோயில் இருந்தது. மாலையிட்ட வேல்முருகனின் உருவம் வாசலிலி ருந்தே தெரிந்தது. நாகஸ்வரக்காரர் முருகனையே பார்த்தார். பிறகு தன்னிச்சையாக ‘என்ன கவி பாடினாலும்’ என்று வாசிக்கத் தொடங்கினார்.
சாலையோரமாக நடந்து செல்கிற வர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றனர். உருகி வழிந்த இசையில், பூக்கடை வாசலில் நின்றிருந்த பெண்கள் சில கணம் தம்மை மறந்தனர். கோயிலை ஒட்டியிருந்த டீக்கடை வாசலில் டீ அருந்தியவர்கள் அவர் பக்கமாகத் திரும்பி நின்று பாட்டைக் கேட்டனர்.
பல்லவியை முடித்துவிட்டுச் சரணத்தை வாசிக்கத் தொடங்கியபோது இளைஞர் ஒருவர் கோயில் பக்கமாக வந்தார். காலணிகளை ஓரமாக கழற்றிவைத்தவர், படிக்கட்டுக்குப் பக்கத்திலேயே நின்று முதல் சரண வாசிப்பு முழுவதையும் பொறுமையாகக் கேட்டார். பிறகு படியேறி கோயிலுக்குள் சென்று முருகனைத் தரிசித்துவிட்டு வந்தார். அதற்குள் நாகஸ்வரக்காரர் இரண்டாவது சரணத்தையும் முடித்து விட்டு மீண்டும் பல்லவியைத் தொட்டார்.
இளைஞர் கோயில் வளாகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த இரும்பு உண்டியலை நெருங்கிச் சென்று, அதில் போடுவதற் காகப் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்தார்.
அக்கணத்தில் ‘முருகா முருகா’ என மனமுருக முறையிட்டுவிட்டு நாகஸ்வர இசை நின்றது. அந்த அமைதியில் அவர் பக்கமாகத் திரும்பிப் பார்த்தார் இளைஞர். நாகஸ்வரத்தைத் தாழ்த்திவிட்டு முருகனையே பார்த்தபடி நின்றிருந்தார் அவர். இளைஞர் வேகமாகப் படியிறங்கி வந்து தன்னிடமிருந்த பத்து ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்துவிட்டு நடந்துபோனார்.
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)