மிதிவண்டி காலம்: எல்லாம் ‘அவன்’ செயல்!

மிதிவண்டி காலம்: எல்லாம் ‘அவன்’ செயல்!
Updated on
2 min read

எங்கள் கிராமத்தில் மிதி வண்டியைச் சொந்தமாக வைத்திருப்போர் மிகச் சொற்பமாக இருந்த காலக்கட்டம் அது. பெண்களும் சிறார்களும் மிதிவண்டி ஓட்டிப் பழக நம்பியிருந்த ஒரே இடம், சேதுராமன் அண்ணன் வைத்திருந்த ‘அவன் செயல்’ மிதிவண்டி நிலையம் மட்டும்தான். ‘எல்லாம் அவன் செயல்’ என்று சொல்வதைப் போல் இந்தப் பெயரை வைத்ததாகச் சொல்வார் அவர்.

நானும் சேதுவும் தட்டுக்கூடையில் கருவேல மரங்களிலிருந்து கொட்டிக் கிடந்த கருவேலங்காய்களைச் சேகரித்துக் கொண்டிருந்தோம்.

“கருவக்கா பொறுக்க என்னைக் கூப்புடாம ஓடிவந்துட்டீங்க இல்ல... எனக்கு வழி தெரியாதா?” என்று சொல்லிக்கொண்டே வீரம்மா அக்கா கருவேலங்காய்களைப் பொறுக்கி, தட்டுக்கூடையில் சேகரிக்கத் தொடங்கினார்.

“மெதுவா பொறுக்குக்கா, நாங்க பொறுக்குறதுக்கு முன்னாடி நீ வேகமா பொறுக்கினா எங்களுக்குப் பத்தாதுக்கா” என்றான் சேது.

“சரிடா தம்பி, இருக்குறதைப் பொறுக்கி, சமமா பிரிச்சுக்கலாம். ஆனா என்னோட கருவக்கா கூடைய நீதான் கொண்டுபோய் ‘அவன் செயல்’ கடை யில கொடுக்கணும்” என்றார் வீரம்மா அக்கா. நாங்களும் சம்மதித்தோம்.

‘அவன் செயல்’ வாடகை மிதிவண்டி நிலையத்தில் உட்கார்ந்திருப்பார் சேதுராமன் அண்ணன். உள் அறையில் 20 மிதிவண்டிகளுக்குக் குறையாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். தட்டுக் கூடையில் கருவேலங்காய்களைச் சுமந்தபடி நானும் சேதுவும் சென்று சேர்ந்தோம்.

கருவேலங்காய்களைக் கண்களா லேயே அளந்த அண்ணன், “சரி, உள்ள இருக்குற பெரிய மிதிவண்டியை நீ எடுத்துக்க, நடு மிதிவண்டிய சேது எடுத்துக்க. இப்போ மணி 12, ஒரு மணிக்குக் கொண்டாந்திருங்க” என்றார்.

மிதிவண்டியை வாடகைக்கு எடுப்பதோடு, மிதிவண்டி ஓட்டுவதற்கும் இங்கு கற்றுக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்துக்கு 25 பைசா கட்டணம். காசு இல்லாதவர்களுக்கு ஒரு சலுகை உண்டு. சேதுராமன் அண்ணன் வெள்ளாடுகளை வளர்த்துவந்தார். அதற்கு உணவாகக் கருவேலங்காய்களைக் கொண்டு வருபவர்கள், இலவசமாக மிதிவண்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பார் இல்லாத மிதிவண்டிகள் பெண்களுக்கானவை. அவற்றை இரவில் எடுத்து, பெண்கள் ஓட்டிப் பழகுவார்கள். இவற்றால்தான் ‘அவன் செய’லை நன்றியோடு எல்லாரும் நினைவுகூர்வார்கள்.

மிதிவண்டியை எடுத்த மகிழ்ச்சி யோடு, “அண்ணே, வீரம்மாக்காவோட கருவக்காய்க்கு ராத்திரி வண்டியை எடுத்து ஓட்டிக்கிறேன்னு சொல்லச் சொன்னாங்க” என்றவாறு மிதிவண்டி மணியை அடித்தபடி ஓட்டிக்கொண்டு போனோம்.

சற்று நேரத்தில் மிதிவண்டியோடு வேகமாக வந்து, “அண்ணே, ஒரு மணி நேரம் ஆயிருச்சா?” என்றேன். சரியான நேரத்திற்கு மிதிவண்டியைக் கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். “இன்னும் அரைமணி நேரம் இருக்குடா தம்பி, ஓட்டிட்டு வா” என்றார் அவர்.

ஒருமுறை சிராய்ப்போடு ரத்தம் வழிய வந்து நின்றான் சேது. அண்ணன் டிஞ்சரைப் பஞ்சால் எடுத்து, காயத்தில் ஒத்தி எடுத்தார். “எல்லாம் அவன் செயல், சரியாயிரும். விழுந்துதான் மிதிவண்டி ஓட்டக் கத்துக்கணும்” என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

எங்களைப் போன்றோர் எல்லாம் ‘அவன் செயல்’ மிதிவண்டி நிலையத்தில் தான் மிதிவண்டி பழகினோம். சில நேரம் மிதிவண்டி கிடைக்காது. காத்திருக்க வேண்டும். காத்திருக்கும் நேரத்தில் படிக்க ‘தினசரி’ ஒன்றை வாங்கிப் போட்டார் அண்ணன். அங்கேதான் ‘படிக்கவும்’ பழகினோம்.

கால ஓட்டத்தில் அண்ணனின் மிதிவண்டி நிலையம் செல்வாக்கை இழந்தது. அனைவரும் சொந்த மிதிவண்டி வாங்கிவிட்டனர். வேலை, வெளியூர் என்று வாழ்க்கை மாறியதில் அண்ணனின் நினைவு எனக்கு மங்கியிருந்தது. ஒருமுறை ஊருக்குப் போனபோது தடுமாறி கீழே விழுந்தேன்.

“காலைக் காட்டுங்க, டிஞ்சர் போட்டா சரியாயிரும்... எல்லாம் அவன் செயல்” என்றவாறு டிஞ்சர் பாட்டிலுடன் நின்று கொண்டிருந்தார் சேதுராமன் அண்ணன்!

- ரா.ராஜநாராயணன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in