வண்ணக் கிளிஞ்சல்கள் - 8: கரோனாவும் ஆறு பெண்களும்

வண்ணக் கிளிஞ்சல்கள் - 8: கரோனாவும் ஆறு பெண்களும்
Updated on
3 min read

மாலை நேரத்தில் நான் நடைப்பயிற்சிக்காகச் செல்லும் ஏரிக்கரைப் பாதையில் ஒரு தரைப்பாலம் உண்டு. அந்தக் காலத்தில் வட்டக்குழாய்கள் புதைக்கப்பட்டு, அவற்றின் மீது அந்தப் பாலம் கட்டப்பட்டிருந்தது. பாலத்தையொட்டி நான்கைந்து கொடுக்காப்புளி மரங்களும் இரண்டு வேப்பமரங்களும் ஒரு புங்கமரமும் இருந்தன. மாலை நேரத்தில் இதமான காற்று வீசும்.

பாலத்தின் மறுபக்கத்தில் இருக்கும் குடியிருப்பில் ஏராளமான வட இந்தியத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வசித்துவந்தன. பெரும்பாலானோர் மெட்ரோ வேலை செய்ய வந்தவர்கள். அவர்களுடைய பிள்ளைகள் அந்த மரத்தடியில் விளையாடுவார்கள்.

ஒருநாள் அந்தப் பாலத்தின் மீது ஐந்து இளம் வயதுப் பெண்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். எல்லாரும் சிவந்த உதட்டுச்சாயத்துடன் நடுநெற்றியின் உச்சியில் வட்டமான குங்குமப்பொட்டு வைத்திருந்தனர். அவர்களை வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு விதமாகத் திரும்ப வைத்து ஒரு பெண் தன் திறன்பேசியில் படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும் அந்தப் பெண், “எங்க எல்லாரையும் சேர்த்து ஒரு படம் எடுக்கறீங்களா?” என்று இந்தியில் கேட்டார். சம்மதத்துக்கு அடையாளமான புன்னகையோடு அவரிடமிருந்து திறன்பேசியை வாங்கிக்கொண்டேன். உடனே அவர் மானைப்போல துள்ளியோடி பிற பெண் களோடு சேர்ந்து அமர்ந்துகொண்டார்.

திறன்பேசியில் அந்தப் பெண் ஏற்கெனவே எடுத்துவைத்திருந்த படங்களின் மீது ஒரு கணம் பார்வையை நகர்த்தினேன். பள்ளி குரூப் போட்டோ மாதிரி இருந்தது. மறுகணம் அவர் களிடம் என்னை நோக்கித் திரும்பாமல் தமக்குள் இயல்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்குமாறு சொன்னேன். அவர்கள் நான் சொன்ன விதமாக நடந்து கொள்ள, நான் மட்டும் வெவ்வேறு கோணங்களில் நகர்ந்து ஏழெட்டுப் படங்களை எடுத்தேன். அதே வேகத்தில் ஒவ்வொரு வரையும் தனித்தனியாகச் சில படங்களையும் எடுத்துவிட்டேன்.

திறன்பேசியைத் திருப்பிக் கொடுத் ததும் அவசரமாக அந்தப் படங்களைப் பார்த்துப் பூரித்துவிட்டனர். தனியாக இருக்கும் படங்களை அனைவருமே ரசித்தனர். மலர்ந்த முகத்துடன் புன்ன கையோடு “ஷுக்ரியா சார்” என்றனர்.

அடுத்த நாள் மாலையிலும் அந்தப் பெண்களை அந்தப் பாலத்தில் பார்த் தேன். அவர்களை ஒட்டி அவர்களுடைய பிள்ளைகளும் நின்றிருந்தனர். அவர்கள் நின்றிருந்த தோற்றம் எனக்காகவே காத்திருப்பதுபோல இருந்தது. என்னைப் பார்த்ததும், “நமஸ்தே சார்” என்று ஒரே குரலில் சொன்னார்கள். நானும் நமஸ்தே சொன்னேன். பிள்ளைகளோடு சேர்ந்திருக்கும் வகையில் அன்று அவர்களுக்காகப் படமெடுத்துக் கொடுத்தேன்.

தினசரிச் சந்திப்பினாலும் உரையாடலாலும் எங்களுக்கிடையில் நல்ல நட்பு உருவானது. அனைவருமே ஜார்க்கண்ட்டைச் சேர்ந்தவர்கள். ஆருஷி, அன்வி, சுனிதா, சரிதா, மைரா, காவ்யா என்பது அவர்களுடைய பெயர்கள்.

ஒருநாள் அவர்களைப் பாலத்தில் பார்க்க முடியவில்லை. எங்காவது கடைத்தெரு பக்கம் போயிருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டே நடந்தேன். பயிற்சிப்பாதையின் எல்லையில் இருந்த ஆலமரத்தைச் சுற்றி ஏராளமான கூட்டம். எல்லாருமே வட இந்தியப் பெண்கள். அனைவரும் சிவப்புநிறப் புடவை அணிந்திருந்தனர். மரத்தை ஒட்டியிருந்த மேடையில் ஏதோ பூசை நடந்தது. “நமஸ்தே சார்” என்கிற குரல் கேட்டுத் திரும்பிய பிறகுதான் கூட்டத்தில் நின்றிருந்த சுனிதாவையும் பிறரையும் அடையாளம் கண்டுகொண்டேன்.

ஆலமரத்தின் அடிப்பாகத்தைச் சுற்றிப் பத்துப் பன்னிரண்டு பேர் சிவப்பு நூற்கண்டுடன் மிக மெதுவாக நடந்துகொண்டிருந்தனர். அடிமேல் அடிவைத்து நடந்தபடி அவர்கள் அந்த நூலை மரத்தில் சுற்றினர். ஒரு குழு சுற்றி முடிக்க கால்மணி நேரம் பிடித்தது. அவர்கள் மரத்தைத் தொட்டு வணங்கியபடி இறங்கி வந்ததும் அடுத்த குழுப் பெண்கள் நூற்கண்டுடன் மேடை மீது ஏறினர்.

அடுத்த நாள் மாலை அந்தப் பண்டிகையைப் பற்றி சுனிதாவிடம் கேட்டேன். அது ‘சாவித்திரி பூசை’ என்று சொன்னார். “நூற்றியெட்டு முறை நூல் அறுந்துவிடாதபடி ஆலமரத்தைச் சுற்றி முடித்து வழிபாடு செய்தால், கணவனுக்குத் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை” என்றார்.

ஒருநாள் மைரா தன் நான்கு வயது மகளைப் பக்கத்தில் அமரவைத்துக் கொண்டு, மண்தரையில் குச்சியால் இந்தி மொழியின் உயிரெழுத்துகளை எழுதி, ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டி கற்பித்தபடி இருந்தார்.

சிறிது தொலைவில் வரும்போதே மைராவின் ‘டீச்சர்’ கோலத்தைப் பார்த்துவிட்டேன். அதனால் அவர் என்னைப் பார்த்து, “நமஸ்தே” சொன்னபோது நான் புன்னகைத்தபடி, “நமஸ்தே டீச்சர்” என்றேன். அதைக் கேட்டு அவர் முகம் சிவந்துவிட்டது. மைராவோடு இருந்த பெண்கள் தம் கூட்டத்திலேயே மைரா மட்டுமே ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர் என்றும் மற்றவர்கள் இரண்டாவது, மூன்றாவது வகுப்போடு நின்றுவிட்டவர்கள் என்றும் சொன்னார்கள்.

“அரிச்சுவடி புத்தகம் வாங்கி வச்சிக் கிட்டு சொல்லிக் கொடுக்கலாமே?”

“இங்க விசாரிச்சிப் பார்த்தோம் சார். இந்தி அரிச்சுவடி எங்கயும் கெடைக்கலை.”

“இந்திரா நகர் பக்கத்துல விசாரிச்சா கெடைக்கும்.”

மைரா பதில் எதுவும் சொல்லாமல் என்னை மெளனமாகப் பார்த்தார். நான் உடனே புரிந்துகொண்டேன். அவர்களுக்கு இந்திரா நகர் இருக்கும் திசை தெரியாது. அதிகாலையில் வேலைக்குச் சென்று இரவு திரும்பும் அவர்கள் கணவன்மார்களுக்கு நேரம் கிடையாது.

“கவலை வேணாம். நான் இந்திரா நகர் பக்கம் போகும்போது வாங்கிவருகிறேன்.”

மைரா உடனே புன்னகையுடன், “ஷுக்ரியா சார்” என்றார்.

அடுத்த நாள் அவர்கள் என்னைப் பார்த்ததும், “அரிச்சுவடி வாங்கி வரலையா?” என்று கேட்டனர். நான் கடைப்பக்கம் செல்லவில்லை என்றும் செல்லும்போது வாங்கி வருவதாகவும் தெரிவித்தேன். இரண்டு நாள்கள் அப்படியே கடந்துவிட்டன. ஒருவிதக் குற்ற உணர்வுடன் அவர்களைக் கடந்து சென்றேன். மறுநாள் காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு இந்திரா நகருக்குச் சென்று அரிச்சுவடி வாங்கிவருவதைத்தான் முதல் வேலையாகச் செய்ய வேண்டும் என்று உறுதி செய்துகொண்டேன்.

எதிர்பாராத விதமாக அன்று இரவுதான் கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் விதமாக அரசு ஊரடங்கு விதித்தது. வாசலைத் தாண்டி வெளியே செல்லவே கூடாது என வீட்டிலிருப்பவர்கள் என்னைத் தடுத்துவிட்டனர்.

முதல் ஊரடங்கு மூன்று வார காலம் நீடித்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது ஊரடங்கையும் அறிவித்துவிட்டனர். அதற்குப் பிறகு வீட்டில் இருப்பவர்கள் இணைந்து அரசாங்கம் அறிவிக்காத ஊரடங்கை அறிவித்து, என்னை முடக்கிவிட்டனர்.

ஏறத்தாழ ஒன்பது மாதங்களுக்குப் பிறகே எனக்கு வெளியே செல்ல அனுமதி கிடைத்தது. முதல் பயணத்திலேயே இந்திரா நகருக்குச் சென்று இந்தி அரிச்சுவடி புத்தகத்தை வாங்கிக்கொண்டு திரும்பினேன்.

அன்று மாலை ஜார்க்கண்ட் பெண்களைச் சந்திக்க ஆவலுடன் பாலத்தின் பக்கம் சென்றேன். அங்கு ஒருவரும் இல்லை. அந்தப் பாதையே வெறிச்சோடிக் கிடந்தது. தரைப்பாலத்தைச் சுற்றிப் புதர் மண்டிக் கிடந்தது. நெடுநேரம் காத்திருந்து பார்த்துவிட்டுத் திரும்பினேன். அடுத்த இரண்டு நாள்களும்கூட என் ஏமாற்றம் தொடர்ந்தது.

நான்காவது நாளன்றும் அந்தப் பெண்களைப் பார்க்க முடியவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கையில் பாலத்துக்கு மறுபக்கமிருந்த குடியிருப்புக்குள் நடக்கத் தொடங்கினேன். சாலையில் ஒரு முகம்கூடத் தென்படவில்லை.

தெரு மூலையில் தென்பட்ட ஒரு பெட்டிக்கடைக்குள் நுழைந்து விசாரித்தேன்.

“விஷயம் தெரியாதா உங்களுக்கு? கரோனா சமயத்துல ஊர விட்டுப் போனவங்க யாருமே திரும்பி வரலை சார். எல்லா வீடுங்களும் காலியா கெடக்குது. நம்ம மினிஸ்டர்கூடப் போய்ப் பார்த்து, பேசிட்டு வந்திருக் காரு. ஒண்ணு ரெண்டு பேருதான் வந்திருக்காங்க. மிச்ச பேரு இனிமேதான் வரணும்.”

அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். அன்றைய நடைப்பயிற்சியில் அந்தப் பெண்களின் முகங்களும் சிறுமியரின் முகங்களும் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருந்தன. அவர்களுடைய ஓர் எளிய கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லையே என்னும் வருத்தம் ஒரு பாரமாக நெஞ்சில் அழுத்திக் கொண்டிருக்கிறது.

(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in