

டவுனுக்குப் போவதற்கு அப்போதுதான் முதல் முறை கிராமத்துக்குப் பேருந்து வந்திருந்தது. அதை வேடிக்கை பார்ப்பதற்காகவும் அதில் ஏறுவதற்காகவும் கூட்டம் நின்றிருந்தது. அவர்களில் காய், தயிர், மோர், கீரை விற்பதற்காகப் போகும் பெண்களும் ஆர்வத்துடன் பேருந்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
காளி, மாரி, பாக்கியம் ஆகிய மூன்று பேரும் சேத்திக்காரிகளாக எங்கே போனாலும் ஒன்றாகப் போவார்கள், வருவார்கள். ஒருவர் முந்தானையில் இருக்கும் வெற்றிலை பாக்கை மூன்று பேரும் பங்கு வைத்துப் போட்டுக்கொண்டு செல்வார்கள். கொண்டு போனதை முதலில் விற்பவர் ஓரிடத்தில் மற்ற இரண்டு பேருக்காகக் காத்திருப்பார். மற்ற வர்கள் வந்துசேர, மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டே நடந்து செல்வார்கள். வழியில் சேவு, முறுக்கு வாங்கித் தின்றுகொண்டே அவரவர் வீடுகளுக்குச் சென்று சேர்ந்துவிடுவார்கள்.
கிழக்கே இருக்கும் கிராமங்களுக்கு எல்லாம் மேற்கில் இருக்கும் ராசபாளையம்தான் டவுனாக இருந்தது. அதனால் துணி எடுப்பதிலிருந்து எது வாங்க வேண்டுமென்றாலும் ராசபாளையம்தான் போக வேண்டும். எங்கள் கிராமத்திலிருந்து மூன்று மைல் தூரம் நடக்க வேண்டும். தினமும் நடந்தே சென்ற இந்த மூன்று பெண்களுக்கும் இன்று பேருந்தில் போக வேண்டுமென்று ஆசை வந்துவிட்டது. நின்றுகொண்டிருந்த பேருந்தை எட்டிப் பார்த்தார்கள். ஓட்டுநரும் நடத்துநரும் அமர்ந்திருந்தனர்.
“என்ன ரெண்டுபேர்தான் இருக்காக! இந்த ரெண்டு பேரும் இம்மாந்தண்டி பஸ்ஸ ஓட்டிட்டுப் போயிருவாகளா, இல்ல மாட்டு வண்டியில் மாடுக கொட சாச்சிருமே, அப்படி பஸ்ஸ சாச்சிருவாகளா?” என்று காளி கேட்டார்.
“சே... சே... அப்படியெல்லாம் செய்ய மாட்டாக. எத்தனை பஸ்ஸ பாத்திருக்கோம்... எவ்வளவு பேர் அதுல போறாங்க... அப்படிச் சாயும்னா ஏறுவாகளா? வாங்க, நாமளும் ஏறுவோம்” என்று சொல்லிக்கொண்டே பாக்கியம் ஏற, அவர் பின்னாடியே மாரியும் காளியும் ஏறினார்கள்.
“உங்க பானைகளை எல்லாம் ஓரமா வச்சிட்டு, சீக்கிரம் ஓரணா எடுங்க” என்று சொல்லியிருக்கிறார் நடத்துநர். உடனே மூன்று பேரும் திடுக்கிட்டுப் போனார்கள். ஓரணாவை எதுக்குக் கேட்கிறார் என்று தெரியாமல் விழித்திருக்கிறார்கள்.
“ஆமாய்யா, ஓரணா எதுக்குக் கேக்கறீக?” என்று பாக்கியம் கேட்டார்.
“டிக்கெட்டுக்கும்மா. டிக்கெட் எடுத்தாதான் இந்த பஸ்ல போக முடியும்.”
“ஐயையோ கொடுமையே... ஓரணா டிக்கெட்டாம்ல... வாங்கத்தா எறங்குவோம்” என்று பாக்கியம் சொல்ல, காளியும் மாரியும் திருதிருவென்று விழித்திருக்கிறார்கள்.
“பானைகளை எடுத்துட்டு இறங்குங்கம்மா...” என்று நடத்துநர் கத்த, “இருய்யா, என்ன அவசரம்? மோர்ப் பானையும் தயிர்ப்பானையும் சிந்தாம எறக்க வேணாமா?” என்று சொல்லிக்கொண்டே மகிழ்ச்சியாக ஏறியவர்கள், கோபத்துடன் கீழே இறங்கினார்கள்.
“இங்க இருக்க ராசிவளயத்துக்குப் போவவா ஓரணா கேப்பான்? இவனெல்லாம் வெளங்குவானா? நம்ம கொடுக்கத் துட்டுத்தேன் இவனுக்குத் தங் குமா?” என்று கோபத்துடன் சொன்னார் பாக்கியம்.
“முக்காத்துட்டுக்கு குண்டு சோடா வாங்கிக் குடிச்சம்னா, வவுத்துக்குள்ள செமிக்காம கெடக்க கஞ்சியெல்லாம் செமிச்சிரும். மீதி முக்காத்துட்டுக்கு வெத்தல, பாக்கு வாங்குனா மூணு பேரும் வாய் நிறைய போடலாம். மீதி அரையணாவுக்குப் புள்ளைகளுக்குக் கோடி உப்புக்கல்லையும் பட்டாணிக்கல்லையும் வாங்கிட்டுப் போவலாம். அதுக செளும்பா தின்னுக்கிடுங்க. கூறுகெட்டத் தனமா ஓரணா கொடுத்து பஸ்ல ஏறப் பாத்தமே?’ என்று பேசிக்கொண்டே வழக்கம் போல அவரவர் பொருள்களை விற்கப் போயினர். விற்ற பிறகு வழக்கம்போல எல்லாரும் ஓரிடத்தில் சந்தித்தனர். பொருள்களை விற்ற சந்தோஷம் அவர்கள் முகத்தில் தெரிந்தது.
“இப்ப நம்மகிட்ட சொமையுமில்ல, துட்டும் சேந் திருச்சு! வாங்க, அந்த பஸ்காரன்கிட்ட போயி, அரையணா தாரோம். எங்கள ஏத்திட்டுப் போயி எங்க ஊருல விட்ருன்னு சொல்லுவோம்” என்று பாக்கியம் சொல்ல, மாரியும் காளியும் சம்மதித்தனர்.
பேருந்து நிலையம் சற்றுத் தூரத்தில் இருந்தது. இவர்கள் அவ்வளவு தூரத்துக்கு எல்லாம் சென்றதில்லை. ஆனாலும் பேருந்தில் ஏற வேண்டும் என்கிற ஆசையில் நடந்தனர்.
பேருந்து நிலையத்தில் அவர்கள் ஊருக்குச் செல்லும் பேருந்து நின்றுகொண்டிருந்தது. காலையில் பார்த்த நடத்துநரும் பேருந்து அருகிலேயே நின்றுகொண்டிருந்தார். மூன்று பேருக்கும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. வேகமாக அவரிடம் ஓடினார்கள்.
“எய்யா, ஆளுக்கு அரையணா தாரோம். எங்கள கூட்டிட்டுப் போயி எங்க ஊருல விட்டுருதயா?” என்று கேட்க, கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்த நடத்துநருக்குக் கோபம் வந்துவிட்டது.
“அங்கிட்டுப் போங்கம்மா. இது என்ன நீங்க விக்கிற கீர, மோருன்னு நெனைச்சீகளா? இனிமே பஸ் கிட்ட வந்தீக, உங்க மேலயே பஸ்ஸ ஏத்திருவேன்” என்று சொல்ல, மூன்று பேரும் அரண்டு போனார்கள். யாரும் யாருடனும் பேசாமல் ஊர் வந்து சேர்ந்தார்கள்.