

ஜப்பானில் ‘செர்ரி பிளாசம்' எனும் திருவிழா பாரம்பரியப் பெருமை கொண்டது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்கும். ரம்மிய மாகக் காட்சிதரும் இந்தச் செர்ரி மரங்களுக்குக் கீழே குடும்பம் குடும்பமாக அமர்ந்து, விருந்து உண்டு, இயற்கையை ரசிக்கும் திருவிழாவாக ஜப் பானியர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்த செர்ரி பிளாசம் திருவிழா மூலம் இயற்கையைக் கொண்டாடும் ஜப்பானியர்களைப் போல, ஆண்டுதோறும் கோடையில் காய்த்துக் குலுங்கும் மாம்பழங்களை மையமாக வைத்து ஓர் இயற்கைத் திருவிழா சென்னைக்கு அருகில் நடைபெற்றுவருகிறது.
கோடைக் காலத்தில் இயற்கை கொடுத்த வரம்தான் மாம்பழங்கள். கோடை கொடுமைதான் என்றாலும், அந்தக் காலக்கட்டத்தில் மட்டுமே கிடைக்கும் மாம்பழத் துக்காக அந்த அனலைச் சகித்துக் கொள்ளலாம். முன்பொரு காலத்தில் அதன் தனிச்சுவையை உணர்ந்த யாரோ ஒரு வரின் முதல் நாக்குதான் முக்கனிகளில் அது முதல் கனி என அறிவித்திருக்க வேண்டும்.
ஆண்டுதோறும் மாம்பழங்கள் பல்வேறு ரகங்களில் சந்தைக்கு வந்துகொண்டிருக்கின்றன. தோட்டங்களில் விளையும் மாம்பழங்களை அப்படியே பறித்துச் சுவைத்துப் பார்க்கும் அனுபவம் பெரும்பாலோனோருக்கு இல்லை.
ஒரு மாம்பழக் காட்டில் பசிகொண்ட யானையெனப் புகுந்து, மா மணக்க, மாவிலைகள் வருட, கைக்கெட்டும் தூரத்தில் ஆடும் மாம்பழங்களை வருடி, கிளைக்கு வலிக்காமல் பறித்து, புசிக்கும் தருணம் அற்புதமானது. அதை நிஜமாக்கும் வகையில் சென்னைக்கு அருகே மாம்பழத் திருவிழா நடைபெறுகிறது. புதுமையான வடிவில் அரங்கேறும் இந்தத் திருவிழா நடக்கும் இடமே 200 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் பண்ணையில்தான். இங்கு பல ரக மாம்பழங்கள் பழுத்துத் தொங்கு கின்றன. ‘ஹனு ரெட்டி ராகவா ஃபார்ம்ஸ்’ சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வில், 156 அடி நீளமுள்ள மேசையில் பல்வேறு பாரம்பரியமிக்க மாம்பழ உணவு வகைகளின் அணிவகுப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
இதில் முக்கிய அம்சமாகப் பண்ணைகளில் நடக்கும் பணிகள், பழமைமிக்க பாரம்பரிய விளையாட்டுகள், கலந்துரையாடல், கருத்தரங்கம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகின்றன. காலையில் தொடங்கி மாலை வரை நடைபெறும் இந்த நிகழ்வானது மன அழுத்தத்தைக் குறைத்து விடுகிறது.
மாம்பழம் பறிக்கும் போட்டி, மாம்பழம் உண்ணும் போட்டி, கதை சொல்லல், பறை இசை, பொம்மலாட்டம், விவசாய மரபுகளை விளக்கும் களப்பணிகள், பாரம்பரிய விவசாய முறையை விளக்குதல் ஆகியவை இந்த மாம்பழத் திருவிழாவில் அரங்கேறுகின்றன.
இவை தவிர மாட்டு வண்டி உலா, சிலம்பாட்டம், வழுக்கு மரம் ஏறுதல், பரம பதம், ஓலைத் தோரணங்கள், மண்பாண்டம் உள்ளிட்ட கைவினைப் பொருள்கள் செய்தல், சிறார்களுக்கான பாரம்பரிய விளையாட்டுகள் என மாம்பழத் திருவிழாவானது நமது பாரம்பரிய மரபுகளைக் கொண்டாடும் திருவிழாவாக நடைபெறுகிறது.
பண்ணையின் நிறுவனர் ஹனு ரெட்டி, “இந்தப் பண்டிகை மாம்பழங்களைக் கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, தலைமுறை களாகத் தொடர்ந்து வரும் நமது மரபுகளையும் கொண்டாடுவதற்காகவே நடத்துகிறோம்" என்றார்.
இந்த மாம்பழத் திருவிழாவானது சென்னையை அடுத்த மறைமலை நகருக்கும் திருப்போரூருக்கும் இடைப்பட்ட இயற்கை சூழ்ந்த பகுதியான ஒத்திவாக்கத்தில் நடைபெறுகிறது. ஜூன் 2 தொடங்கி 9, 16, 23 ஆகிய தேதிகளில் திருவிழா நடைபெற இருக்கிறது.