

அல்சூரில் உள்ள சுப்பிர மணியர் கோயில் வளாகத்தின் ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் பொழுது சாய்ந்த வேளையில் ஒரு பெரியவர் கதையும் பாடல்களும் சொல்வது வழக்கம். கேட்பவர்களின் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல், அவர் தன் போக்கில் உற்சாகமாகக் கதை சொல்வார்.
பிரார்த்தனை பலித்த கதை: ஒருநாள் அவர் சுப்பிரமணியர் கோயில் உருவானதன் பின்னணிக் கதையை விவரித்தார். அறுநூறு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்த இடத்தில் பெரிய எறும்புப்புற்று மட்டுமே இருந்தது. அந்தப் புற்றின் முன் பணிந்து மனமுருகி வணங்கிவிட்டுச் செல்கிறவர்களின் பிரார்த்தனைகள் கூடிய சீக்கிரம் பலித்துவிடும் என்கிற நம்பிக்கை அந்தக் காலத்தில் நிலவியிருந்தது.
மைசூர் அரசருடைய உறவினரில் ஒருவர் முடக்குவாதத்தால் கால்கள் செயல்படாமல் முடங்கிவிட்ட வருத்தத்தில் அவர் இருந்தார். அல்சூரில் இருந்த புற்றின் மகத்துவத்தைக் கேள்விப்பட்டதும் புற்றைத் தேடிவந்தார். நெடுஞ்சாண்கிடையாகப் புற்றின் முன்னால் விழுந்து உறவினரின் கால்முடக்கத்தை நீக்கி நடமாடவைக்கும்படி வேண்டிக்கொண்டார்.
மைசூருக்குத் திரும்பிச் சென்ற சில நாள்களிலேயே அரசரின் உறவினர் கால் முடக்கம் நீங்கி நடமாடத் தொடங்கிவிட்டார். மகிழ்ச்சியடைந்த அரசர் தன் நன்றியின் வெளிப்பாடாக, புற்று இருந்த இடத்தில் பெரிய சுப்பிரமணியர் கோயிலைக் கட்டியெழுப்பினார்.
அன்று புகழ்பெற்று விளங்கிய அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி கோயிலில் அமைந்திருக்கும் கருவறையைப் போலவே அல்சூர் சுப்பிரமணியர் கோயிலின் கருவறையும் அமைக்கப்பட்டது. அந்தக் கோயிலைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் முதலில் அந்தக் கதாகாலட்சேபம் நிகழ்த்திய பெரியவரின் முகம் நினைவுக்கு வரும். பிறகு அவர் சொன்ன கதை நினைவுக்கு வரும். புற்றுக்கு முன்னால் கைகுவித்து வேண்டிக்கொள்ளும் அரசரின் சித்திரமும் எழுந்து வரும்.
கோயில் வாசலில் வண்ண மயில்: ஒருநாள் மனத்திலெழுந்த அரசரின் சித்திரத்தில் மூழ்கியபடி நடந்துகொண்டிருந்த போது, கோயில் வாசலில் ஒரு பெரிய மயிலின் சித்திரத்தைப் பார்த்துவிட்டு நின்றேன். சிமென்ட் தரையில் வண்ணக் கட்டிகளால் ஒருவர் குனிந்த தலை நிமிராமல் மிகப்பெரிய அளவில் சித்திரம் தீட்டிக்கொண்டிருந்தார்.
அவர் கைகள் பரபரவென இயங்கின. எந்தக் கணத்திலும் எழுந்து தோகையை விரித்தபடி நடக்கக்கூடும் என நினைக்கவைக்கிற அளவுக்கு அந்தச் சித்திரம் உயிர்ப்புடன் உருவாகியிருந்தது. நீலக்கழுத்து, கவர்ந்திழுக் கும் கண்கள், அழகான கொண்டை, பச்சைப்பசேலென விரிந்த தோகை, நீலப்புள்ளி ஒளிரும் பச்சைவட்டக் கண்கள். படிப்படியாக வண்ண மயில் தன் முழு உருவத்தை அடைந்தது.
வண்ணத்தூள் படிந்த கைகளை ஒரு துணியால் அழுத்தித் துடைத்துக்கொண்டே நகர்ந்து வந்த ஓவியரைப் பார்த்தேன். கைகளை ஊன்றி ஊன்றி, அடி அடியாக இடுப்பை நகர்த்தி பக்கத்தில் இருந்த வேப்பமரம் வரைக்கும் சென்றார் அவர். அவருக்கு ஒரு கால் மட்டுமே இருந்தது. அடுத்த கால் முட்டி வரைக்கும்தான் இருந்தது. அந்தக் காலில் மட்டும் பேண்ட்டைத் தொடை வரைக்கும் சுருட்டி மடித்துவிட்டிருந்தார். அவருடைய கைப்பெட்டியும் ஊன்றி நடக்க உதவும் நீளமான அக்குள்தாங்கித் தடியும் அந்த மரத்தடியில் இருந்தன.
அவர் கண்களில் எதையோ தொலைத்துவிட்ட சோகம் தெரிந்தது. கன்னங்கள் ஒட்டியிருந்தன. தாடியும் தலைமுடியும் முகத்தையே மூடியிருந்தன. அவர் கண்கள் யாரையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. மயில் சித்திரத்தைப் பார்த்தவர்கள் சில்லறைகளையும் நோட்டுகளையும் மயிலின் காலுக்கடியில் வைத்துவிட்டு நகர்ந்தார்கள். “அம்மா, இங்க பாருங்க. மயிலு அழகா இருக்குது” என்று ஒரு சிறுமி முகம் மலரக் கூவும் சத்தம் கேட்டது. அவளுடைய பெற்றோரை அந்தக் குரல் நிறுத்திவிட்டது.
சிறுமியின் அம்மா ஒரு ரூபாய் நோட்டைக் கொடுத்து, மயிலின் காலடியில் வைத்துவிட்டு வருமாறு சொல்லி அனுப்பினார். அந்தச் சிறுமியும் அந்த வேலையை மகிழ்ச்சியோடு செய்தாள். பிறகு தானாகவே பக்கத்தில் அமர்ந்திருந்த சித்திரக்காரரின் பக்கம் திரும்பி, “மயில் ரொம்ப அழகா இருக்குது அங்கிள்” என்று சொல்லிவிட்டு ஓடினாள்.
தொடரும் உரையாடல்: இன்னும் ஒரு மணி நேரத்தில் கோயிலைச் சாத்திவிடுவார்கள். அதற்கப்புறம் பகலுணவுக்கு ஏதேனும் கடையைத் தேடி அவர் செல்ல வேண்டியிருக்கும். இந்தக் காலோடு அவர் எந்தக் கடைக்குச் சென்று, எப்படிச் சாப்பிடுவாரோ என்று தோன்றியது. அதனால் ஓட்டலிலிருந்து ஒரு பார்சல் சாப்பாடு வாங்கிவந்து அவரிடம் கொடுத்தேன். அவர் என்ன என்று பார்வையாலே கேட்டார்.
“சாப்பாடுதான், வாங்கிக்குங்க” என்றபடி பார்சல் பையை நீட்டினேன். அவர் அமைதியாகப் பெற்றுக்கொண்டார். “உங்க மயில் என்லார்ஜ் செஞ்ச படம் மாதிரி ரொம்ப அழகா இருக்குது. இதையெல்லாம் எப்படிப் பயிற்சி செஞ்சீங்க?” என்று ஓர் உரையாடலைத் தொடங்கினேன். அப்போதும் அவர் ஒரு புன்சிரிப்பைக் கடந்து பேசுவதற்குத் தயங்குகிறவராக இருந்தார். நான் விடவில்லை.
கைகூடாத காதல்: “வாலாஜா பக்கம் எனக்கு. படம் வரையறதுன்னா புடிக்கும். மெட்ராஸ், கும்பகோணம் பக்கம் போனா காலேஜ்ல சேர்ந்து பெரிய ஆர்ட்டிஸ்டாகலாம்னு சொன்னாங்க. ஆனா வீட்டுல வசதி இல்லை. குடும்பத்தோடு கூடமாட வேலை செஞ்சிட்டு நிம்மதியா இருந்தா போதும்னு ஊரோடயே இருந்துட்டேன்.” “நல்ல முடிவுதான். ஆனா அதுக்குப் பிறகு வாலாஜாவை விட்டுட்டு இந்த ஊருக்கு எப்படி வந்தீங்க?” அவர் ஒருகணம் என்னை நிமிர்ந்து பார்த்துப் பெருமூச்சு விட்டார்.
“எல்லாம் என் தலையெழுத்து சார். ஊருல நானும் ஒரு பொண்ணும் உயிருக்குயிரா பழகிட்டிருந்தோம். மயில் மாதிரி அழகா இருப்பா. ஆனா வேற கூட்டத்துப் பொண்ணு. நமக்கு எட்டாத உயரம்” என்று சொல்லி நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். “அதுக்கப்புறம்?” என்கிற என் கேள்வி அவரை மேலும் பேச வைத்தது.
“ஆசைப்பட்ட பிறகு விடமுடியலை. ஆனா அவுங்க ஆளுங்களுக்கு விஷயம் எப்படியோ தெரிஞ்சிடுச்சி. என்னை வீடு புகுந்து அடிச்சிட்டாங்க. அப்பவும் எங்களால மனச மாத்திக்க முடியல. ரெண்டு, மூணு தரம் யாருக்கும் தெரியாம பார்த்துப் பேசிட்டி ருந்தோம். அதை யாரோ மோப்பம் புடிச்சி அவுங்க வீட்டுல பத்த வச்சிட்டாங்க. மறுபடியும் என்ன அடிஅடினு அடிச்சி குத்துயிரும் குலையுயிருமா ஆக்கிட்டுப் போயிட்டாங்க.”
“ஐயையோ, அப்புறம்?” “காலுக்குள்ள நரம்பு துண்டாகி கால் வீங்கிடுச்சி. ஆஸ்பத்திரியில கால எடுத்துட்டாங்க. அந்தப் பொண்ணுக்கு அவசரம் அவசரமா கல்யாணத்த செஞ்சி ஊர விட்டு அனுப்பிட்டாங்க. நான்தான் உடைஞ்ச காலோட முடங்கிட்டேன்.
ஊருக்குள்ள இருக்கவே புடிக்கலை. கொஞ்ச காலம் எங்கனா சுத்திட்டு வரேன்னு ஊட்டுல சொல்லிட்டு இந்தப் பக்கமா வந்துட்டேன். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் இந்தப் படம் வரையறது மட்டும்தான். கோயில் கண்ட இடத்துல இப்படி வரைஞ்சி வைப்பேன். கெடைக்கறத வச்சி பொழுதை ஓட்டிடுவேன். ஒத்தக் கால வச்சிக்கிட்டு என்னால் வேற எப்படிப் பொழைக்க முடியும்?”
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)
- writerpaavannan2015@gmail.com