

ஒருநாள் வழக்கம்போல நானும் கூட்டாளிகளும் கதை பேசிக்கொண்டே பள்ளிக்கு நடந்துகொண்டிருந்தோம். எங்கள் ஊரில் அப்போது ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படத்தைத் திரையிட்டிருந்தார்கள். ஒரு வாரத்துக்கு முன்பாகவே அதைப் பார்த்துவிட்ட நண்ப னொருவன் அந்தப் படத்தின் கதையை உற்சாகத்தோடு சொன்னபடி வந்தான்.
போலீஸ் ஸ்டேஷனைக் கடந்து பிரதான சாலையில் நடக்கத் தொடங்கியபோது, திரைப்பட விளம்பர வண்டி வந்தது. அந்த வண்டிக்குள் உட்கார்ந்திருந்தவர் திரைப்பட நோட்டீஸ்களை அள்ளி அள்ளி வீசினார். ஏதோ ஒரு வேகத்தில் அந்த நோட்டீஸ்களை எடுக்க நாங்கள் ஓடினோம். ஒரு கணம் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டேன்.
வண்டி போன பிறகு கூட்டாளிகள்தான் என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். முழங்கையில் கடுமையான வலி. உயர்த்தவோ திருப்பவோ முடியவில்லை. என் புத்தகப்பையை ஒருவன் எடுத்துக்கொள்ள, பிறர் கைத்தாங்கலாக என்னை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
என் கோலத்தைப் பார்த்ததும் பதற்றத்தோடு ஓடிவந்த அம்மா, “எனக்கு இருக்கற கொடுமை லாம் போதாதுன்னு இது வேறயா? படிக்கிற புள்ள செய்யற வேலையா இது?” என்று அழுதார்.
“உள்ள எலும்பு முறிஞ்சிருக்குமோ என்னமோ? ஓட்டேரிப்பாளையத்து வைத்தியரு கிட்ட போனா ஒட்ட வச்சி சரி பண்ணிடுவாரு. அழாத அண்ணி” என்று சொன்னார் எதிர்வீட்டுச் சித்தப்பா. அவரே தன் சைக்கிளில் என்னை உட்காரவைத்துக்கொண்டு ஓட்டேரிப் பாளையத்துக்கு அழைத்துச் சென்றார். அந்த ஊர் எங்கள் ஊரிலிருந்து ஐந்தாறு மைல் தொலைவில் இருந்தது.
மருத்துவம்: நல்ல வேளையாக, நாங்கள் போன நேரத்தில் வைத்தியர் இருந்தார். ஆனால், எங்களுக்கு முன்னால் ஏராளமானோர் காத்திருந்தனர். ஏறத்தாழ ஒரு மணி அளவில்தான் எங்களால் அவரைப் பார்க்க முடிந்தது. அவர் என் கையைப் பிடித்துத் தொட்டுத் தொட்டுப் பார்த்தார். “உள்ள ஒரு குருத்தெலும்பு ஒடைஞ்சிருக்குது. இப்ப ஒரு கட்டுப் போட்டு விடறேன்.
வாரத்துக்கு ஒரு தரம் புதுக் கட்டுப் போடணும். கவலைப்பட வேணாம். நாலஞ்சி கட்டுக்கு அப்புறம் சரியாயிடும்” என்றார். மெல்ல மெல்ல உருவி நீவிவிட்டு, பச்சிலை மருந்து தடவி, வாழை மட்டை வைத்துக் கட்டினார். கழுத்தைச் சுற்றிய கயிற்றில் கையை வைத்து ஒரு தொட்டிலைப்போலத் தொங்கும்படிச் செய்தார்.
பசியும் தாகமும்: வைத்தியர் வீட்டிலிருந்து கிளம்பும்போதே மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. நல்ல பசி. “இருக்கற பணத்தையெல்லாம் வைத்தியருக்குக் கொடுத்துட்டேன். வீட்டுல போய் சாப்டுக்கலாம். சித்த நேரம் பொறுத்துக்கடா” என்றார் சித்தப்பா.
“சரி சித்தப்பா” என்று தலையாட்டினேன்.
நான் உட்கார்ந்ததை உறுதி செய்த பிறகு சித்தப்பா சைக்கிளை மிதிக்கத் தொடங்கினார். வெயில் பட்டு வியர்வை வழிந்தது. தாகத்தில் நாக்கு வறண்டுவிட்டது. எங்காவது தண்ணீர் கிடைத்தால் குடிக்கவேண்டும் போல இருந்தது.
அரச மரமும் ஆயாவும்:
விழுப்புரம் சாலையைத் தொட்ட பிறகு நிழலுக்காக ஓர் அரச மரத்தடியில் நின்றோம். அங்கே சாக்கை விரித்து அதன் மீது ஓர் ஆயா கால்களை நீட்டியபடி உட்கார்ந்திருந்தார். அவருக்கு எதிரில் பனம்பழம் அளவுக்கு உருட்டப்பட்ட வெல்ல உருண்டைகளைக் கொண்ட ஒரு கூடை இருந்தது.
பழுப்பு நிறத்தில் இருந்த வெல்லத்தைப் பார்த்ததுமே நாக்கில் எச்சில் ஊறியது. அடங்கியிருந்த பசி தீப்பற்றி எரியத் தொடங்கியது. நான் ஏக்கத்துடன் சித்தப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு வேட்டிநுனியை உயர்த்தி முகத்திலிருந்த வியர்வையைத் துடைத்தார்.
ஒவ்வொரு நிமிடமும் ஒரு மணி நேரம் போலச் சென்றது. திடீரென சைக்கிள் ஸ்டேண்டை விலக்கிய சித்தப்பா, “சித்த நேரம் இங்கயே உக்காந்திருடா. பக்கத்தூருல தெரிஞ்சவரு ஒருத்தரு இருக்காரு. பார்த்துட்டுச் செலவுக்குப் பணம் வாங்கியாறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
மரத்தடியிலேயே பலகைபோல இருந்த ஒரு பெரிய வேர் மீது உட்கார்ந்துகொண்டேன். பார்வையை எந்தப் பக்கம் திருப்பினாலும் அது கடைசியில் வெல்லத்தின் பக்கமாகவே போய் நின்றது. அந்த ஆயா என்னிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டார். நானும் பதில் சொன்னேன்.
பிள்ளைகளின் வருகை: என் வயதையொத்த ஏழெட்டுச் சிறுவர்கள் கோலியனூர் பக்கத்திலிருந்து நடந்து வருவதைப் பார்த்தேன். அவர்களுடைய சீருடையைப் பார்த்ததுமே பள்ளிக்கூடப் பிள்ளைகள் என்பது புரிந்துவிட்டது. ஒரு கைக்குட்டையைத் தலை மீது போர்த்தியபடி அவர்களுக்குப் பின்னால் இளைஞர் ஒருவர் வந்தார். அவர்களுடைய ஆசிரியராக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
அவர்களும் அரச மரத்தடிக்கு வந்து நின்றனர். நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டனர். அவர்கள் கண்கள் தன்னிச்சையாக வெல்லத்தின் மீது திரும்பியதைப் பார்த்தேன்.
“என்ன வாத்தியாரே, இந்த வேகாத வெயில்ல பசங்கள எங்க அழச்சிட்டுப் போய்வர?” என்று கேட்டார் ஆயா. ‘ஸ்’ என்று அலுத்துக்கொண்ட ஆசிரியர், “கோலியனூர் ஸ்கூல்ல ஒரு விழா ஆயா. அதுக்குப் போயிட்டு வர்றோம்” என்றார்.
“அம்மாந் தூரத்திலேர்ந்து நடந்தேவா வர்றீங்க? ஏதாச்சும் பஸ்ல வந்திருக்கலாமில்ல. பாவம், பச்சைப் புள்ளங்க.”
ஆசிரியர் மீண்டும் கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்தார். “பஸ்ல வரணும்னா காசு வேணுமே? பசங்க கிட்டயும் காசு இல்லை. எங்கிட்டயும் இல்ல. என்ன செய்யறது, சொல்லு?”
“வயித்துக்காச்சும் ஏதாச்சும் தின்னுச்சிங் களா, இல்லயா?”
இல்லை என்பதற்கு அடையாளமாக, “த்ச்” என்று தலையசைத்தபடி எனக்குப் பக்கத்தில் இன்னொரு வேரின் மீது உட்கார்ந்தார் அவர். பிள்ளைகள் அனைவருடைய விழிகளும் அந்த வெல்லத்தின் மீதே பதிந்திருந்தன.
வெல்லத்தின் இனிமை: கூடையின் மீதிருந்த துணியை விலக்கி ஒரு வெல்ல உருண்டையை எடுத்தார் ஆயா. அந்தத் துணியின் மீதே அதை வைத்து ஒரு சின்ன கத்தியால் சின்ன சின்ன துண்டுகள் உதிரும்படி செதுக்கினார். பிறகு, “இங்க வாங்கடா பசங்களா, ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்குங்க” என்று அழைத்தார். அடுத்த கணமே பிள்ளைகள் அவரைச் சூழ்ந்து நின்று ஆளுக்கு இரண்டு துண்டுகள் எடுத்து வாய்க்குள் வைத்துச் சுவைத்தனர்.
அந்த ஆசிரியர் உடனே பதற்றத்தோடு எழுந்து, “ஐயோ, ஆயா, உங்ககிட்ட குடுக்க எங்க யாருகிட்டயும் காசு இல்லை” என்றார்.
“பணம் எதுவும் வேணாம் தம்பி. பச்சைப்புள்ளைங்க பசியோடு இருக்கக் கூடாது. எடுத்துக்கிடட்டும். நீங்களும் வந்து ஒரு துண்டு எடுத்துக்கிடுங்க” என்றார் ஆயா.
அப்போதுதான் பாட்டியின் பார்வை என் மீது படிந்தது. நான் வைத்த கண்ணை எடுக்காமல் வெல்ல உருண்டைகளையே பார்த்துக்கொண்டிருப்பதை அவர் கவனித்து விட்டார்.
“நீயும் வா தம்பி. வந்து எடுத்துக்க” என்று கைநீட்டி என்னை அழைத்தார் ஆயா. நான் சற்றே கூச்சத்துடன், “எங்கிட்டயும் காசு இல்லை ஆயா” என்றேன். “பரவாயில்லை வா. வந்து எடுத்துக்க” என்று சிரித்துக்கொண்டே அழைத்தார் அவர்.
அந்த அழைப்பிற்காகவே காத்திருந்ததுபோல நான் வேகமாக எழுந்து அவருக்கு அருகில் சென்று ஒற்றைக்கையை நீட்டி வெல்லத் துண்டுகளை வாங்கிக்கொண்டேன்.
ஒரு துண்டை வாய்க்குள் வைத்துச் சுவைத் தேன். அந்த இனிய சாறு நாவில் பரவத் தொடங்கியதும் உடல் முழுதும் ஒரு புதிய தெம்பு பரவுவதைப்போல இருந்தது.
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)
- writerpaavannan2015@gmail