

அஞ்சல், தபால், கடிதாசி, லிகிதம், திருமுகம், மடல் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் கடிதம் வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த காலம் ஒன்று உண்டு.
மன்னர்கள் விட்ட தூதுகள், காந்தியைச் செதுக்கிய டால்ஸ்டாய் கடிதங்கள், மகளுக்குத் தந்தை எழுதிய நேருவின் கடி தங்கள், தம்பிக்கு எழுதிய அண்ணாவின் கடிதங்கள், உடன்பிறப்புகளுக்குக் கலைஞர் எழுதிய கடிதங்கள் எனப் பலவகைக் கடிதங்கள் உண்டு என்றாலும் ஒருவர் மனதை இன்னொருவர் அறிய எழுதப்பட்டகடிதங்கள்தான் எவ்வளவு இன்பமானவை!
‘நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம், அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்’ எனத் தன் எண்ணத்தை எல்லாம் கொட்டிக் காதல் கடிதங்கள் எழுதப்பட்டன. ஒருதலைக் காதலைச் சொல்வதற்கான ஒரே ஊடகமாக இருந்தது கடிதம்தான்.
பெயர் போட்டு எழுதிய கடிதம், பெயர் போடாமல் எழுதிய ‘மொட்டைக் கடிதம்’, காதலியின் அண்ணனிடம் அடி வாங்கிக் கொடுத்த கடிதம், தலைமை ஆசிரியரின் கையில் சிக்கியதால் காதலைச் சின்னாபின்னமாக்கிய கடிதம் என ஒருதலைக் காதலைச் சொன்ன கடிதங்கள் உண்டு.
காதலர்கள் இரண்டு பேரும் ஒருவருக்கு இன்னொருவர் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் உண்டு. வீட்டுக்குக் கடிதம் எழுத முடியாமல், பொது நண்பர்கள் மூலம் பரிமாறப்பட்டகடிதங்களும் உண்டு.
‘நலம் நலமறிய ஆவல்’ என்று தொடங் கிய குடும்ப உறவுகளுக்கு இடையிலான கடிதம், ஓராயிரம் தகவல்களைப் பரிமாறின. ஆண்கள் எழுதிய கடிதங்கள் நறுக்குத் தெறித்தாற்போல் நான்கு வரிகள்தான் பெரும்பாலும் இருந்தன. ஆனால், பெண்களின் கடிதங்கள் அந்த ஊரின் வாழ்க்கையையே கண் முன் நிறுத்துவனவாக இருந்தன. வீட்டில் இருக்கும் அனைவரின் இன்ப, துன்பங்கள் முதல் ஆடு, மாடு கன்று போட்டது, அடை வைத்த கோழி எத்தனை குஞ்சு பொரித்தது என்பது வரை அதில் இருக்கும்.
மீதி இருக்கும் இடத்தில், பக்கத்து வீட்டு அக்கா பிரசவத்துக்கு வீடு வந்திருப்பது, அடுத்த வீட்டு அக்கா மனத்தாங்கலுடன் கணவன் வீட்டிலிருந்து வந்திருப்பது, மேல் வீட்டுப் பாட்டி இறந்தது, கீழ்வீட்டு அக்காவுக்குக் குழந்தை பிறந்திருப்பது, இன்னமும் இடமிருந்தால் ஊரின் மழை, வெயில் நிலவரம் என அனைத்தும் அதில் அடங்கியிருக்கும்.
எழுத, வாசிக்கச் சிரமப்பட்ட பாட்டிகளுக் கென்றே கடிதம் எழுதிக் கொடுக்க என்று ஓர் இளம்பெண்ணை ஒவ்வொரு தெருவிலும் நேர்ந்துவிட்டிருப்பார்கள். கடிதம் வந்தால், அவர் பள்ளியிலிருந்து வருவதை ஆவலாக எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள். அது ஓர் இதமான அனுபவம். எங்கள் தெருவில் நேர்ந்து விடப்பட்ட ஆள்!
ஒத்த ரசனையுள்ள சகோதரிகளாக இருந்தால் வாசித்த கதைகள், பார்த்த திரைப்படங்கள், வெளியான புதிய பாடல்கள் என அவர்களின் கடிதம் வேறுவிதமாகப் போகும். ரமணிசந்திரன் தன் தங்கைக்கு எழுதிய கடிதங்களைப் பார்த்துதான் பத்திரிகைத் துறையிலிருந்த தங்கையின் கணவர், கதைகள் எழுதச் சொல்ல ‘ரமணிசந்திரன்’ என்கிற எழுத்தாளர் உருவாகியிருக்கிறார்.
நட்பு என எடுத்துக்கொண்டாலும், பெண்கள் தங்கள் தோழிகளுக்கு எழுதிய அளவுக்கு ஆண்கள் தங்கள் தோழர்களுக்கு எழுதியதாகத் தோன்றவில்லை. பொங்கலுக் கும் கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கம் இருந்தது. தீபாவளிக்கு வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கம் எல்லாம் எண்பதுகளுக்குப் பின்தான் எங்கள் ஊரில் அறிமுகமானது.
அஞ்சல் தலை ஒட்டாமல் அனுப்பினால், பெற்றுக் கொள்பவர் இரட்டிப்பாகப் பணம் கொடுக்க வேண்டும் என்று தெரியாமல், அடுத்த வீட்டில் இருக்கும் மாமாவுக்கு ஆர்வக் கோளாறாக அஞ்சல் தலை ஒட்டாமல் வாழ்த்து அனுப்பி, அடிவாங்கியவர்கள் உண்டு. எத்தனை வாழ்த்து அட்டைகளை அனுப்புகிறோம், பெறுகிறோம் எனக் கணக் கிடுவதில் குழந்தைகளுக்குத்தான் என்ன ஒரு மகிழ்ச்சி!
சென்னை என்றால் இத்தனை நாள்களில் பதில் வரும், மும்பை, வெளிநாடு என்றால் இத்தனை நாள்களில் பதில் வரும் என ஒரு கணக்கு உண்டு. வெளிநாட்டில் உறவினர் இருந்தால் கடிதம் கொடுத்துவிடும் வழக்கம் இருந்தது. செய்தி விரைவாகச் சென்றடைய வேண்டும்.
இங்கு கொடுத்துவிட்டால், அவர் அங்கு இறங்கியதுமே தபாலில் சேர்த்துவிடுவார். பத்து, பதினைந்து நாள்களில் செல்லும் தகவல் நான்கு நாள்களில் போய்ச் சேர்ந்துவிடும். வெளி நாட்டிலிருந்து வருபவர்களும் இவ்வாறு கடிதங்கள் கொண்டு வருவார்கள். அஞ்சல் அட்டை, இன்லேண்ட், கவர், ஏர் மெயில் எனப் பலவகை இருந்தாலும், குடும்பங்களுக்குள் இன்லேண்ட்தான் பெரும் புழக்கத்திலிருந்தது.
தபால்காரரின் வரவை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பார்கள். சிலர் ஒன்பது மணிக்குத் தபால் நிலையம் போய்க்கூடக் காத்துக் கிடப்பார்கள்.
‘ஒருவர் மனதை இன்னொருவர் அறிய உதவும் சேவை இது’ என ‘கௌரி கல்யாணம்’ திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. அப்படித்தான் அனைத்துத் தபால்காரர்களும் பார்க்கப்பட்டார்கள். படிக்கத் தெரியாதவர்களுக்கு வாசித்துக் கொடுக்கும் வழக்கமும் அவர்களிடம் இருந்தது.
கடிதம் இருக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு தெருவிலும் குறிப்பிட்ட இடம் வரும்போது தபால்காரர் மணி அடிப்பார். அவரின் வருகையை அறிவிக்கும் அந்த சைக்கிள் மணியோசைக்குத்தான் எவ்வளவு வரவேற்பு! வீட்டினுள் இருந்து அனைவரும் வாசல் நோக்கிப் புறப்படுவர். தபால்காரர் உள்ளே இருந்து வந்து கொண்டிருப்பவர்களைத் தன் சைக்கிளிலிருந்தவாறே பார்த்துச் சிரித்துக் கொண்டே , “நாளை தருகிறேன்” என்பார்.
‘போஸ்ட்’, ‘அம்மா’ என ஒவ்வொரு தபால்காரரும் தனக்கென ஒரு பாணியை வைத்திருப்பார். லாவகமாக வீசிச் செல்வார். மணியார்டர் என்றால் மட்டும் நின்று கொடுப்பார். இவ்வாறு ஆர்வமாகக் காத்துக்கிடந்து தபால்காரரின் வரவை எதிர்பார்த்த காலம் போய், இன்று அவர் வந்தால் ‘என்ன பில் வந்து இருக்கிறதோ?’ என்றுதான் சிந்தனை வருகிறது.