கீழடி உலா: நம் வேர்களைத் தேடி...

கீழடி உலா: நம் வேர்களைத் தேடி...
Updated on
2 min read

‘கீழடி'க்குச் செல்ல வேண்டும் என்கிற நீண்ட நாள் விருப்பம் சமீபத்தில் நிறைவேறியது. ஈரோட்டிலிருந்து புறப்பட்டு இரவு மதுரையை அடைந்தோம். கீழ மாசி வீதியில் முன்கூட்டியே பதிவு செய்தி ருந்த அறைக்குச் சென்றுவிட்டு, தூங்கா நகரத்தின் வீதிகளில் உலா வந்தோம்.

மறுநாள் கீழடிக்குப் புறப்பட்டோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கீழடி பதினைந்து கிலோ மீட்டர். அரைமணி நேரத்தில் சென்றடைந்தோம்.

அகழ்வாராய்ச்சி நடைபெற்ற கீழடிக் கும் கொந்தகைக்கும் சென்றோம். கீழடியி லிருந்து கொந்தகை 2 கி‌‌.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

கொந்தகையில் அகழ்வாராய்ச்சி செய்த இடங்களுக்கு அருகில், நீர் பெருமளவு சூழ்ந்து விட்டதால் மோட்டார் வைத்து நீரை வெளியே எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்னால் நகர நாகரிகத்தில் வைகை ஆற்றின் கரையில் மக்கள் வாழ்ந்ததற்கான அடை யாளத்தைப் பார்ப்பதற்குத் தினந்தோறும் மக்கள் வந்துகொண்டே இருக்கின்றனர். விடுமுறை நாள்களில் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட பொருள்களை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி வைத்துள்ளது தமிழக அரசு.

கடந்த பத்து ஆண்டுகளில் ஏழு கட்டங்களாகக் கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் இருக்கின்றன. அவை தவிர, தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் சுமார் மூன்றரை லட்சத்து எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் வாழ்ந்த இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் முதல் தற்போது கண்டறியப்பட்ட பொருள்கள் வரை காட்சிப்படுத்தியுள்ளனர்.

அருங்காட்சியகத்தில் நுழைந்தவுடன் 50 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய குளிர்சாதன வசதியுடன் கூடிய திரையரங்கு உள்ளது. இங்கே தொல்லியல் துறையின் ஆய்வுகள் குறித்து 15 நிமிடக் காணொளி திரையிடப்படுகிறது.

அது நம் தமிழ்ச் சமூகம் எவ்வளவு பழமையும் நாகரிகமும் கொண்டது என்பதைக் காட்டுகிறது. இது தவிர, அரைமணி நேரத்துக்கு 3டி தொழில்நுட்பத்தில் பழங்கால நகர நாகரிகத்தைப் பார்க்க வைக்கிறார்கள்.

நம் தமிழ்ச் சமூகத்திற்கு வளமான சங்க இலக்கியங்கள் இருக்கின்றன. ஆனால், அதை நிரூபிக்கும் தொல்லியல் ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை‌. காரணம், போதுமான தொல்லியல் ஆய்வுகள் தமிழகத்தில் இதுவரை நடை பெறவில்லை. ஆனால், முதல் முறையாக கீழடியில் பிரமிக்கத்தக்க வகையில் சங்ககாலச் சமூகம் பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன.

குறிப்பாக, நகர நாகரிகத்தின் முழுமையான அடையாளமாக ஹரப்பா, மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ளதைப் போல விரிவான கட்டிட அமைப்புகள் கீழடியில் கிடைத்துள்ளன. வீட்டுச் சுவர்கள், தரைத்தளம், வடிகால்கள், தொட்டிகள், கிணறுகள், இரண்டு அடுக்குச் சுவர்கள் என ஒரு நகர அமைப்பு முழுமையாகக் கிடைத்துள்ளது.

பழைய ஆய்வுகளின்படி நம் தமிழகம் பொ.ஆ.மு (கி.மு.) 3ஆம் நூற்றாண்டில் எழுத்தறிவு பெற்றிருந்தது. இப்போது கீழடி ஆய்வுகளின்படி பொ.ஆ.மு‌. 6ஆம் நூற் றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றிருந்தது என்கிற உண்மை தெரியவந்திருக்கிறது.

நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப் பிரம் மாண்டமான முறையில் பல அரங்குகளில் பொருள்களைக் காட்சிப்படுத்தி வைத் துள்ளனர்.

நம் தமிழினத்தின் தொன்மையை, வரலாற்றுக் காலக் கணக்கை உறுதியான முறையில் நிர்ணயிக்கும் ஆவணமாக கீழடியில் உள்ள ஆதாரங்கள் இருக்கப் போகின்றன.

நான்கு மணி நேரம் அங்கிருந்ததே தெரியவில்லை. நிறைவான பயணத்தை மேற்கொண்ட மகிழ்ச்சியில் மதுரை நோக்கிப் புறப்பட்டோம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in