

ஒருமுறை மலேரியா காய்ச்சலின் விளைவாக வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, என்னைச் சந்திப்பதற்காக அலுவலக நண்பர்கள் வந்தனர்.
நாராக மெலிந்துவிட்ட என் தோற்றத்தைப் பார்த்ததும் எல்லாருமே திகைத்துவிட்டனர். “ஹம்பி தூண் மாதிரி இருக்கற ஆளு இப்படி எலும்புத் துண்டு மாதிரி சுருங்கிட்டியே” என்று ஆற்றாமையுடன் சொன்னார் ஒருவர்.
ஹம்பியைப் பற்றிய பேச்சு வந்ததால் அதைப் பற்றிய நினைவு களோடு எங்கள் உரையாடல் தொடர்ந்தது. ஹம்பிக்கு அருகிலேயே தங்கி மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தவன் என்பதால் அவர்களுடைய கேள்விகளுக்கெல்லாம் நான் கூடுதலாக விளக்கங்களைக் கொடுக்க வேண்டியிருந்தது.
என் படுக்கைக்குப் பக்கத்திலேயே புத்தக அலமாரியில் பழைய ஆல்பங் கள் இருந்தன. அவற்றிலிருந்து ஹம்பியில் நான் பல்வேறு தருணங் களில் எடுத்த படங்களின் தொகுப்பைக் கொடுத்து, ஒவ்வொரு படமாக விளக்கத் தொடங்கினேன்.
அந்தத் தொகுப்பில் நான்கைந்து ஆள் உயரம் கொண்ட இரண்டு ராட்சசப் பாறைகள் ஒன்றோடு இன்னொன்று முட்டிக்கொண்ட நிலையில் காணப்பட்ட படம் அனைவரையும் கவர்ந்தது.
“இது என்ன சார்? மல்யுத்த வீரர்கள் மாதிரி ரெண்டு கல்லுகளும் இறுக்கமா புடிச்சிக்கிட்டு நிக்குது. கீழ விழாதா?”
நான் புன்னகைத்தபடி, “விழவே விழாது. பல நூற்றாண்டுகளா இதே கோலத்துலதான் இந்த ரெண்டு கல்லு களும் நிக்குது. இந்தக் கல்லை அக்கா, தங்கச்சி கல்லுன்னு சொல்வாங்க” என்றேன்.
அந்தப் படத்தை வெவ்வேறு கோணத்தில் திருப்பித் திருப்பிப் பார்த்த நரசிங்கராவ், “கல்லுலகூட அக்கா, தங்கச்சி இருக்குதா சார்?” என்று சற்றே கேலியுடன் கேட்டார்.
“இதைப் பத்தி ஒரு நாட்டுப்புறக் கதையே இருக்குது. எல்லாரும் ஹம்பி ஹம்பின்னு பெருமையா பேசறாங்களே, அப்படி என்னதான் அந்த ஊருல இருக்குதுன்னு பார்க்கறதுக்காக, ஒருநாள் வெளியூருலேருந்து அக்கா, தங்கச்சிங்க ரெண்டு பேரு வந்தாங் களாம். அவங்களுக்கு ஹம்பியைச் சுத்தமா பிடிக்கலை.
இது என்ன ஊரு? கல்லைத் தவிர வேற என்ன இருக்குது இங்கன்னு சலிப்போடு பேசிக்கிட்டே போனாங்களாம். அவங்க பேச்சு ஹம்பியைக் காவல் காக்கிற தேவதையுடைய காதுல விழுந்திடுச்சு. உடனே கோபத்துல ரெண்டு பேரையும் கல்லாப் போங்கன்னு சாபம் கொடுத் திடுச்சி. அதுதான் இந்தக் கல்லுக்கு அக்கா, தங்கச்சி கல்லுன்னு பேரு வந்த கதை.”
“கதை பொருத்தமாதான் இருக்குது. ஆனா, கதையெல்லாம் உண்மையா இருக்கணும்னு அவசியமா என்ன?” என்று நரசிங்கராவ் மீண்டும் ஏளனமாகச் சிரித்தார். அதற்குப் பிறகு அந்தப் பேச்சு தொடரவில்லை.
அக்கா, தங்கை மரம்: ஒரு வாரம் கழித்து அலுவலகம் சென்றேன். அலுவலகம் முடிகிற நேரத்தில் முனியப்பா வந்தார். “அன்னைக்கு நீங்க சொன்ன அக்கா, தங்கச்சிக் கல்லு கதை மாதிரி எங்க ஊருலயும் ஒரு கதை இருக்குது சார்” என்றார்.
நான் அவரை ஆவலுடன் பார்த்தேன்.
“ஆனா, கல்லு கிடையாது. அதுக்குப் பதிலா மரம். அக்கா, தங்கச்சி மரம்.”
என் உடல் ஒரு கணம் பொங்கி அடங்கியது.
“அப்படி ஒரு மரம் இருக்குதா? என்னை அழைச்சிட்டுப் போங்க முனியப்பா. நான் பார்க்கணும்.”
“கோலார்ல எங்க ஊருலயே இருக்குது சார்.”
“அதனால என்ன? ஒருநாள் ரெண்டு பேருமே போயிட்டு வரலாம்.”
ஒரு வாரம் கழித்துப் புறப்படலாம் என்று திட்டமிட்டாலும் ஒரு மாதத்துக் குப் பிறகுதான் அந்தப் பயணம் சாத்தியமானது. கோலார் வரைக்கும் ரயிலில் சென்று, அங்கிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் அவருடைய கிராமத்துக்குச் சென்றோம். முனியப்பா ஏரிக்கரைப் பக்கம் அழைத்துச் சென்றார்.
வெகு தொலைவு நடந்த பிறகு கரையைவிட்டு இறங்கி, பள்ள மான இடத்தை நோக்கி நடந்தார். ஆள்நடமாட்டமே இல்லாத அதன் அமைதியான தோற்றத்தைப் பார்த்ததுமே அந்த இடம் இடுகாடு என்பதைப் புரிந்துகொண்டேன்.
அவர் இரண்டு தென்னை மரங்களுக்கு நடுவில் நின்று கைகாட்டியபடி, “இதுதான் சார் அக்கா, தங்கச்சி மரம்” என்றார். நான் அவற்றை வெகுநேரம் அண்ணாந்து பார்த்தேன்.
“எங்க அப்பா இந்தக் கதையைப் பல முறை சொல்லியிருக்காரு சார். எல்லார் வீடுகள்லயும் பித்தளைப் பாத்திரங் களை மட்டுமே பயன்படுத்திட்டிருந்த காலத்துல நடந்த கதை. அப்ப வருஷத்துக்கு ஒரு தரமோ ரெண்டு தரமோ ஈயம் பூசறவரு ஒருத்தரு இந்தப் பக்கமா வந்து, ஏரிக்கரை ஓரமா குடிசை போட்டு ரெண்டு, மூணு வாரம் தங்கி ஈயம் பூசுவாரு.
ஒரு தரம் அப்படி ஒரு குடும்பம் இங்க வந்து தங்கியிருந்திச்சி. அந்தக் குடும்பத்துல சின்ன பெண் குழந்தைங்க ரெண்டு பேரு இருந்தாங்க. அக்காவுக்கு எட்டு வயசு. தங்கைக்கு ஆறு வயசு. அதுங்களுக்குத் துணையா ஒரு நாய்க்குட்டி.
அக்கா, தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் அந்த நாய்க்குட்டிய வச்சிக்கிட்டு விளையாடறதுதான் ஒரே பொழுதுபோக்கு. அப்பாவும் அம்மா வும் இன்னொரு பக்கம் ஈயம் பூசற வேலையைப் பார்ப்பாங்க.”
நான் இமைக்கவும் மறந்து முனியப்பாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“விளையாட்டு உற்சாகத்துல ரெண்டு பசங்களும் ஏரிப் பக்கமா போய், நாய்க்குட்டியைக் குளுப்பாட்டிக் கிட்டே தைதைன்னு சந்தோஷமா ஆடினாங்க. திடீர்னு நாய்க்குட்டி அவங்க பிடியிலிருந்து திமிறிக்கிட்டுப் போயிடுச்சி. நாயைப் பிடிக்கறதுக்குப் போன பசங்க ஏதோ வேகத்துல ஏரி ஆழமா இருக்கிற பக்கமா போயிட்டாங்க.”
“ஐயையோ, அப்புறம்?”
“தண்ணி பக்கமா போன புள்ளைங்க கரைக்கு வரலைங்கறதைப் புரிஞ்சிகிட்ட நாய்க்குட்டி நிறுத்தாம குரைச்சிக்கிட்டே இருந்திச்சி. சத்தம் கேட்டு பக்கத்துல துணி துவைச்சிக்கிட்டிருந்த ஜனங்க ஓடியாந்து பார்த்திருக்காங்க.
அதுக் குள்ள ஈயம் பூசற ஆளும் வந்துட்டாரு. ஐயோ புள்ளைய காணமேன்னு அவர் சத்தம் போட்ட பிறகுதான் எல்லாருக்கும் உண்மை புரிஞ்சிது. நீச்சல் தெரிஞ்ச நாலஞ்சி பேரு ஏரில குதிச்சி தேடிக் கடைசியில பொணமாதான் தூக்கிட்டு வந்தாங்க” என்றபடி பெருமூச்சு விட்டார் முனியப்பா.
அதிர்ச்சியில் என்னால் பேசவே முடியவில்லை.
“ஊரே சேர்ந்து அந்தப் புள்ளைங்களை இடுகாட்டுக்குக் கொண்டுவந்து அடக்கம் செஞ்சிட் டாங்க. குழந்தைங்களை அடக்கம் செஞ்ச இடத்துல ரெண்டு தென்னங் கன்னுங்களைக் கொண்டுவந்து நட்டுக் காலம் பூரா நாம இதைக் காப்பாத் தணும்னு சொல்லி வளர்த்தாங்களாம்.”
ஒரு கணம் மரங்களை அண்ணாந்து பார்த்தேன். ஹம்பியில் பார்த்த அக்கா, தங்கச்சிக் கல்லின் தோற்றம் என் மனதில் எழுந்து மறைந்தது.
“அந்தப் புள்ளைங்களை உயிரில் லாத உடலா பார்த்ததிலிருந்து அந்த நாய்க்குட்டி ஒருவாய் சோறுகூடச் சாப்பிடலை. பத்துநாள் பட்டினி கெடந்து அதுவும் இங்கயே உயிர விட்டுடுச்சி. ஊர்க்காரங்க, அந்த நாய்க்குட்டியையும் அந்தப் புள்ளைங்களுக்கு எதிரிலேயே புதைச்சிட்டு ஒரு நாரத்தையைக் கொண்டுவந்து நட்டுட்டாங்க.”
ஊருக்குத் திரும்பி வரும் பயணத்தின்போது, முனியப்பா விவரித்த தகவல்களை எல்லாம் மீண்டும் மீண்டும் அசைபோட்டபடி வந்தேன். அக்கா, தங்கை, நாய்க்குட்டி என மூன்று உயிர்த்தியாகங்களுக்குப் பின்னால் இருக்கும் தூய அன்பை நினைக்க நினைக்க மனம் நெகிழ்ந்தபடி இருந்தது.
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)
- writerpaavannan2015@gmail.com