

ஒரு சிற்றூரில் வங்கி வேலையில் சேர்ந்திருந்த புதிது.
அலுவலகப் பணிக்காக வெளியே சென்றிருந்த ஆறுமுகம், “ஊரே அல்லோலகல்லோலப்படுது. பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிக்கு வருவாய் கோட்ட அதிகாரி ஜீப்பில் படையோடு வந்திறங்கி இருக்கிறார். வார்டன் எங்கே என்று கேட்டிருக்கிறார், மாணவர்களையும் சமையல் செய்யும் பெண்ணையும் அழைத்து விசாரணை நடத்திவிட்டு, வார்டனைப் பணி இடைநீக்கம் செய்து அறிவிப்பை ஒட்டி வைத்திருக்கிறார்.
அவரே மாணவர்களை அழைத்துக்கொண்டு கடைவீதிக்குச் சென்று மளிகை, காய்கறிகள், முட்டை எல்லாம் வாங்கிக் கொண்டுவந்து சமைக்கச் சொல்லியிருக்கிறார். சமையல் முடிந்ததும் மாணவர்களோடு அவரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு, ‘புதிய வார்டன் விரைவில் வருவார், நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போயிருக்கிறார்” என்றார்.
எனக்கு நிம்மதியாக இருந்தது.
மாலை நேரத்தில் சிறுவர்கள் பள்ளிப் பாடங்கள் தொடர்பாக என்னோடு நேரம் செலவிடுவது வழக்கம். பாடங்கள், கதைகள், பாடல்கள் என்று சுவாரசியமான வகுப்பறையாக மாறிக்கொண்டிருந்தது வீடு.
அப்படியான ஒரு நாளில் உள்ளூர் விடுதியில் தங்கிப் படிக்கும் இரண்டு மாணவர்கள் கவலையுடன் இருந்ததைக் கண்டேன். காரணம் கேட்டேன்.
“வார்டன் விடுதிக்கு ஒழுங்காக வருவதில்லை, சமையலுக்கான பொருள்கள் இருப்பில் இல்லை. சமையல்கார ஆயாதான் தன்னால் முடிந்தவரை ஏதோ வாங்கி, சமைத்துப் போட்டுக்கொண்டிருந்தார். இப்போ அவரிடமும் காசில்லை. ஒழுங்காகச் சாப்பிட்டு மூன்று நாளாகிறது” என்று மாணவர்களில் ஒருவர் சொன்னார்.
அந்த மாணவர்களிடம் அருகே உள்ள நகரத் திற்குச் சென்று மாவட்ட ஆட்சியருக்குத் தந்தி கொடுக்குமாறு வாசகங்களும் எழுதி, வழிச்செலவுக்கும் கொடுத்து, யாரிடமும் சொல்லக் கூடாது என்று அனுப்பி வைத்தேன். தந்தி சென்ற வேகத்தில் அதிகாரிகள் பறந்துவந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பிள்ளைகளுக்குச் சோறு போட்டுவிட்டுச் சென்றது எனக்கு நிம்மதியாக இருந்தது.
அன்று மாலை வழக்கம்போல் பாடம் படிக்க வீட்டுக்கு வந்த அந்த மாணவர்களைத் தனியே அழைத்து, என்ன நடந்தது என்று கேட்டேன். எல்லாம் சொல்லி முடித்த பின், “அந்த அதிகாரி, ‘யாரு தம்பி உனக்கு இந்தத் தந்தி வாசகம் எழுதிக் கொடுத்து, எங்களுக்கு அனுப்பச் சொன்னது’ என்று எவ்வளவோ கேட்டுப் பார்த்தார். நானாகத்தான் எழுதினேன் என்று சொல்லிவிட்டேன்” என்றார்!