

பொதுவாகப் பயணங்களின் முடிவில் சோர்வும் களைப்புமாக இருக்கும். ஆனால், எனக்குப் புத்துணர்வையும் தன்னம்பிக்கையையும் தந்தது அந்தப் பயணம். அதன் மூலம் நடைப்பயணம், மலையேற்றத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டேன்.
மேற்கு மலைத் தொடரில் அமைந்த ஒரு சிகரம் தேடியந்தமால். அது தென்னிந்தியாவின் உயர மான சிகரங்களில் ஒன்றும்கூட. எழில் ததும்பும் தேடியந்தமால் மலை முகடு கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஒரு மழைக்காலத்தின் காலைப் பொழுதில், தங்கப் போகும் இடத்தை அடைந்துவிட்டோம். நாங்கள் பதினைந்து பேர் குழுவாகப் பயணித் தோம். அனைவருக்குமாக ஒரு வண்டி தயாராக நின்றது. அதில் ஏறி மலையேற்றம் தொடங்கும் இடத்திற்குப் புறப்பட்டோம்.
தூவானமாக விழத் தொடங்கியது மழை. காலைக் கதிரவனின் ஒளிக்கீற்றுகளுக்கிடையே வந்து விழுந்த அந்த மென் துளிகள் இதமாக இருந்தன. இரண்டு புறமும் மரங்கள் நிரம்பிய சாலையில் நிதானமாகச் சென்றது வண்டி.
இருபது நிமிடங்களில் நடைப்பயணம் ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம். சலசலப்பும் கேலியும் சிரிப்பும் நிரம்பிய கும்பலில் ஒருத்தியாகப் பயணிப்பது பிடித்திருந்தது. புதிதாகவும் இருந்தது.
வண்டியில் இருந்து இறங்கி, ஒருவர் மற்ற வரைப் பற்றி விசாரித்தபடி நடக்க ஆரம்பித்தோம். காட்டுக்குள் அமைந்த அந்தப் பாதை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருந்தது.
அந்தப் பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் பைகளுக்குத் தடைவிதித்து இருந்தார் கள். எனவே எங்கும் மாசிலா இயற்கையே காணக் கிடைத்தது. தரையில் பாதாமின் வடிவையொத்த, ஆனால், உருவத்தில் பெரிதான கொட்டைகள் கிடந்தன. அவற்றின் மேற்பகுதி மேடு பள்ளமாக ஒழுங்கற்ற வரிகளுடன் வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது. அது இருமுக ருத்ராட்ச கொட்டை எனப் பின்னர் தெரியவந்தது.
சிறிது தூரம் கடந்த பிறகு குழுவில் ஒருவரின் காலில் இருந்து ரத்தம் வடிந்தது. அட்டைப் பூச்சிகள். ஒட்டியிருந்த அட்டைப்பூச்சியை வலுக் கட்டாயமாக இழுத்து எறிந்துவிட்டு இயல்பாக நடக்க ஆரம்பித்தார் அவர். வாழ்க்கையிலும் சில நேரம் இப்படித்தான் தடைகளை இழுத்து எறிந்து விட்டு முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கிறது.
வழி நெடுகச் சிற்றோடைகள் தென்பட்டன. சில எளிதாகத் தாண்டிச் செல்லக் கூடியவையாக இருந்தன. இரண்டு ஓடைகளைத் தண்ணீருக்குள் நடந்துதான் கடந்து செல்ல வேண்டியிருந்தது. நீர்மட்டம் கால் முட்டியின் உயரத்திற்கு குறைவாகவே இருந்தது. ஓடையில் இருந்து வெளியேறியதும், உடையும் போட்டிருந்த ஷூவும் கனத்தன.
சிறிது தூரம் செல்வதற்குள் ஈரம் காய்ந்து, நடப்பதற்கு எளிதாக மாறியது. ஆனால், மழை பலமாகப் பெய்ய ஆரம்பித்தது. சில இடங்களில் மேலிருந்து ஓடையாகக் கல்லை, மண்ணை வாரி இழுத்துக்கொண்டு கீழ் வரும் கலங்கிய நீரைப் பார்க்கச் சிறிது பயமாகத்தான் இருந்தது.
சிறிது தூரம் நடந்த பின் அந்த அழகுக் காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அடர்த்தியாக வளர்ந்திருந்த செடிகளின் மேலே ஊதாப் பூக்கள் எங்கும் பரவிக் கிடந்தன. சுமார் மூன்று அடி உயரம் வளர்ந்திருந்த அந்தச் செடிகளுக்கிடையே இருந்த ஒற்றையடிப் பாதையில் நடப்பதே சுகமான அனுபவமாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஊதாப் பூந்தோட்டம்தான்!
மீண்டும் மேலே ஏறிச் சென்றோம். கையும் காலும் குளிரில் நடுங்கின. மலை உச்சிக்கு அருகில் செல்லும்போது எங்கும் மேகக் கூட்டமே நிறைந்திருந்தது. எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.
தேடியந்தமால் சிகரத்தின் உச்சியை அடைந்த அந்த நொடி, அது தந்த பரவசம். மிரட்சியுடன் கூடிய ஆனந்தம்… ஆஹா... அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. பயணங்களில் குறிப்பாக மலையின் உச்சியை அடையும்போது இது போன்ற ஒரு பரவச உணர்வு கிடைக்கிறது. ஏதோ சாதித்தது போன்ற மகிழ்ச்சி. மலைமுகட்டின் மறுபக்கம் இருந்த பள்ளத்தாக்கு மேகங்களால் நிறைந்து கிடந்தது. அதைப் பார்க்கும்போது மனமும் நிறைந்தது.
குளிர் காற்றின் ஸ்பரிசத்தை அனுபவித்தபடி, மேகங்களின் கையைப் பற்றிக்கொண்டு, ஊதா பூக்களோடு அளவளாவி இயற்கையைத் தரிசித்த கணங்கள் இன்றும் மனத்தை நிறைத்திருக்கின்றன.
மலையேற்றம், நடைப்பயணம் போன்றவை உடல் நலத்திற்கு எவ்வளவு தூரம் உதவி செய்கின் றனவோ, அதே அளவுக்கு மன நலத்திற்கும் உதவி செய்கின்றன. இயற்கையுடன் பயணித்தால், நம் மனமும் அதன் அலைவரிசைக்கு இசைவாகி அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் மாறிவிடுகிறது. எடுத்துக்கொண்ட பயணத்தை வெற்றிகரமாக முடிப்பதன் மூலம் நமக்குத் தன்னம்பிக்கை கிடைக்கிறது.
அதுவே, வருகின்ற சவால்களை எதிர்கொள்ளவும் எடுத்துக்கொண்ட காரியங்களைத் தொய்வில்லாமல் முடிக்கவும் உந்துதலாக அமைகிறது. மேலும் ஒத்த அலை வரிசை உடைய நட்புகளையும் பெறமுடிகிறது. ஆகவேதான் மாதம் ஒரு முறை மலையேற்றம் செய்வது மிகவும் உகந்தது என்கிறார்கள். தேடியந்தமால் ஒரு தெவிட்டாத பொழில்!
- sahilajancy@gmail.com