

கல்லூரித் தேர்வு முடிந்து, பகல் நேர விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தேன். தேர்வு முடிந்த மகிழ்ச்சியும் ஊருக்குச் செல்கிற பரவசமும் என்னைச் சுற்றி நடந்த விஷயங்களை ரசிக்க வைத்துக்கொண்டிருந்தன.
விழுப்புரம் சந்திப்பில் இரண்டு மாம்பழக் கூடைகளுடன் ஒருவர் ஏறினார். என் அருகே ஒரு பழக்கூடையை வைத்துவிட்டு, “தம்பி, பத்திரமா பார்த்துக்க. நான் இந்தக் கூடையை வித்துட்டு வரேன்” என்று என்னிடம் சொல்லிவிட்டு, “மாம்பழம்... மாம்பழம்...” எனக் கூவிக்கொண்டே சென்றுவிட்டார்.
ரயில் புறப்பட்டுச் சிறிது நேரத்தில் ஒருவர் பெட்டியின் நடுவே நின்றபடி, “ஐயா பாருங்க, காஷ்மீர் போர்வை. பெரிய ஜவுளிக் கடையில்கூடக் கிடைக்காது. காஷ்மீருக்கே போயி வாங்கி வந்த போர்வை. இதைக் கடையில் வாங்கினா முந்நூறு ரூபா. நான் ஐம்பது ரூபாயில ஆரம்பிக்கிறேன்...
கேக்குறவங்க கேக்கலாம். கேட்கிற அனைவருக்கும் ஒரு சோப்பு டப்பா இலவசம்” என ஆரம்பித்து ஒவ்வொருவர் மீதும் போர்வையைப் படரவிட்டபடி வந்தார். யாராவது ஆர்வத்துடன் பார்த்தால் உடனே அவரைப் பிடித்துக்கொள்வார். அவரை எப்படியாவது ஏலத்திற்குள் கொண்டு வந்துவிடுவார்.
நான் சும்மா அதைக் கையால் வருடித்தான் பார்த்தேன். உடனே, “பாத்தீங்களா, அதான் இளசுங்கிறது... உடனே நூறு ரூபாய்க்கு ஏலம் கேட்டார் பாருங்க” என்றதும் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. நான் சுதாரிப்பதற்குள் போர்வையைச் சுருட்டி என் மீது எறிந்து, “நூறு ரூபாய் எடுப்பா” என்றதும் எனக்குப் பயத்தில் வயிறே கலங்கிவிட்டது. நான் கேள்வியே கேட்கவில்லை என எவ்வளவு சொல்லியும், எடுடா ரூபாயை என மிரட்ட ஆரம்பித்துவிட்டார். எனக்குப் பரிந்து பேச யாருமில்லை.
திடீரென்று என் அருகே இருந்த மாம்பழக் கூடையைப் பார்த்து, “தம்பி, ஊருக்கு மாம்பழம் வாங்கிட்டுப் போறீயா? பணத்துக்குப் பதில் இந்தப் பழக்கூடையை எடுத்துக்கறேன்” என்று சொல்லிக்கொண்டே, கூடையை எடுத்துக்கொண்டு அடுத்த நிலையத்தில் இறங்கிவிட்டார். நான் என்னு டைய கூடை அல்ல என்று பல முறை சொல்லியும் அவர் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.
அடுத்த நிலையத்தில் மாம்பழ வியாபாரி வந்து கூடையைத் தேடினார். அவரிடம் நானே நடந்த விஷயங்களைச் சொல்லிவிட்டேன். “என்ன, கிண்டல் பண்றீயா? ஒழுங்கா காசைக் கொடு” எனச் சண்டை போட ஆரம்பித்தார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சட்டையில் இருந்த நூற்றைம்பது ரூபாயை எடுத்துக்கொண்டார்.
என் சூட்கேஸைத் திறந்து துணிகளைக் கீழே கொட்டிவிட்டு, சூட்கேஸுடன் அடுத்த நிலையத்தில் இறங்கிவிட்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளவே இயலவில்லை. பசிக்கு டீ வாங்கிக் குடிக்கக்கூடக் காசில்லை. கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கி, என் பெரியம்மா மகனிடம் நடந்தவற்றைச் சொல்லி, ஊருக்குச் செல்வதற்குப் பணம் வாங்கிக்கொண்டு சென்றேன்.
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் ஒரு தனியார் பேருந்தில் பயணம். மதிய வெயிலில் வியர்வை ஊற்றெடுக்க ஜன்னலோர இருக்கை. அருகே ஒரு பெரியவர். திடீரென்று பேருந்துக்குள் ஓர் அலறல். ஒரு பெண் தனது பர்ஸைக் காணவில்லை என்று கதறினார். பேருந்தை நிறுத்தச் சொன்னார். சிறிது நேரத்திற்கு முன்கூடக் கையில் வைத்திருந் ததாகவும் தூக்கத்தில் கை நழுவிவிட்டது என்றும் சொன்னார்.
ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி ஒவ்வொருவராகச் சோதனையிடலாம் எனச் சொன்னதற்கு, “யாரோ ஒருவர் திருட அனைவரையும் திருடன் மாதிரி சோதனையிட ஒப்புக் கொள்ள மாட்டோம். முடிந்தால் காவல் நிலையத்துக்கு வண்டியைக் கொண்டு செல்லுங்கள். காவலர்கள் சோதனை செய்யட்டும்” என்கிற என் குரலுக்கு ஆதரவாகப் பல குரல்கள் கேட்டாலும் பேருந்து தாமதமாகும் எனச் சில குரல்களும் வந்தன.
நடத்துநர் பணம் எவ்வளவு வைத்திருந்தீர்கள் என்று கேட்க, ஐநூறு ரூபாய் என்று அந்தப் பெண் சொன்னார். உடனே பயணிகள், தாங்களே அந்தப் பணத்தைக் கொடுத்துவிடுகிறோம், தாமதமின்றிப் பேருந்து செல்லட்டும் என்று சொல்லிவிட்டார்கள். எல்லாரும் சேர்ந்து அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டோம்.
பேருந்தில் இருந்து இறங்கியதும் என் அருகில் அமர்ந்திருந்த பெரியவர், என் கைகளைப் பிடித்த படி அழுதார். காரணம் புரியாமல் விழித்தேன். “தம்பி, உன் அருகில்தான் அந்த பர்ஸ் விழுந்தது. நீ உறக்கத்தில் இருந்தாய். ஏதோ ஒரு நொடி சஞ்சலத்தில் நான் அதை எடுத்துவிட்டேன்.
நல்ல வேளை... நீ கொடுத்த குரலால் நான் காப்பாற்றப்பட்டேன். ஒருவர் செய்த தவறுக்கு அனைவரையும் சந்தேகப்படக் கூடாது என்று நீ சொன்னது என்னை மிகவும் பாதித்துவிட்டது. இப்போதே கோயில் உண்டியலில் பணத்தைச் சேர்த்துவிடுகிறேன்” என்று கண்ணீர் மல்கினார். மனித மனங்களின் விசித்திரத்தை எண்ணிச் சிலையாக நின்றேன்.
- maharajanswaminathan@gmail.com