வண்ணக் கிளிஞ்சல்கள் 03: நானும் ஒரு துங்கபத்திரை
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஹொசபேட்டெ, கொப்பல ஆகிய இரண்டு நகரங்களையும் கேபிள் வழியாக இணைக்கும் திட்டத்தில் நான் உள்பட மூன்று இளநிலைப் பொறியாளர்கள் பணிபுரிந்தோம். டெக்னீஷியன்கள், ஜாய்ன்ட்டர்கள், லைன்மேன்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என அனைவரும் சேர்ந்து துங்கபத்திரை நதிக்கரையோரத்தில் கூடாரம் அடித்துத் தங்கியிருந்தோம்.
அந்த முகாமில் எங்களுக்கு இருந்த ஒரே பிரச்சினை சாப்பாடு மட்டுமே. ஒருநாள் எங்கள் கேபிள் ஜாய்ன்ட்டர் மனோகரன் ஒரு பெண்மணியை அழைத்துவந்தார். “கெம்பம்மான்னு பேரு சார். ரெண்டு வேளையும் வந்து சமைச்சுக் குடுத்துட்டுப் போறேன்றாங்க” என்றார் மனோகரன்.
ஒரு பெண்மணியைச் சமையல் வேலைக்கு வைப்பது தொடர்பாக அன்று இரவு முகாமில் விவாதிக்கப்பட்டு, பிறகு ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. மறுநாள் மனோகரனே கெம்பம்மாவிடம் முடிவைத் தெரிவித்துவிட்டு, சமைய லுக்குத் தேவையான பாத்திரங்களையும் பொருள்களையும் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்.
அன்று மாலையே கெம்பம்மாவும் முகாமுக்கு வந்து சமைய லைத் தொடங்கிவிட்டார். சப்பாத்தி, கூட்டு, பொரியல், சோறு, குழம்பு, ரசம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைவரும் வயிறாரச் சாப்பிட்டோம்.
கெம்பம்மாவின் வாழ்க்கை: ஓரிரு வாரங்களுக்குப் பிறகுதான் கெம்பம்மாவைப் பற்றிய முழுத் தகவல் களையும் தெரிந்துகொண்டு வந்து சொன் னார் மனோகரன். அவருக்கு மூன்று பிள்ளைகள். கணவன் ராஜண்ணா. நல்லவர். படித்தவர். அறிவாளி.
ஆனால், குடும்பத்தில் எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர். சித்தம் போக்கு, சிவன் போக்குதான் அவர் சுபாவம். எப்போதும் யாருடனாவது சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என நினைத்துக்கொண்டேன்.
கட்டணம்: ஒருநாள் காலை சமைக்க வந்தபோது கெம்பம்மாவின் முகம் வாடியிருந்தது. “என்ன விஷயம்?” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.
“ஸ்கூல்ல மூணு பிள்ளைகளுக்கும் பீஸ் கட்டலை சார். இன்னும் ரெண்டு நாள்ல ஆயிரம் ரூபா கட்டணும்னு லெட்டர் குடுத்திருக்காங்க. ஒரு மாசத்துக்கும் மேல ஆகுது. ஊரைவிட்டுப் போனவரு இன்னும் வரலை. எப்படிப் பணத்தைப் பொரட்டறதுன்னு தெரியலை. ஒவ்வொரு நாளும் இந்த ஆத்த கடந்து போகும்போது, ஆத்துலயே உழுந்து செத்துடலாம்னு தோணுது. இந்தப் பச்சை புள்ளைங்கள நெனச்சிட்டுதான் உயிரோடு இருக்கேன்.”
அவர் அழுகை நெஞ்சைப் பிசைவ தாக இருந்தது. “அழாதீங்கம்மா. எங்க ஆளுங்க வரட்டும். ஏதாவது செய்ய முடியுமான்னு கேட்டுட்டுச் சொல்றேன்” என்று ஆறுதலாகப் பேசி அனுப்பி வைத்தேன்.
அன்று இரவு உணவுக்குப் பிறகு கெம்பம்மாவின் பணத் தேவையைப் பற்றிப் பேசி, ஆளுக்குக் கொஞ்சம் தொகை போட்டு ஆயிரம் ரூபாயைத் தயார் செய்தோம். மறுநாள் காலையில் மனோகரன் அத்தொகையை அவரிடம் சேர்த்துவிட்டு வந்தார்.
ராஜண்ணாவின் வருகை: ஒருநாள் கெம்பம்மாவோடு நல்ல உடற்கட்டோடு, உயரமான ஒரு மனிதரும் வந்தார். பார்ப்பதற்கு வங்கி ஊழியரைப் போல இருந்தார். அவருடைய கைவிரலைப் பிடித்தபடி வந்த இளைய பிள்ளை, “எங்க அப்பா சார்” என்று அறிமுகப்படுத்தினான்.
கெம்பம்மா வேகமாகச் சமையல் கூடாரத்துக்குச் சென்றுவிட்டார். கெம்பம்மா கொடுத்திருந்த குறிப்பு களுக்கும் அந்த மனிதரின் தோற்றத் துக்கும் துளிகூடத் தொடர்பே இல்லாமல் இருந்தது. ஒரு கணம் தடுமாறிவிட்டேன். பிறகு அவருக்கு வணக்கம் சொன்னேன்.
அடுத்தடுத்து இரண்டு நாள்களும் கெம்பம்மாவோடு ராஜண்ணாவும் பிள்ளைகளும் வந்தனர். அவர் வராத நாளில் கெம்பம்மாவிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன்.
“நல்லா பேசுவாரு. நல்லா பழகுவாரு. அதுல ஒரு கொறையும் கிடையாது சார். ஆனா, உடம்பு வளையாதவரு. வாழ்க்கையில சம்பாதிக்கவே கூடாதுன்னு முட்டாள்தனமான லட்சியம் அவருக்கு. அந்த மாதிரியான ஆளுங்க எதுக்கு சார் குடும்பம்னு ஒண்ண உண்டாக்கிக்கணும்?” என்று கண்ணீர் விட்டார்.
ஆற்றின் அழகு: அடுத்த நாள் ராஜண்ணா வந்தார். அன்று துங்கபத்திரை அணைக்கட்டைப் பற்றி ஏராளமான தகவல்களைச் சொன்னார். புறப்படும்போது என் பக்கம் திரும்பி, “இன்னைக்குப் பெளர்ணமி சார். நிலா வெளிச்சத்துல துங்கபத்திரையைப் பக்கத்துல பார்க்கறது ரொம்ப அழகா இருக்கும். பார்க்கலாமா? பத்து மணிக்குத் தயாரா இருங்க. நான் வந்து அழைச்சிட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.
சொன்னது போலவே சரியாகப் பத்து மணிக்கு வந்துவிட்டார். அவருடைய கையில் மீன் பிடிக்கும் தூண்டில் இருந்தது.
“இது எதுக்கு?” என்று குழப்பத்துடன் கேட்டேன்.
“ராத்திரி நேரத்துல பேசிக்கிட்டே மீன் பிடிக்கிறது எனக்கு ரொம்பப் புடிக்கும் சார்.”
இரண்டு பேரும் பேசிக்கொண்டே துங்கபத்திரையை நோக்கி நடந்தோம்.
கரையோரமாக உட்கார்வதற்கு வசதியாக ஒரு பாறையைத் தேர்ந் தெடுத்தார் ராஜண்ணா. பிறகு தூண்டிலைத் தண்ணீருக்குள் வீசினார். நான் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன்.
நான் சொல்ல நினைத்ததைத் தெரி விக்க அதுதான் சரியான நேரமென்று தோன்றியது. “எல்லாம் சரிதான் சார். இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி ஊரூரா போயிட்டே இருப்பீங்க? நல்லதா ஒரு வேலையைத் தேடிக்கிட்டு குடும்பத்த காப்பாத்த வேணாமா?” என்று எப்படியோ தொடங்கிவிட்டேன்.
துங்கபத்திரை: ராஜண்ணா என்னைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, தூண்டிலையே கணநேரம் பார்த்தார். பிறகு புன்னகையோடு என் பக்கமாகத் திரும்பினார். “வேலை செய்யறது, சம்பாதிக்கறது, சேர்த்து வைக்கறது, காப்பாத்தறதுங்கற வேலை யில உழலக்கூடிய பிறவி இல்லை சார் நான். அப்படி என்னால வாழவே முடியாது. நான் சுதந்திரமான பிறவி. எனக்கு எப்படித் தோணுதோ அப்படி இருக்கறதுதான் எனக்குப் புடிக்குது” என்றார்.
பிறகு குனிந்து துங்கபத்திரையி லிருந்து ஒரு கை தண்ணீரை அள்ளி மீண்டும் ஆற்றில் விட்டார். “அதோ, அந்த அணைக்கட்டைப் பாருங்க” என்றபடி எனக்கு அணைக்கட்டு இருக்கும் திசையைச் சுட்டிக்காட்டினார். நான் தண்ணீர் பொங்கி வழியும் அணைக்கட்டின் பக்கம் திரும்பினேன்.
“அணைக்கட்டுக்கு அந்தப் பக்கமா இருக்கற துங்கபத்திரை வேற. இந்தப் பக்கமா இருக்கற துங்கபத்திரை வேற. அந்தத் துங்கபத்திரை அடங்கி ஒடுங்கி, நாம எதிர்காலத்துக்காகச் சேர்த்துவைக்கப்பட்ட பணம்ங்கற எண்ணத்தோடு இருக்குது. ஆனா, இந்தத் துங்கபத்திரைக்கு எந்தக் கவலையும் இல்லை. கடைசித் துளி வரைக்கும் சுதந்திரமா ஓடறது மட்டுமே அதுக்குத் தெரிந்த ஒரே கலை. கேட்கறீங்களா சார்?”
புன்னகை செய்தேன்.
“நான் இந்தப் பக்கமா இருக்கற துங்கபத்திரை சார். என்னால எப்படி இடத்தை மாத்திக்க முடியும்?”
(கிளிஞ்சல்களைச் சேமிப்போம்)
- writerpaavannan2015@gmail.com
